PAGE 1
புங்குடுதீவு எங்கள் வித்தியாலயம் த. துரைசிங்கம்
PAGE 3
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயம் 2 எங்கள் வித்தியாலயம் நல்வரவு (75 ஆண்டு நிறைவை எதிர்நோக்கி நிற்கும் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் பவளவிழா முன்னோட்டமாக இச்சிறு நூல் வெளியிடப் பெறுகிறது)

PAGE 4
வித்தியாலய கீதம்
வாழி கணேச மகாவித்தியாலயம் வையகம் போற்றிட என்றும் -வாழி ஈழ மணித் திருநாட்டினில் நாவலர் ஏற்றிய சைவ நற்றீபம் – என்றும் வாழ வழி செய்த பொன் ராம நாத வள்ளலார் ஊக்கிய கழகம்
ஏழ் பெரும் தீவகம் ஏத்திட நற்பணி இயற்றிய பசுபதிப்பிள்ளை – சைவச் சூழலில் மாணவர் கல்வி தொடர்ந்திடத் தொடக்கிய கணேச கல்லூரி
மகா வித்தியாலய மாக மலர்ந்தது மாபெருங் கணேச கல்லூரி [வாழி]
அகம்மிக மகிழ்ந்தனம் அன்புடன் அறம்மிக அன்னையைப் போற்றுவம் என்றும் – எங்கள் அன்னையைப் போற்றுவம் நன்றே.
வெல்லுக! வெல்லுக! கணேச வித்தியாலயம் வித்தைகள் ஓங்கியே என்றும் ‘நல்லவர் வல்லவர்’ தம்மையே ஆக்கியே நாடொறும் இலங்குக நன்றே.
வாழி கணேச மகாவித்தியாலயம் வரசித்தி விநாயகர் அருளால் வாழி கணேச மகாவித்தியாலயம் மாண்புடனே யுயர்ந் தென்றும்.
வாழ்க! வாழ்க! வாழ்க! வள இள ஞாயிறு போல வளருக ஊழி தோறூழி.
[ஆக்கம்: வித்துவான் சி. ஆறுமுகம்]
PAGE 5
அணிந்துரை
யா / புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தின் வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எங்கள் வித்தியாலயம் என்னும் நூல் வெளிவருவது குறித்துப் பெரு மகிழ்வடைகிறேன்.
அமரர் வ. பசுபதிப்பிள்ளை அவர்களது பெரு முயற்சியினால் 1910 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ் வித்தியாலயம் இந்நாட்டில் நிகழ்ந்த கல்வி மாற்றங்களுக்கமைந்த வகையில் தன்னாலான கல்விப்பணி, சமயப் பணிகளை ஆற்றியது மாத்திரமன்றி சகல துறைகளிலும் சிறப்புப் பெற்ற வித்தியாலயமாக வளர்ந்து வருவது பாராட்டுதற்குரியது.
நம்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் செயற்றிறனும் மிக்க சக்திவாய்ந்த இளம் சமூகத்தை உருவாக்கும் பணியில் இவ்வித்தியாலயம் தொடர்ந்தும் முன்னிற்குமென்பது எனது நம்பிக்கை.
பவள விழாவை எதிர்நோக்கி நிற்கும் இவ்வித்தியாலயத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இன்றைய இளம் சந்ததியினரும், எதிர்கால சந்ததியினரும் இவ்வித்தியாலயத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளவும், இதன் எழுச்சிக்குத் துணைபுரியவும் இந்நூல் பயன்படுமெனக் கருதுகிறேன்.
கணேச மகா வித்தியாலயம் பலதுறைகளிலும் மேன்மேலும் வளர்ச்சிபெற்று ஏனைய வித்தியாலயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டுமென உளமார விரும்புகிறேன்.
கல்விப் பணிமனை, யாழ்ப்பாணம். 01-10-1984
ம. சிமியாம்பிள்ளை கல்விப் பணிப்பாளர்
PAGE 6
என்னுரை
“கன்னலொடு செந்நெல்விளை பொன்னகர்” என வரகவி முத்துக்குமாருப் புலவரால் போற்றப் பெறும் புங்குடுதீவின் கலைக்கோயிலாக மிளிர்வது ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்.
75 ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் வ. பசுபதிப்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இக் கல்விக்கூடத்தின் வரலாற்றை இன்றைய இளம் சந்ததியினரும் எதிர்கால சந்ததியினரும் நன்குணரவேண்டுமென்னும் உந்துதலால் உருவானதே இந்நூல்.
பவள விழாவை (75 ஆம் ஆண்டு நிறைவை) எதிர்நோக்கி நிற்கும் இவ்வித்தியாலயத்தின் வரலாற்றைச் சித்திரிக்கும் முன்னோட்டமாக இச்சிறு நூலை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்வுறுகிறேன்.
இந்நூல் வெளிவருதற்குதவியோரனைவருக்கும் இவ்வேளையில் எனது நன்றி. குறிப்பாக, அணிந்துரை நல்கிய யாழ் – கல்விப்பணிப்பாளர் உயர் திரு. ம. சிமியாம்பிள்ளை அவர்களுக்கும், இந்நூலில் இடம்பெறும் கவிதைகளை நல்கிய கவிஞர் பெருமக்களுக்கும் என்னிதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இத்துறையில் என்னை ஈடுபடுத்தி ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் ஆசிரியமணி சி. க. நாகலிங்கம் அவர்களுக்கும் நண்பர்கள் திரு. சி. இரத்தினசபாபதி, திரு. பொ. சபாரெத்தினம் ஆகியோருக்கும் என்நன்றி.
“அயோத்தியா”, புங்குடுதீவு – 12 05-10-1984
த. துரைசிங்கம்
PAGE 7
எங்கள் வித்தியாலயம்
“வானுயர்ந்த நெடுமாடம் வளர்மதியை வழிமறிக்க தானுயர்ந்து காட்சிதரத் தண்டாமரைத் திருவும் கானுயர்ந்த மலர்விட்டுக் கடிமனையிற் போய்க்கிடக்கும் வானுயர்ந்த செல்வர்வாழ் கின்றவூர் புங்கைநகர்”
புங்கைநகரின் கலைக் கோவிலாகத் திகழ்வது ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம், நல்லைநகர் ஆறுமுகநாவலரது அடிச்சுவட்டைப் பின்பற்றி வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறைவிளங்க சேர் பொன் இராமநாத வள்ளலின் ஆசியுடன் 1910ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் மூன்றாம் நாளில் (3-3-1910) உதயமானது இக்கலைக் கூடம்.
சைவப் பிள்ளைகள் சைவச் சூழலில் சைவநெறிக்கமைய கல்வி பயில வேண்டுமென்னும் உன்னத இலட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நம் தீவகம் தந்த பெரியார் அமரர் வ. பசுபதிப்பிள்ளை அவர்களினால் உருவாக்கப்பட்டதே இக் கல்விக் கூடம்.
“கல்வி நல்வாய்ப்பு, அது மனித வளர்ச்சிக்கு வாய்ப்பு, மாற்றத்திற்கு வாய்ப்பு. பொருளாதார வளர்ச்சிக்கும் வளத்திற்கும் கல்வி துணை, ஏழை எளியவர்கள் தலையெடுத்து முன்னேறி நல்வாழ்வு வாழ கல்வியே வழி. எனவே கல்வி எங்கும் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்கும் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடவேண்டும்”1 என்னும் இலட்சிய நோக்குடன் கடந்த 75 ஆண்டுகளாக இக்கல்விக் கூடம் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியன.
கலைஞர்களையும், அறிஞர்களையும் ஆசிரியர்களையும், எழுத்தாளர்களையும் வைத்திய கலாநிதிகளையும், புகழ்மிக்க வர்த்தகர்களையும் உருவாக்கிய இக் கல்விக் கூடம் இன்று தன்னை நிறுவிய பெருந்தகையையும் தனது வளர்ச்சிக்கு உரமளித்த உத்தமர்களையும் ஒருகணம் நினைத்துப்பார்க்கிறது. பெருமைப்படுகிறது. நன்றி செலுத்துகிறது.
அன்று அந்நிய ஆட்சியில் பிறமதத் தாக்குதலுக்கு மத்தியில் தனிப்பட்ட பாடசாலை ஒன்றை ஆரம்பித்து நடத்துவதென்பது இலகுவான காரியமல்ல. 1910ஆம் ஆண்டளவில் ஒரு…
PAGE 8
சைவப் பாடசாலையை நிறுவுவதாயின் அதனை நிறுவ முற்படுபவர்கள் அனுபவிக்கவேண்டிய இன்னல்கள் பலப்பல. சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் செயலாளரும், சைவப் பெரியாருமான அமரர் சு. இராசரெத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள்ள பின்வரும் வார்த்கைகள் அக்கால நிலையை நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன.
“1910ஆம் ஆண்டளவில் ஒரு சைவப் பாடசாலை தாபிப்பதாயின், தாபிக்க வந்தவர்கள் படும்பாட்டைப் பற்றிக் காலஞ்சென்ற ஸ்ரீ அருணாசலம் அவர்களோடு சம்பாஷித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இலங்கையில் போர்த்துக்கீசர் ஆளத்தொடங்குமுன் 500 பாடசாலைகளிலும், மடங்களிலும் சைவக் கல்வி கற்பித்தல் நடாத்தப்பட்டு வந்தது. போர்த்துக் கீசர் இவற்றையெல்லாம் அழித்துவிடச் சைவ மக்கள் ஒன்றுஞ் செய்யமுடியாத நிலைமையரானார்கள்.
போர்த்துக்கீசருக்குப் பின் இலங்கையை ஆண்ட டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்) சைவப் பாடசாலைகளைத் தாபிக்க விடாமல் தடுத்து கிறிஸ்து மதப் பாடசாலைகளையே தங்களது கோவில்களுக்கருகாமையில் அமைத்து நடாத்தி வந்தனர்.
டச்சுக்காரர்களுக்குப் பின் ஆளவந்த பிரிட்டிசார், பேச்சளவில் ஒவ்வொரு மதத்தவரும் ஏதும் செய்யலாமென்று சொன்னாலும் “புரட்டஸ்ரண்டு” மதப் பாடசாலைகளுக்கே பணமும் மற்றும் உதவிகளும் செய்து வந்தார்கள்.
அப்படிச் செய்துவந்ததால் சைவமக்கள் நூற்றுக்கணக்கான பாடசாலைகளைத் தாபித்தும் பொருளுதவியும், ஆளுதவியுமில்லாமையால் சில சைவப் பாடசாலைகள் மூடப்பட்டன.
அக்காலத்தில் சைவர்கள் எல்லோரும் திரண்டு ஒரு சபையை உண்டாக்கி அரசாங்கத்தின் பாரபட்சத்தை நீக்க இயலாதபடியால் சைவ மக்கள் பட்ட கஷ்டம் சொல்லும் தரமல்ல”2
அத்தகைய ஒரு காலக்கட்டத்தில் புங்குடுதீவில் “புரட்டஸ்ரண்டு” மதப் பாடசாலைகள் எழுச்சி பெற்றிருந்த வேளை…
PAGE 9
எங்கள் வித்தியாலய தாபகர் அமரர் வ. பசுபதிப்பிள்ளை அவர்கள்

PAGE 11
யில் சைவப் பாடசாலை ஒன்றைத் தாபித்து நடத்துவதற்குத் திருவருள் கைகூடிற்று. குன்றாத மனஉறுதியும், குலையாத இலட்சிய வேட்கையும் கொண்ட அமரர் பசுபதிப்பிள்ளை அவர்கள் சைவப் பெருமக்கள் பலரது ஒத்துழைப்புடன் பெரியார் நீ அம்பலவாணர் (மூத்ததப்பி) அவர்களது வளவில் முதன் முதலாக இவ்வித்தியாலயத்தை நிறுவினார்.
திண்ணைப்பள்ளிக்கூடமாக இது விளங்கியது. இயற்கைச்சூழலில் ஆலமர நிழலிலும் அரசமர நிழலிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இங்கு கல்வி கற்றனர். கவியரசர் தாகூரின் சாந்தி நிகேதனத்தை நினைவூட்டும் வகையில் இத்திண்ணைப் பள்ளிக்கூடம் அன்று விளங்கியதென இங்கு கற்றோர் பலர் இன்றும் கூறுகின்றனர்.
இத்திண்ணைப் பள்ளிக்கூடத்தின் பக்கலில் நின்ற அரச மரம் இன்று வானளாவி வளர்ந்து நிற்பது இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்குக் கட்டியங் கூறுவது போன்று அமைந்துள்ளது.
புங்குடுதீவில் முதன் முதல் தோன்றிய சைவப்பாடசாலையென்னும் பெருமைக்குரிய இவ் வித்தியாலயம் 1914 ஆம் ஆண்டுவரை அரசினரின் நன்கொடைப் பண உதவி எதுவுமின்றி இயங்கியது. அமரர் பசுபதிப்பிள்ளை அவர்கள் தமது சுய முயற்சியினாலும் உள்ளூர்ப் பெரியார்கள் பலரது ஒத்துழைப்பினாலும் அரும்பாடுபட்டே இதனை நிருவகிக்க வேண்டியிருந்தது.
1914 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி அரசினர் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக இவ் வித்தியாலயம் அங்கீகரிக்கப் பெற்றது.
1923 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்களைக் கொண்ட மத்திய பாடசாலையாக இது பதிவு பெற்றது. திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கி வந்த இவ் வித்தியாலயம் இவ்வாண்டிலேயே நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடத்திற்கு (தற்பொழுது அமைந்துள்ள இடத்திற்கு) இடம் மாறிற்று.
1936 ஆம் ஆண்டில் இவ் வித்தியாலயம் சிரேட்ட உயர்நிலைப் பாடசாலையாக தரம் உயர்த்தப் பெற்றது. 1940ஆம் ஆண்டு இவ் வித்தியாலயப் பழைய மாணவர் சங்கம் எடுத்த…
PAGE 12
பெரு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வித்தியாதிபதி திரு. எல். எம். டி. றொபிசன் அவர்களிடம் புங்குடுதீவுக்கு ஆங்கிலப் பாடசாலை ஒன்று வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ் வேண்டுகோளின் பேறாகவே புங்குடுதீவு மகா வித்தியாலயம் 17-01-1946 இல் இவ்வித்தியாலய மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மகா வித்தியாலயமாக மலர்ந்தது
பல்லாண்டுகளாக சிரேட்ட பாடசாலையாக விளங்கிய இவ் வித்தியாலயம் கல்வித்துறையிலும், மாணவர் தொகையிலும் பெரு வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக, மகா வித்தியாலயமாக இதனைத் தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையின் பேறாக 5-2-1980 இல் வித்தியாலயம் கல்வியமைச்சினால் மகா வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. க.பொ. த. உயர்தர கலை வகுப்புகளை நடத்துதற்கும் அங்கீகாரம் பெற்றது.
முகாமையாளர்கள்.
புங்குடுதீவின் புகழ் பூத்த பெரியார் அமரர் பசுபதிப்பிள்ளையின் மேலான முகாமையின் கீழ் இவ் வித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு வரை சிறப்பாக நிருவகிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. சைவச் சிறார்கள் சைவச் சூழலில் சைவ நெறிக்கமைய கல்வி பயில முடியாதிருந்த குறைபாட்டை இங்கு நீக்கிய பெருமை இவரையே சாரும்.
இவரது மேலான முகாமையின்கீழ் இவ் வித்தியாலயத்தில் நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் பல. அவையனைத்தும் இவ் வித்தியாலயத்திற்கு மட்டுமன்றி எம் தீவகத்திற்கே பெருமை தர வல்லனவாகும். இதனை நன்குணர்த்தும் வகையில் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் அமரர் பசுபதிப்பிள்ளையைப் பற்றி பின்வரும் வெண்பா மூலம் நம்மனைவருக்கும் சுட்டிக்காட்டியுள்ளமை என்றும் போற்றுதற்குரியது.
PAGE 13
ஆற்றல்மிகு முகாமையாளர் (1955-1957) அமரர் க.மு. சின்னத்துரை அவர்கள்

PAGE 15
“புங்குடுதீ வென்றாற் புகல் பசுபதிப்பிள்ளை எங்கும் புகழ்நிறுவி ஏகினார் – இங்கிவர் போல் தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று”3
அமரர். வ. பசுபதிப்பிள்ளையின் பின்னர் அமரத்துவமடைந்த கிராமாதிகாரி திரு. க.மு. சின்னத்துரை அவர்கள் 1957ஆம் ஆண்டுவரை இவ் வித்தியாலயத்தின் முகாமையாளராகப் பணியாற்றினார். ஆற்றலும் ஆளுமையும் ஆண்மையும் ஒருங்கமைந்த அன்னாரின் நிருவாகத்தின்கீழ் இவ்வித்தியாலயம் மேலும் சிறப்படைந்தது.
அமரர் சின்னத்துரை அவர்களின் மறைவின் பின் திருமதி தையல்நாயகி கதிரவேலு அவர்கள் இவ்வித்தியாலயத்தின் முகாமையாளராகப் பணியேற்றுக் கண்ணை இமை காப்பது போல் இவ்வித்தியாலயத்தை, அரசு கையேற்கும்வரை (1-5-1962) காத்து வழிநடத்தினார்கள். இவர்களது பணிகளை நாம் என்றும் நன்றியுடன் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
அதிபர்கள்
இவ்வித்தியாலயத்தின் முதற் தலைமை ஆசிரியராக விளங்கியவர் நாவலர் பெருமானின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நற்றொண்டாற்றிய வேலணையூர் சைவப்பெரியார் கா. நமசிவாயம்பிள்ளை (நாகலிங்கம்) அவர்களாவர். பண்ணிசைப்புலவரான இப்பெரியாரே தேவாரத் திருமுறைகளைப் பண்ணோடு ஓதும் பழக்கத்தை இங்கு புகுத்தியவர் எனலாம்.
இவரின்பின் தலைமை ஆசிரியராக விளங்கியவர் பேராசிரியர் சி. இ. சதாசிவம்பிள்ளை (இளையப்பா உபாத்தியாயர்) அவர்கள். பழைய மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன்மூலம் இவ்வித்தியாலயத்துக்கும் புங்குடுதீவுக்கும் புத்துழுச்சியூட்டியவர் அவர்.
அன்னாரின் பின் தலைமை ஆசிரியராக விளங்கியவர் அமரர் க. செல்வத்துரை அவர்களாவர். “வெள்ளையுள்ளம் படைத்த நல்லதுரை” யெனப் போற்றப்பட்ட இவரது சேவைகள் என்றும் நினைவுகூரத்தக்கன.
PAGE 16
இவ்வித்தியாலயத்தில் பாலர்களரி ஒன்றைத் தோற்றுவித்த பெருமையும் இவரையே சாரும். தம்வாழ்நாள் முழுவதையும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து அவர் ஆற்றிய பணிகளை அனை வரும் அறிவர். ஸ்ரீ கணேச வித்தியாலயமே அவரது உயிர்மூச்சாக விளங்கியது. அன்னாரது அயரா உழைப்பினாலேயே புங்குடுதீவின் தலைசிறந்த கல்விக் கூடமாக இவ்வித்தியாலயம் மிளிர்ந்ததெனலாம்.
அமரர் செல்வத்துரையின் பின்னர் அயலவரான திரு. வை. கந்தையா அவர்கள் அதிபரானார். இவரது சேவைக் காலத்தில் இவ்வித்தியாலயத்தின் கட்டடங்கள் திருத்தியமைக்கப்பட்டன. ஓலைக் கட்டிடம் ஓட்டுக் கட்டிடமாக மாறிற்று. உயர்வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பமாயின.
1971 ஜனவரி முதல் இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவரான திரு நா. கார்த்திகேசு அவர்கள் அதிபராகப் பணியேற்று 1981-10-20 வரை சீரிய சேவையாற்றினார். இக்காலம் ஸ்ரீ கணேசவித்தியாலயத்தின் பொற்காலம். கனிஷ்ட வித்தியாலயமாக விளங்கிய இவ்வித்தியாலயம் மகா வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டதுடன், மாடிக் கட்டடம் உட்பட பல புதிய கட்டிடங்கள் நிறுவப்பட்டன.
பெற்றோர்களது நிதியுதவியுடன் 8 பரப்புக்காணி இவ் வித்தியாலயத்திற்கெனக் கொள்வனவு செய்யப்பட்டது. சகல துறைகளிலும் இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக சலியாது உழைத்த அதிபர்கள் ஐவரது உருவப்படங்களும், தாபகர் முகாமையாளரது படங்களும் 10-4-1983இல் நடைபெற்ற தாபகர்தின – பரிசளிப்பு விழாவில் இவ்வித்தியாலய மண்டபத்தில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டமை அவர்களது சேவைகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமைந்தது.
திரு. நா. கார்த்திகேசு அவர்களைத் தொடர்ந்து திரு. சோ. சேனாதிராசா அவர்கள் 31-8-1982 வரை இவ் வித்தியாலயத்தின் அதிபராக நற்பணியாற்றினார்.
1982 செப்ரெம்பர் முதல் இலங்கைக் கல்விச்சேவையைச் சேர்ந்த திரு. த. துரைசிங்கம் அவர்கள் இவ்வித்தியா…
PAGE 17
முகாமையாளர் (1957-1962) முன்னைநாள் அதிபர்கள்



திருமதி தையல்நாயகி கதிரவேலு அமரர் க. செல்வத்துரை திரு. நா. கார்த்திகேசு
PAGE 19
லயத்தின் அதிபராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் படிப்படியாகச் செயலுருப்பெற்று வருகின்றன.
இவ்வித்தியாலயத்தைத் தரிசித்தோர்
இந்நாட்டின் கல்வித்துறையின் வல்லுநர்கள், அரசியற் றலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் தமிழகத்து அறிஞர் பெருமக்கள் பலரும் இவ்வித்தியாலயத்தைத் தரிசித்துள்ளனர்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர், சுவாமி உருத்திர கோடீஸ்வரர், கல்வி அதிபதி திரு. எல். எம். டி. றொபிசன், பிரதிக்கல்வி அதிபதி திரு. கே. எஸ். அருணந்தி, மாவட்டக் கல்வி அதிகாரி திரு டபிள்யூ. ஆர். வாட்சன், முகாந்திரம் தி. சதாசிவஐயர், கவியோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார், சேர். வை. துரைசுவாமி, முன்னாள் அமைச்சர்களான திரு. ஈ. எ. நுகவெல், திரு. பி. ஜி. ஜி. கலுகல்ல, பிரதிக் கல்விமா அதிபர் யூ. டி. ஐ. சிறிசேன, கல்விப் பணிப்பாளர் திரு. ஸ்டேலிங் பெரேரா ஆகியோர் இவ்வித்தியாலயத்தைத் தரிசித்தவர்களில் குறிப்பிடத்தக்கோராவர்.
இன்று:
இவ்வித்தியாலயத்தில் தற்போது 534 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 19 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பழைய ஓலைக் கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டிடமொன்று உருவாக இருக்கிறது. இதன் முதற்கட்ட வேலைகளுக்காக யாழ் – பிரதேசக் கல்விப் பணிப்பாளர் திரு. ம. சிமியாம்பிள்ளை அவர்களின் பெருமுயற்சியின் பேறாக நடப்புவருட பன்முக வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 1,43,675 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிட வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன.
இரு சலகூடங்களும். மல கூடமொன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சீரழிந்துவரும் பழைய கட்டடங்களைத் திருத்தியமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
PAGE 20
நூலகம் :
இவ்வித்தியாலயத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றான நூலகம் இலங்கைத் தேசிய சர்வோதய சிரமதான இயக்கத் தலைவர் கலாநிதி ஏ. ரி. ஆரியரத்தினா அவர்களால் 6-3-73இல் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகம் சிறப்புற இயங்குவதற்குத் தனியான கட்டிடமொன்று அவசியமாயிற்று. இத்தேவையை நிறைவேற்றுதற்கு எங்கள் வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு நா. சுப்பிரமணியம் அவர்கள் மனமுவந்து முன்வந்தார்கள். அன்னாரின் தாயார் திருமதி சின்னம்மா நாகலிங்கம் அவர்களின் நினைவாக இந்நூலகக் கட்டிடம் இன்று (10-10-84) திறந்துவைக்கப்படுகின்றது.
சமயத்துறையில்:
செந்தமிழும் சிவநெறியும் செழித்தோங்க வேண்டுமென்னும் பெருநோக்குடன் செயற்பட்டுவரும் இவ்வித்தியாலயம் ஆரம்பகாலந்தொட்டு இன்றுவரை சமயப்பணிகளில் முன்னின்று உழைத்து வருகின்றது. மாணவர்களுக்குச் சைவ சமய தீட்சையினைக் காலத்திற்குக் காலம் வழங்குவதோடு சைவநாயன்மார்களது குருபூசைகளையும், சைவப்பெரியார்களது நினைவு விழாக்களையும் நவராத்திரிவிழாவையும் சிறப்பாகக்கொண்டாடி வருகின்றது.
மாணவர்களின் தினசரி வழிபாட்டிற்கு உதவும் வகையில் இவ்வித்தியாலயத்தில் 1956 புரட்டாதியில் ஆலயமொன்று தனியாக அமைக்கப்பட்டது. இவ்வாலயக்கட்டிடம் பழுதடைந்ததைத் தொடர்ந்து வித்தியாலயமேடையின் தென்புறத்தில் புதிய ஆலயமொன்று பெரியார் திரு நீ, மு.குமாரசுவாமி அவர்களால் அவரது பாரியாரின் (சின்னம்மா) நினைவாக நிறுவப்பட்டுள்ளது.
விழாக்கள்
1910 ஆம் ஆண்டில் உதயமான இவ்வித்தியாலயம் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழாக்கள் அனைத்தையும் கடந்து பவளவிழாவை எதிர்நோக்கி நிற்கிறது. இப்பவள…
PAGE 21
விழாவின் நினைவாக ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் சில செயற்படுத்தப்பட இருக்கின்றன.
பழையமாணவர் சங்கம்:
புங்குடுதீவின் புகழை அகில இலங்கையிலும் நிலைநாட்டிய பெருமைக்குரிய நமது பழையமாணவர் சங்கம் 1925ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளிலும் பங்குகொண்டு தொண்டாற்றி வருகின்றது. கட்டிடங்கள் அமைக்கவும், காணி வாங்கவும் வரையாது வழங்கிய நமது பழைய மாணவர்களுக்கு இவ்வித்தியாலயம் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. இதன் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பழைய மாணவர்சங்கம் என்றும் பக்கபலமாக விளங்குமென எதிர்பார்க்கின்றோம். 1951 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாக் கொண்டாடிய இச்சங்கம் விரைவில் வைரவிழாவைக் கொண்டாட இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்:
இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு பல்லாற்றானும் துணை நின்று துடிப்புடன் செயலாற்றிவரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் காலத்துக்குக் காலம் ஏற்படும் கல்வி மாற்றங்களுக்கமைய இதன் தேவைகளை நிறைவேற்றிவருகின்றது.
தற்காலிக கட்டிடங்கள் அமைத்தல், மாணவருக்குக் குடிநீர் வழங்குதல், வித்தியாலய வீதி அமைத்தல், விளையாட்டு மைதானத்தைப் புனரமைத்தல், காணிக் கொள்வனவு. மாடிக் கட்டிடத்தின் தென்பகுதி நிலத்தை அன்பளிப்பாகப் பெறல் ஆதியாம் பல்வேறு பணிகளைச் சிறப்புற நிறைவேற்றியுள்ளது. வித்தியாலயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இச்சங்கம் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றது.
மாணவர் சங்கங்கள்:
மாணவர்களின் ஆற்றல்களை விருத்திசெய்யும் வகையில் மாணவர் கலாபிவிருத்திச் சங்கம், மாணவர் கூட்டுறவுச்…
PAGE 22
சங்கம், சைவ மாணவர் மன்றம், மாணவர் விவசாயக் கழகம், மாணவர் விஞ்ஞான மன்றம், மாணவர் சுகாதார மன்றம், மாணவர் விளையாட்டுக் கழகம் ஆதியாம் சங்கங்கள் இவ்வித்தியாலயத்தில் இயங்குகின்றன. இவற்றின்மூலம் பல்வேறு பணிகளையும் சிறப்புற ஆற்றமுடிகின்றது.
பரீட்சைகள்:
பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் க.பொ.த. (சா. த) பரீட்சையிலும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையிலும் இவ்வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று வருகின்றனர். கொழும்பு விவேகானந்த சபை, யாழ – சைவ பரிபாலன சபை ஆதியன நடாத்தும் சைவசமய பாடப் பரீட்சைகளில் ஆண்டுதோறும் பங்குபற்றி சிறந்த பெறுபேற்றினையும் பரிசில்களையும் இவ்வித்தியாலய மாணவர்கள் பெற்றுவருகின்றனர்.
யாழ் – ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடாத்தும் தமிழ் மொழிப் பரீட்சைக்கும் இவ்வித்தியாலய மாணவர்கள் ஆண்டுதோறும் தோற்றிச் சிறந்த சித்தியினைப் பெற்றுள்ளனர்.
போட்டிகள்:
கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் தமிழ்த்தினப் போட்டி, இசை, நடன, நாடகப் போட்டி, பண்ணிசைப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, உடற்பயிற்சிப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆதியாம் பல்வேறு போட்டிகளில் இவ்வித்தியாலய மாணவர்கள் பங்குகொண்டு சிறந்த சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். இவையனைத்தும் இவ்வித்தியாலயத்திற்குப் பெருமை சேர்ப்பனவாய் அமைகின்றன.
நாளை:
இவ்வித்தியாலயத்தின் கடந்தகால வரலாறு பெருமைக்குரியது. இக்கால நிகழ்ச்சிகள் எழுச்சிக்குரியன. எதிர்காலம் ஏற்றமுடையதாய் அமையும். நாளை மலரும் புதிய சமுதாயம்…
PAGE 25
நம் தீவகத்திற்கும், இவ் வித்தியாலயத்திற்கும் பெருமை தேடித்தர வேண்டும். திரைகடலோடியும் திரவியம் தேடும் நம்மிளைஞர்கள் தாம் கற்ற இவ் வித்தியாலயத்தை மறவாது என்றும் நன்றியுடன் நினைவு கூருவர் என்பது திண்ணம்.
“கல்வி அழகே அழகு” என்னும் இலட்சியத்துடன் செயற்படும் இவ் வித்தியாலயம் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் நல்விளக்காய் விளங்கவேண்டும். மகா வித்தியாலயமாக மலர்ந்து விளங்கும் இவ் வித்தியாலயம் எதிர்காலத்தில் புங்குடுதீவின் உயர் கல்விக்கூடமாக – மத்திய மகா வித்தியாலயமாக மலரவேண்டும். எல்லாம் வல்ல கணேசப் பெருமான் இக் கனவு நனவாகத் திருவருள் புரிவாராக!
“பல்லோர் பயிலவரும் பாரதனில் மேலோங்கும் நல்லோர் நவிலவுயர் நற்கூடம் வல்லோரின் சொல்லாண்ட தூய கணேசமாவித்தி யாலயமே பல்லாண்டு வாழ்க பயின்று.”
அடிக்குறிப்புக்கள் :
- நெடுஞ்செழியன். இரா, “தமிழரசு” தமிழ்நாடு அரசு செய்தித்துறை வெளியீடு. 16-11-1973
- இராசரத்தினம், சு. புங்குடுதீவு ஸ்ரீகணேசவித்தியாலயப் பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் 1951.
- கணபதிப்பிள்ளை, சி. அமரர் பசுபதிப்பிள்ளை நினைவு மலர். 1954
PAGE 26
கவிஞர் காணும் கணேச மகா வித்தியாலயம்
பவளவிழாக்கண்டு வாழியவே!
கற்றோர் போற்றும் கலைக்கூடமே – ஸ்ரீ கணேச மகா வித்தியாலயமே பெற்றோர் பிள்ளைகள் யாவருமே – என்றும் பேணி வளர்ப்பவர் ஆதலினால்.
எண்ணும் எழுத்தும் விஞ்ஞானமுடன் இசையும் ஓவியம் பல்கலையும் கண்ணும் கருத்துமாய் ஊட்டுவது எங்கள் கணேச மகா வித்தியாலயமே.
எட்டுத் திசையும் புகழ்பரப்பி மிக்க ஏற்ற முடையதெம் கல்லூரி திட்ட முடனே பண்பாடும் ஒழுக்கமும் – நாளும் தேடித் தரும் எங்கள் கல்லூரி.
காணத் தகும் பலவிழாக்கள் கண்டு கவின்பெறும் எங்கள் கல்லூரி பேணத் தகுந்த பெருவிழாவாம் – நல்ல பவள விழாவும் கண்டு வாழியவே.
ஆசிரியமணி சி. க. நாகலிங்கம்
PAGE 27
அளிமலர்த் தாள் தலை அணிவாம்!
புங்குடுதீவு கல்விகேள் விகளில் புகழுடன் இலங்கிடக் காலைச் செங்கதிர் எனவே கிழக்கினிற் றோன்றிச் சிறந்தொளி அறிவினைப் பரப்பி பொங்குபேர் அறிஞர் குழாத்தினை அளித்துப் புனித மெய்ச் சைவநந் நெறியும் தங்கெழிற் கணேச வித்தியா சாலைத் தாபகர் நாள்மலர்த் தருவே
சைவமுந் தமிழும் தழைத்திடத் தோன்றித் தருக்ககோ ளரியெனத் தக்கோர் வையகம் போற்ற வாழ்ந்தநா வலரின் வழியினிற் பசுபதிப் பிள்ளை தெய்வ நன்நோக்கம் சிறந்தருள் கூட்டச் செய்தமா வித்தியா சாலை உய்வழித் துலகிற் புங்குடு தீவு ஒளிபெற வைத்தனன் உவந்தே!
எழுத்தறிவித்து இறைவனே ஆனோர் எம்முனோர் அவர்கள்செய் நன்றி வழுத்துதல் உய்தற் குறுவழி தெரிந்தே வாழ்த்தலும் போற்றலும் மரபே! பழுத்தமெஞ் ஞானப் பசுபதிப் பிள்ளை பரமனேர் உருவமெய் யாளன் அளித்த நற் கணேச மாகலைத் தெய்வ அளிமலர்த் தாள்தலை அணிவாம்
- கவிஞர் “தில்லைச்சிவன்”
PAGE 28
வாழ்வுற என்றும் வாழ்த்திடுவோம்!
புங்கை நகர்புகழ் பூத்திடவே புதுப் பொலிவும் நலமும் சிறந் திடவே எங்கள் கணேசமா வித்தி யாலயம் என்றும் வாழ்வுற வாழ்த் திடுவோம்
“கல்வி அழகே அழகென்று” கண்டவர் கண்ணிய மிக்க பசுபதி யார் பல்கிப் பலவளம் பெருகிடவே யவர் பாதை யடியொற்றிச் சென் றிடுவோம்
சைவம் தமிழ்மொழி தழைத்திட வேயெங்கள் தாகங்கள் கல்வியில் தீர்ந்திடவே கைவந்த திறன்கள் பெருகிட வேதூய கலைகள் நிலைகொண்டு வாழ்ந்திடவே.
செய்யுந் தொழில்களில் தெய்வீகம் மிகத் தெளிந்தநல் ஞானமும் திகழ்ந்திடவே உய்யும் நெறிக்கான உணர்வுகளிற் சிந்தை ஊறிப் பெருமிதம் அடைந் திடவே.
- கவிஞர் நா. க. சண்முகநாதபிள்ளை
PAGE 29
தரமான கால்நடை உணவு வகைகள் மருந்துவகைகள் சிறந்த கோழிமுட்டைகள் அனைத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
கவுரி போறேஜ் ஸ்ரோர்ஸ் 5, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
PAGE 30
யாழ்ப்பாணத்தில் சைவ உணவு வகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
மலாயன் கபே 36,38, பெரியகடை யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 22091, 24074
PAGE 31
Space Donated by K. K. A. KANDIAHPILLAI 122, Hospital Road, JAFFNA.
யாழ்ப்பாணத்தில் தன்னிகரற்ற பலசரக்கு வியாபார ஸ்தாபனம் சிவகுமார் ஸ்டோர்ஸ் 282, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
PAGE 32
சகலவிதமான கண்கவர் பொருட்களுக்கும் அழகு சாதனப் பொருட்களுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஸ்தாபனம்
E. S. K. GOLD COVERING ஈ. எஸ். கே. கோல்ட் கவரிங் 9A, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
- தரமான பொருட்கள்
- நிதானமான விலை
- சுறுசுறுப்பான சேவை
- இத்தனையும் ஒருங்கே கொண்ட ஸ்தாபனம்
ஸ்ரீ கௌரி றேடர்ஸ் 41, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
PAGE 33
யாழ்ப்பாணத்தில் சப்பாத்து, செருப்பு, சூட்கேஸ் வகைகள் மற்றும் பலவிதமான பொருட்களை நியாய விலையில் மக்களுக்குக் கொடுத்துவரும் ஸ்தாபனம்
நாதன்ஸ் 17, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
With the Best Compliments from SMACS TAILORING 12, BAZAAR LANE, JAFFNA.
PAGE 34
பாடசாலை உபகரணங்கள், எவர் சில்வர், அலுமினிய, எனாமல் பொருட்களுக்கும், சூட்கேஸ், றங்பெட்டி, ரவலிங் பாக் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கும், சுவர்க் கடிகாரம். ரேடியோக்களுக்கும் பெயர்பெற்ற ஸ்தாபனம்
பாண்டியன் 211, கே.கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
சகலவிதமான அழகு சாதனப் பொருட்களையும், விதம் விதமான நூல் வகைகளையும், ஏனைய மங்கையர் விரும்பும் பொருட்களையும். நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய ஸ்தாபனம்.
அம்பிகாபதி பான்ஸி குட்ஸ் Ambihapathy Fancy Goods 66. பெரியகடை, யாழ்ப்பாணம்.
PAGE 35
புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகாவித்தியாலயத்தின் வளர்ச்சி கண்டு பூரிக்கிறோம்.
ரி. கே. றேடர்ஸ் பலசரக்கு வியாபாரம், கொமிசன் ஏஜென்சி பதிவு செய்யப்பட்ட கட்டிட ஒப்பந்தகாரர் 5, கூட்டுறவு கொம்பிளெக்ஸ் கே.கே.எஸ். றோட், யாழ்ப்பாணம். கிளை: மின்சார உதிரிப்பாகங்கள் 5, ஸ்ரான்லி றோட், யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு
ஸ்கைலைன் மர அரிவு ஆலை 64, முனீஸ்வரன் வீதி, யாழ்ப்பாணம்.
PAGE 36
நீங்கள் வாங்கிவிட்டீர்களா? பாலர் கவிதைப் பூங்காவில் பூத்துள்ள புத்தம் புது வண்ண மலர்கள் ! கொஞ்சுமொழி பேசும் பாலர்கள் பாடி மகிழும் இனிய பாடல்களின் தொகுதி
கவிஞர் த. துரைசிங்கம் B.A. (Hons) எழுதிய பாலர் பாட்டு (தொகுதி 1) ரூபா 7-00 பாலர் பாட்டு (தொகுதி II) ரூபா 7-30
விபரங்களுக்கு : ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை 235, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
PAGE 38
ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் சிறந்தோங்க வாழ்த்துகிறோம்.
கஜமுகன் அடைவு நிலையம் கிளிநொச்சி
ஐ. குணமாலை 862/9 கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம். புங்குடுதீவு- 3.
ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், யாழ்ப்பாணம்.





