புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் வரலாறு

0
107

இப்பாடசாலை புங்குடுதீவிலுள்ள ஊரைதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ம் ஆண்டு ஊரைதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்யாசாலை என்னும் பெயரில் இப்பாடசாலை சைவ வித்யா விருத்திச் சங்கத்தினால் நிறுவப்பட்டது. 1935 ஆம் ஆண்டு கல்வியதிகரியாக கடமையாற்றிய திரு.ஏ. சரவணமுத்து அவர்கள் புதிய கட்டிடம் ஒன்றை கட்டினால் தான் அரசாங்க உதவியை பெறமுடியும் என்பதனால் திரு.சி.நல்லதம்பி ஆசிரியர் தனது செலவில் பத்துப் பரப்புக் காணியை திரு. வை.சின்னையா என்பவரிடம் வாங்கி சைவ வித்யா விருத்திச் சங்கத்திற்கு கையளித்தார். அதில் ஒரு கட்டிடத்தினை அன்று தலைமை ஆசிரியராக கடமையாற்றிய திரு.நா.சோமசுந்தரம் அவர்கள் தனது செலவில் கட்டிக்கொடுத்தார். இதன் விளைவாக 1936 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

1936 ஆம் ஆண்டு பழைய கட்டிடத்துடனும், தளபாடங்களுடனும் இயங்கி வந்த இப்பாடசாலைக்கு திரு.சோ.சேனாதிராசா அதிபரின் காலப்பகுதியில் முதல் முறையாக தளபாடங்கள் கிடைக்கப்பெற்றன.

இப்பாடசாலை போக்குவரத்து அற்ற ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால் இதன் வளர்ச்சி நீண்ட காலமாக பின்தள்ளப்பட்டிருந்தது. இப்பகுதி மக்களின் அயராத உழைப்பினால் இப்பாடசாலை ஊரைதீவு கிராமத்தின் மத்திய பகுதிக்கு மாற்றப்பட்டது.பின்னர் அரசாங்கத்தின் நிதி உதவியினால் பாடசாலைக்கான நிரந்திரக் கட்டிடம் அமைக்கப்பட்டது.இக்காலப்பகுதியில் 98 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

இராணுவ நடவடிக்கை காரணமாக 17-10-1991 இல், இப்பாடசாலை யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தது இப்பாடசாலை யாழ் நகரில் ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து சிறிது காலம் யாழ் பெரிய புலம் மகா வித்யாலயத்திலும் பின்னர் யாழ் கந்தர்மடம் சைவ பிரகாச வித்தியாலயத்திலும் மாலை நேர பாடசாலையாக இயங்கியுள்ளது.

மாலை நேரப் பாடசாலையாக இயங்கிய இப் பாடசாலை தனித்துவத்தைப் பேணும் வகையில் காலை நேரப் பாடசாலையாக இயங்க முன் வந்தது. இந்நிலையில் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலயம், குறிக்கட்டுவன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலயம், திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் இணைந்து தனியார் கல்வி நிறுவனமான ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரியில் காலைநேரப்பாடசாலையாக இயங்கியுள்ளன.மீண்டும் 30-10-1995 இல் ஏற்பட்ட   தென்மராச்சி நோக்கிய இடப்பெயர்வுடன்  செயலிழந்த  இப் பாடசாலை இன்றுவரை  மீள் ஆரம்பிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here