புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது சைவ கலா மன்றத்தினால் 1935 இல் நிறுவப்பட்டது
ஆரம்பத்தில் இப்பாடசாலையானது 5 மாணவகர்ளுடனும் 2 ஆசிரியர்களுடனும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து 1991ஆம் ஆண்டின் இடப்பெயர்வின்போது 428 மாணவர்களையும் 14 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு கனிஷ்ட மகாவித்தியாலயமாக விளங்கியது.
ஆரம்பத்தில் சைவவித்தியா அபிவிருத்திச் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி பின் 1962.04.01ஆம் திகதி கல்வி அமைச்சின் சட்டத்திற்கு உட்பட்டு அரசுடமையாக்கப்பட்டது. அத்தோடு இதனருகே இருந்த புங்குடுதீவு வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலையும் இப்பாடசாலையுடன் 1962.09.1ம் திகதி ஒன்றிணைக்கப்பட்டு இது புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என்ற பெயருடனேயே இயங்கிவந்தது.
ஆரம்ப காலம் முதல் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிபர்கள் மாத்திரமன்றி பெற்றோர் ஆசிரியர் மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் அனைவரினதும் அயராத உழைப்பும் ஒத்துழைப்பும் இப்பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமையினால் இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி உச்சநிலையை அடைந்தது. 1972ஆம் ஆண்டு அரசினரால் இப்பாடசாலை கனிஷ்ட மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டு தரம் 10 வரை மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் தரத்தைப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இருகட்டிடத் தொகுதிகளில் இயங்கி வந்த இப்பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் கனிஷ்ட மகாவித்தியாலயமாக தரம் உயHத்தப்பட்டு கல்விப்பொதுத் தராதரப் பத்திர(சாதாரணதர) ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வரை கல்வி போதிக்கும் தேவை ஏற்பட்டமையினாலும் தோன்றிய இடப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய ஊர்காவற்றுறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையுடனும் கல்வித் திணைக்களத்தின் உதவியுடனும் விஞ்ஞானக் கூடம் விஸ்தரிக்கப்பட்டு மலசலகூடம் மற்றும் ஒருதொகுதி வகுப்பறைக் கட்டிடம் ஓன்றும் படிப்படியாக கட்டடத்தொகுதிகள் கட்டப்பட்டு 1983 ஆம் ஆண்டு அழகிய இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றையும் கொண்டதாக வளர்ந்தது. அத்தோடு கா.பொ.த(.சா/த) பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதன் மூலம் கற்பித்தலிலும் சிறந்து விளங்கியது. அத்தோடு விளையாட்டுத்துறை, கலைத்துறைகளோடு தொழில்சார் கல்விப்பொருட்காட்சிகளிலும் வட்டார ரீதியாகவும் கலந்து பரிசில்களும் சான்றிதழ்களும் பாராட்டுக்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு கல்விகற்ற மாணவர்கள் இன்று வைத்தியர்களாக பொறியியலாளர்களாக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களாக சட்டநிபுணர்களாக அதிபர்களாக ஆசிரியர்களாக சிறந்த கலைஞர்களாக எழுத்தாளர்களாக பேச்சாளர்களாக உருவாகி இப்பாடசாலையின் பெருமைக்கு சான்றாக இருக்கிறார்கள்.
இவ்வித்தியாலயம் 1991ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து மேலும் 3 பாடசாலைகளினதும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து சில சில இடங்களில் பலகுறைபாடுகளின் மத்தியில் தற்காலிகமாக நடாத்தி இறுதியாக யாழ் ஆனைப்பந்தி உயர்கலைக்கல்லூரி என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் 1995.10.30ஆம் திகதி வரை நடைபெற்று மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக மாணவர்கள் மரநிழல்களிலும் அகதி முகாம்களிலும் தமது கல்வியை சுயமாக தொடர்ந்தனர். 1996ஆம் ஆண்டு மே மாதம் உப அதிபராக இருந்த திரு.ந. இராஜதுரை அவர்கள் மண்பற்றுடன் ஒரு தொகை மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் தமது சொந்த கட்டடத்தொகுதிக்கு திரும்பி புனர்நிர் மாணம் செய்து பாடசாலையை ஆரம்பித்துள்ளார். எனினும் பாடசாலையைத் தொடர்ந்து இயக்கிய அதிபர் அவர்களின் அயராத முயற்சியினால் 1997ல் 13 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் (தொண்டர் ஆசிரியர் உட்பட) இருந்தனர். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் மீண்டும் பாடசாலை தன்னிலை அடைந்து கொண்டிருக்கின்றது.
இப்பாடசாலையின் பவளவிழா 2011இல் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டதோடு “கமலமலர்” என்ற பெயரில் மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது. 2011இல் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பிரபல வர்த்தகர் திரு.வி.இராமநாதன் அவர்களால் 65 பரப்புக் காணி இப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.