1939 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் இப்பாடசாலை கட்டப்பட்டது. சைவ வித்தியா அபிவிருத்திச் சங்க பிரதம நிர்வாகஸ்தர் உயர்திரு சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைச்சாமி அவர்களோடும் கலந்துரையாடி இப்பாடசாலையைக் கட்ட தீர்மானித்தனர். மூடவன் தோட்டம் என்னும் காணியை திரு. சு. செல்லத்துறை ஆசிரியர் அவர்கள் பெருமுயற்சி எடுத்து சைவ வித்யா விருத்திச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்
1939 ஆம் ஆண்டு சைவ வித்யா விருத்திச் சங்க முகாமைத்துவத்தின் கீழ் திரு. சி. கனகசுந்தரம் அதிபராகப் பணியாற்றினார்.1943 ஆம் ஆண்டு இப்பாடசாலை பதிவு செய்யப்பட்ட அரசாங்கப் பாடசாலையாக மாற்றம் பெற்றது. இதன் காரணமாக சேர். துரைச்சாமி வித்தியாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்காலத்தில் 7 ஆசிரியர்களைக் கொண்ட முதலாம் தர பாடசாலையாகத் திகழ்ந்தது.எனினும் இப்பாடசாலை 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டது.
இக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. ந. நவரத்தினம் 1400 சதுர அடி கொண்ட கட்டடம் ஒன்றை கட்டுவதற்கு உதவியுள்ளார். ஆசிரியர்களின் உதவியுடன் 200 சதுர அடி மேலதிகமாக சேர்த்து 1600 சதுர அடிக் கட்டிடமாக கட்டப்பட்டது. இக்காலத்தில் இப்பாடசாலை கனிஷ்ட வித்தியாலயமாக மாற்றம் பெற்றது.1971 ஆம் ஆண்டு இப்பாடசாலையில் 127 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.
இராணுவ நடவடிக்கை காரணமாக 1971 இல் யாழ் நகருக்கு இடம் பெயர்ந்த இப்பாடசாலை ஏனைய பாடசாலைகளுடன் சேர்ந்து மாலை நேர பாடசாலையாக இயங்கியுள்ளது. பின்னர் இப்பாடசாலை யாழ் இந்து மகளிர் கல்லூரி விடுத்திக் கட்டிடத்தில் இறுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் வித்தியாலயம், அரியநாயகம் புலம் வித்தியாலயம், இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயம் ஆகியவைகளுடன் சேர்ந்து காலை நேரப் பாடசாலையாக இயங்கியுள்ளது.
1995 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்த இப்பாடசாலை மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு தனது கல்விப் பணியை மேற்கொண்டு வருகிறது.