இப்பாடசாலையானது 1833 ஆம் ஆண்டு கத்தோலிக்க மிஷனரி மாறினால் ஆரம்பிக்கப்பட்டது. சமயம் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சகல மத மக்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்பளித்தது. 1950 ஆம் ஆண்டுவரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வந்தது. 1950 ஆம் ஆண்டு சிரேஷ்ட பாடசாலையாக உயர்த்தப்பட்டு கல்வித் பொது சாதாரண தரம் வரை வகுப்புக்கள் இடம் பெற்றன. 1972 இல் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத்திற்கு அமைய மீண்டும் தரம் குறைக்கப்பட்டு தரம் 8 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. எனினும் 1950 தொடக்கம் 1972 வரை இப்பாடசாலையின் செயற்பாடுகள் உச்ச நிலையில் இருந்துள்ளது.
ஓலையினால் வேயப்பட்ட கூரையையும், மண்சுவர்களையும், குந்துக்களையும் கொண்ட இப்பாடசாலை பின்னர் ஒரு பெரும் கட்டிடமாக மாற்றம் பெற்றது.1990 இல் திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் 350 மாணவர்கள் கல்வி கற்ற்றுள்ளனர்.
1991 இல் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக யாழ் நகருக்கு இடம் பெயந்த இப்பாடசாலை ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்தது ஆரம்பத்தில் யாழ் – சன்மார்க்க மகா வித்தியாலயத்திலும், பின்னர் சிறிது காலம் யாழ் – பெரிய புலம் மகா வித்தியாலயத்திலும் மாலை நேர பாடசாலையாக இயங்கியுள்ளது. பின்னர் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரையிலான வகுப்புக்கள் புங்குடுதீவு மகாவித்தியாலயத்துடன் இணைந்து யாழ் – கந்தர்மடம் யூனிவேர்சல் கல்வி நிலையத்தில் இயங்கியுள்ளது. எனினும் 1994 இல் இப்பாடசாலை முற்றாக செயலிழந்தது. இதன் பின்னர் மீண்டும் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.