வணக்கம் அன்பு உறவுகளே!!!
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா தாயகத்தில் பல்வேறு செயற்திட்டங்களை திறம்பட செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த ஒன்றுகூடலில் நாம் உறுதியளித்தபடி Raffle சீட்டுகள் விற்பனையில் சேர்க்கப்பட்ட முழுப்பணமும் முள்ளிவாய்க்கால் தமிழ்மாறன் முன்பள்ளியின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற அனுப்பி வைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த உன்னத பணிகளின் தொடர்ச்சியாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அவயவங்களை இழந்தோ அல்லது ஊனமுற்ற எமது உறவுகளுக்கான சக்கரநாற்காலிகளுக்கான தேவைகள் எமது சங்கத்திடம் முன்வைக்கப்பட்டது. தாயகத்தில் உள்ள தொண்டுநிறுவனமொன்று இந்த சக்கரநாற்காலிகளை மானிய முறையில் வழங்க முன்வந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் அவற்றை குறிப்பிட்ட தொகை பணத்தைச்செலுத்தியே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே இந்தத்திட்டத்தை அறிந்த எமது சங்கப்பொருளாளர் உமாசங்கர் (அழகன்) பல்வேறு எமது தாயக உறவுகளை அணுகியிருந்தார். இந்தத்தருணத்தில் தயாளசிந்தனையுடைய வீடுவிற்பனை முகவர் சசி சண்முகநாதன் அவர்கள் பின்வரும் பத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரம்பத்தொகை முழுவதையும் செலுத்தி இந்த சக்கரநாற்காலிகள் கிடைப்பதற்காக வழிசமைத்துள்ளார். இன்று ஐம்பதாவது பிறந்தநாள் காணும் சசி அண்ணாவின் இந்த உதவியினால் பயன்பெறும் அன்பு உள்ளங்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல புங்குடுதீவு கண்ணகைத்தாயின் அருளையும் வேண்டிநிற்கின்றோம்.
எமது சங்கத்தின் அனுசரணையில் இவை பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு கிடைப்பதில் எமது கிராமமே மகிழ்வடைகின்றது. இந்த முயற்சிக்கு உதவிய அழகனுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பண உதவியளித்த சசி சண்முகநாதன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பான நன்றிகளும் வாழ்த்துகளும்.
நீங்களும் இவ்வாறான செயற்திட்டங்களில் பங்குபற்றி தாயக உறவுகளை வளம்படுத்த விரும்பினால் எம்மைத்தொடர்புகொள்ளவும்.
நன்றி
நிர்வாகம்.
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா