இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்திற்கு வட இலங்கை சர்வோதயத்தின் சிறப்புச்செய்தி
அன்பையும் கூட்டுறவையும் பேணிக்காத்து அறத்தையும் பண்பையும் இதயத்தில் சுமந்து தாயக மண்ணின் வளத்தையும் வாழ்வையும் நோக்கி எண்ணங்கள் மிளிர பக்குவமான பணிகளை ஆற்றி வரும் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் ஆண்டு தோறும் கூடி சங்கத்தை வாழ்த்தி வளர்த்து வரும் இந் நன்னாளில் எம் இதயம் திறந்த வாழ்த்துக்களை சங்கத்திற்கு தெரிவிப்பதோடு சங்கம் மேன்மேலும் வளர்ந்து நற்பணிகள் தொடர எல்லாம் வல்ல யோகசுவாமிகளை வேண்டிப்பணிகின்றோம்.
உளம் பூத்த எண்ணங்களோடு தம் வாழ்நாள் காலங்களிலாவது பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க வேண்டும். கிராமங்கள் வளம் பெற வேண்டும். மாணவர்கள் மகிழ்வோடு கற்க வேண்டும் சிறுவர்கள் ஆரோக்கியமும் அறிவும் அழகும் கொண்டவர்களாக வளர்ந்து சமூகத்தை சிறப்பிக்கும் பண்பாளர்களாக வேண்டும் என்றபெருநோக்கோடும் பெண்கள் தலைமத்துவம் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் சமுதாய விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் அன்பும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கை நெறியை வளர்க்கவும் அரும்பாடுபட்டு செயலாற்றும் இலண்டன் புங்குடுதீவு நலன் புரிச்சங்கம் வட இலங்கை சர்வோதயத்திற்கு வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை ஆகும்.
அந்த வகையில் கடந்த 2003ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த புங்குடுதீவு நலன்புரிச்சங்கமானது இற்றைவரை வட இலங்கை சர்வோதயத்தினூடாக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. புங்குடுதீவுக் கிராமத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுக்கு பின்னால் நலிவுற்ற நிலையிலிருந்த மக்களின் வாழ்வாதார திட்டங்களான குடிநீர் கல்வி கலைகலாச்சாரம் சுகாதாரம் ஆன்மீகம் போன்ற திட்டங்களை நடைமுறப்படுத்த முன் வந்த இலண்டன் புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்திற்கு எமது கிராமத்தின் சார்பிலும் வட இலங்கை சர்வோதயத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடிநீர் வழங்கும் சேவையில் பங்கு கொண்டதன் பயனாக அன்றாடம் சுத்தமான குடிநீரை பருகும் ஒவ்வொரு மக்கள் மனதிலும் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் பதிவாகியுள்ளது. இதற்கு உயிர் வாழும் ஒவ்வொரு ஜீவன் களது நல்லாசிகலும் இச் சங்கம் வளர்க்கும் இலண்டன் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு இதய வாழ்த்தாகும்.
2007ம் ஆண்டில் குடிநீர்சேவை
புங்குடுதீவு பிரதேச மக்களுக்கு இலண்டன் வாழ் மக்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குடிநீர் பௌசரினூடாக 2007ம் ஆண்டில் ஏழு இலட்சத்து ஜயாயிரத்து ஜந்நூறு கலன் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
கணனி பயிற்சி வகுப்பு
இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்று வரும் கணனி பயிற்சி நெறியில் 2007ம் ஆண்டில் 32 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழை ப் பெற்றுள்ளனர்.இத் திட்டத்திற்காக ஆசிரியை வேதனம் மின்பிறப்பாக்கியின் எரிபொருள் மற்றும் கற்கை நெறிச் செலவினமாக மொத்தம் இரண்டு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து ஜம்பது ருபா 2007ம் ஆண்டில் சங்கத்தின் நிதியாக செலவிடப்பட்டுள்ளது.
மதிய உணவுத்திட்டம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சைவ சமய கோட்பாடுகளிற்கு அமைவாகவும் இந்து கலாச்சார அலுவல்கள் பரீட்சைத்திணைக்களத்தின் பாட விதானங்களிற்கு அமைவாகவும் தொண்டர் திருநாவுக்கரசு அறநெறிப்பாடசாலை நடைபெற்று வருகின்றது.காலை 9.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களிற்கும் கற்பித்தல் ஆசிரியைகளுக்கும் மதிய உணவாக சோறு கறி சமைத்தும் வழங்குப்பட்டுவருகின்றது.இதற்கான செலவீனத்தை 2007 பங்குனி மாதம் தொடக்கம் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் வழங்கியுள்ளது.
2007ம் ஆண்டில்
மாணவர் எண்ணிக்கை 144
ஆசிரியை எண்ணிக்கை 05
பாடசாலை நாட்கள் 52
மதிய உணவுச்செலவு 182000 Rs
ஆசியர்கள் வேதனம் 26000 Rs
சீருடை தையல் செலவு 3580 Rs
மேற்கூறப்பட்ட திட்டங்களுக்கு உதவி அளித்துக்கொண்டிருக்கும் இலண்டன் வாழ் புங்குடுதீவு அன்பர்களுக்கும் நன்றந்தமில்லாத நன்றிகள் உரித்தாகட்டும்.
மேலும் இலண்டன் புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தினால் வட இலங்கை சர்வோதயத்தினூடாக முன்பெடுக்கப்படும் வேலைத் திட்டங்களிற்கு கொழும்பு புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திகழகத்தின் ஆதரவும் வழிகாட்டலும் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருந்து வருகின்றமை முக்கியமான தொன்றாகும். இலண்டன் வாழ் புங்குடுதீவு மக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குடிநீர் பௌசரை கொழும்பு புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திக்கழகம் பொறுப்பேற்று வழங்கியுதவியது என்றும் மறக்கமுடியாததாகும்.
அத்துடன் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்திற்கும் வட இலங்கை சர்வோதய நிலையத்திற்கும் உறவுப்பாலமாகவும் திட்டமிட்டு செயலாற்றும் பக்குவம் நிறைந்த பண்பாளராகவும் இணைப்பாளராகவும் உயர் திரு கே.தம்பிஜயா அவர்கள் ஆற்றிவரும் தொண்டானது என்றுமே மறக்கமுடியாத தொன்றாகும்.அவர்கள் சங்கத்திற்கு ஆற்றுகின்ற மகத்தான சேவைக்கு பணிவான வணக்கங்கள்.
எமது மண்ணின் மைந்தனும் யாழ் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் பேராசிரியருமான திரு கா. குகபாலன் அவர்கள் இலண்டன் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் ஆதரவுடன் நடை பெற்றுவரும் கணனி பயிற்சி நெறி தொடர்பான ஆலோசனை வழங்குதலிலும் ஆசிரிய வளம் இணைத்தல் சான்றிதழ் வழங்கல் போன்றவற்றிலும் முக்கிய பங்கெடுத்து செயற்படுவதோடு வட இலங்கை சர்வோதயத்தின் ஏற்ற மிகு ஆலோசகராகவும் இருந்து செயலாற்றி வருவது சங்கத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருகின்றது.அவ் வகையில் அவர்களது சேவை மிகவும் முக்கியதொன்றாகும்.
சங்கம் அமைத்து சங்கம் வளர்க்கும் அனைவருக்கும்
ஊழி தோறூழி நீடூழி வாழியென வாழ்த்தி நிறைவு செய்கின்றோம்.