எமது பாடசாலை 1910 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 3ம் நாள் அமரர் வைத்தியலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்களினால் மூத்ததம்பியர் வளவில் அரச மரநீழலில் ஓலைக்குடிசையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் அரச நன்கொடை பெறும் பாடசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெற வேண்டுமாயின் நிரந்தரமாக பாடசாலைக்கென சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடத்துடன் பாடசாலை அமைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அந்நிலையில் கனகசபையார் இராமநாதரின் மகன் அப்பச்சியர் ( திருமதி சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்களின் தந்தை) தற்போது எமது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் தமது காணியில் முன்புறமாக மூன்று பரப்புக் காணியை நன்கொடையாக வழங்கினார் .
அதன்பயனாக1914 ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் பாடசாலை ஆரம்பமாகியது. எமது பாடசாலையின் துரித வளர்ச்சியினால் இம்மூன்று பரப்புக் காணிக்குள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 1979ஆம் ஆண்டளவில் திரும்பவும் அப்பச்சியரின் வழித்தோன்றலாகிய அவரின் பேத்தியார் திருமதி யோகாம்பிகை தர்மலிங்கம் அவர்களைப் பாடசாலை நிர்வாகத்தினர் அணுகினர்.அவர்களும் முழு மனதுடன் சில நிபந்தனைகளோடு தமது காணி முழுவதுமாக பாடசாலை க்கு கொடுப்பதற்குச் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிரகாரம் பாடசாலை க்கு வடக்கு பகுதியில் உள்ள அமரர் க.வைத்திலிங்கம் அவர்களது காணியை வாஙகிக்கொடுத்து அவர்களது காணி பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.
இச் செயற்பாட்டில் முற்று முழுதாக தங்களை அர்ப்பணித்து செயற்பட்ட முன்னாள் அதிபர் அமரர் நா. கார்த்திகேசு அவர்களையும் அமரர் முன்னாள் ஆசிரியர் பொ . சபாரெத்தினம் அவர்களையும் பாடசாலைச் சமூகம் என்றைக்கும் மறக்க முடியாது. அதேபோல் இன்றைக்கு எம் பாடசாலை இதே இடத்தில் அமைந்திருக்க காரணமாக விளங்கிய அப்பச்சியர் அவர்களையும் இன்றும் வித்தியாலய வளர்ச்சிக்குப் பல விதங்களில் உதவி செய்து வரும் அவர்களது வழித்தோன்றல்களையும் பாடசாலைச் சமூகத்தினர் என்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளனர்.
1923 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையாக மாற்றம் பெற்றது.1936 ஆம் ஆண்டு இவ் வித்தியாலயம் சிரேஷ்ட உயர்நிலைப் பாடசாலையாக தரம் உயர்தம் பெற்றது. 1967 இல் கல்விப்பகுதியின் பாடசாலைகள் புனரமைப்பின் காரணமாக இப்பாடசாலை 1972 ஆம் ஆண்டு முதல் கனிஷ்ட வித்தியாலயமாக்கப்பட்டது. பல்லாண்டுகளாக சிரேஷ்ட வித்தியாலயமாக விளங்கிய இப்பாடசாலை கல்வித் துறையிலும், மாணவர் தொகையிலும் பெருவளர்ச்சி கண்டமையினால் இவ் வித்தியாலயம் கல்வி அமைச்சினால் மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.
துரித வளர்ச்சி கண்ட இப்பாடசாலை 1991இல் நிகழ்ந்த இடப்பெயர்வினால் 1997 வரை சொந்த இடத்தில இயங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. யாழ் நகருக்கு இடம் பெயர்ந்து புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து கொக்குவில் பெரிய புலம் வித்தியாலயத்தில் இயங்க ஆரம்பித்தது. இடப்பற்றாக்குறை காரணமாக பின்னர் கந்தர்மடம் தனியார் கல்வி நிறுவனமான யூனிவேர்சல் நிறுவனத்தில் சில பாடசாலைகளுடன் இணைந்து செயற்பட்டது. அதன் பின்னர் முஸ்லீம் கதிஜா மகா வித்தியாலயத்தில் தனித்து இயங்கத் தொடங்கியது.
யாழிலும் அதிக காலம் விட்டு வைக்கவில்லை 1995 இல் யாழ் நகர இடம்பெயர்வோடு வலிகாமத்தில் சிலரும், வன்னியில் சிலருமாக சிதறடிக்கப்பட்டனர்.1996 இல் இருந்து இயங்காதிருந்த இப்பாடசாலை பழைய மாணவர்களின் முயற்சியினால் 1997 இல் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அமரர் வ.பசுபதிப்பிள்ளையின் பின்னர் திரு.க.மு.சின்னத்துரை அவர்கள் 1957 ஆம் ஆண்டுவரை இவ்வித்தியாலயத்திற்கு முகாமையாளராகப் பணியாற்றினார். 1962 இல் அரசாங்கம் இவ்வித்தியாலயத்தைக் கையேற்றது.
1971 இல் இப்பாடசாலையின் பழைய மாணவரான திரு.நா.கார்த்திகேசு அவர்கள் அதிபராகப் பணியேற்று 1981 வரை சேவையாற்றினார். இக்காலத்திலேயே இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.
1982 இல் திரு. த. துரைசிங்கம் இவ்வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் படிப்படியாக வளர்ச்சிக் கண்டது. இவரது சேவையைத் தொடர்ந்து திரு.கே. டி. தர்மலிங்கம் அதிபராகப் பதவியேற்றார். இவருடைய காலத்தில் புங்குடுதீவு இடப்பெயர்வினால் யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தது.
அதன் பிறகு திரு.செ. ஈஸ்வரமுத்து அத்திபராகப் பதவியேற்றார். இடம்பெயர்ந்த நிலையில் கஷ்டப்பட்ட போது கைவிடப்பட்ட நிலையில் கிடந்த முஸ்லீம் கதிஜா மகா வித்தியாலயத்தில் மீண்டும் பாடசாலையை செயற்பட செய்தார். இந்நிலையில் 1996 இல் யாழிலிருந்தும் இடம் பெயர்ந்தமையால் இவ் வித்தியாலயம் இயங்க முடியாமல் போனது.1997 இல் யாழ் நகர் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் இவ் வித்தியாலயம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.
இந்நிலையில் வித்தியாலய மைதானத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பாடசாலைக்கு அயலில் உள்ளவர்களை அணுகிய பொழுது அவர்கள். எதுவித மறுப்புமின்றி தாரளமனதுடன் தத்தமது காணிகளில் சிறு சிறு பகுதிகளை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் அந்த வகையில்
அமரத்துவம் அடைந்த ஆறுமுகம் யோகேஷ்வரியவர்களின் நினைவாக அவர்களது காணியில் இருந்து 4 3/4 பரப்பும், அமரத்துவம் அடைந்த யோன்பிள்ளை சரோஜாதேவி அவர்களது நினைவாக அவர்களது காணியில் இருந்து 5 பரப்பும் ,அமரத்துவம் அடைந்த சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது நினைவாக அவர்களது காணியில் இருந்து 1 1/4 பரப்பும் அமரத்துவம் அடைந்த வேலுப்பிள்ளை யோகம்மா அவர்களது காணியில் இருந்து 1 1/4 பரப்பும் அமரத்துவம் அடைந்த சின்னையா விசாலாட்சி அவர்களது காணியில் இருந்து 1/4 பரப்பும் ,அமரத்துவம் அடைந்த கந்தையா தெய்வானைப்பிள்ளை அவர்களது காணியில் இருந்து 0.05 பரப்பு காணியும் தருவதற்கு இவர்களது பிள்ளைகள் சம்மதம் தெரிவித்துள்ளனர் அவர்கட்கு எம் பாடசாலை சார்பாகவும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்களது நன்கொடை கள் பாடசாலை வரலாற்றில் என்றும் அழியா இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.