நண்பர்களுக்கு

“இன்றைய நாகரிகத்தின் விளைவு தனி நபர்களுடைய மனதைப் பாதித்து அவர்கள் நல்ல வழியில் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டதாகும். கலாசாரப் பண்புகள் மறைந்து இயந்திரம்போல் இயங்கும் நிலையை மனிதன் அடைந்துவிட்டான், உடலுழைப்பும், உடற்சுகமும் பெரிதாகிவிட்டது. உள்ளத்தைப்பற்றிக் கவனிப்பார் இல்லை.

” நவீன நாகரிக மனிதன் மகிழ்ச்சியுடன் இல்லை. புதிய பாதையில் நடைபோடத் துணிவு கொண்டவனாகவும் இல்லை. உழைப்பு ஒன்றுதான் அவனுக்கு மிஞ்சியது. இதே நிலை தொடர்ந்து எவ்வளவு நாட்களுக்கு இருக்க முடியும்? சலிப்புமிக்க இந்த வாழ்வே கடைசியில் அவனது முடிவுக்கும் காரணமாகிவிடும். அவனிடம் சாந்தி குடிகொண்டிருக்கவில்லை. அதனால் மகிழ்வுடன் இருக்க இன்னும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. புதிய வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடிக்க அவனுக்குத் தெரியாது. இன்றைய நாகரிகத்தின் கடைக்கால் மகிழ்வு ததும்பும் வாழ்வுக்கு விரோதமானது. இந்த அஷ்திவாரத்தின் மீது மகிழ்ச்சி என்னும் மாளிகையை எழுப்புவது எப்படி? புதிய கலாசாரம் உருவானால்தான் இன்றைய மனிதனுடைய உள்ளம் நிறைவு பெறும். பழைய பாதையிலேயே சென்றால் வழி பிறக்காது, இதில் மற்றொரு வருந்தத்தக்க விசயம் புதிய பாதையைப்பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, பழைய வழியைப்பற்றியே மனிதன் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான்”.

உலக வரலாறு பற்றி ஆராயும் தன் ‘சரித்திர சக்கரம்’ என்ற புகழ்பெற்ற நூலில் டாக்டர் ராம்மனோகர் லோகியா இன்றைய மனித குல வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்தபின் கூறுபவை இவை.

நவீன விஞ்ஞானத்திலும், அது தனக்கு வகுத்துச் செல்லும் பாதையிலும் அபார மோகமும், நம்பிக்கையும் கொண்ட இக்கால மனிதன், அது மெத்த வளர்ந்த மேற்கிலே சீரழிவு துவங்கிவிட்டதைக் காண்கிறான். வளர்ச்சிக்கும் எல்லையுண்டு, சுற்று சூழ்நிலைக் கேடு, அணு ஆயுத ஆபத்து என்ற அலரல் நாளுக்கு நாள் உறத்துக் கேட்க துவங்கிவிட்டது.

இந்த நிலையில்தான் எங்கெங்கும் அதிருப்தியும், அதன் தொடர்பாக மோதல்களும் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. முற்றி வெடிக்கும் நிலையை நோக்கி வேகமான வளர்ந்து வரும் இந்த நெருக்கடிக்கு நிச்சயம் ஒரு தீர்வு இருந்தே ஆக வேண்டும்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில்- அடுத்த வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை, திசை திருப்பதை தருவதாகும் என்றும், சடம், உயிர், மனம் என்று உணர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது என்றும் திரு. தளையசிங்கம் கூறுகிறார்.

அந்த நிலையே, அந்த நிலையை அடைவதே மனித குலத்துக்கு சாசுவதமான விடுதலை தந்து, மனிதனுக்கு சாந்தியையையும், மகிழ்ச்சியையும் தர வல்லது என்று அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் புதிய கருத்துக்களை திரு. தளையசிங்கம் நம்முன் வைக்கிறார்.

வரப்போகும் புதிய சகாப்தத்துக்கு பாரத நாடும், காந்தியும், காந்தி காட்டிய சர்வோதயமுமே வழி காட்டிகள் என 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி தீர்க்க தரிசனம் போல் பாடினான்:

பாரி லுள்ள பலநாட்டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்க
லுற்றதிங் கிந்நாள் – உலகெலாம் புகழ
இன்ப வளஞ் செறி பண்பல பயிற்றுங்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்- “புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே உருவாம், மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி” யென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலுமே
வெற்றி தருமென வேதஞ் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள். இதனாற் படைஞர்தஞ்
செருக்கொழித் துலகி லறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் – விரைவிலே.
(வெற்றி கூறுமின்; வெண் சங் கூதுமின் !)

இந்த நம்பிக்கையையே திரு. தளையசிங்கம் பலபட ஆணித்தரமாக அறிவும் மிளிர தம் கதைகளிலே, கட்டுரைகளிலே கவிதைகளிலே திறம்பட நிலை நாட்டுகிறார்.

அறிவையும், அழகையும் போலவே உண்மை, நேர்மை, சத்தியம் அவர் எழுத்துக்களிலே ஒளி விட்டுப் பிரகாசிக்கிறது. அவரது நூலைப் படிக்கும் எவரும் இதை உணரலாம்.

மனித குலத்துக்கு சாந்தியும், மகிழ்ச்சியும் அளிக்க வல்ல ஒரு புதிய கலாசாரம் தோன்றுவதற்கான அடிப்படையைத் தெளிவாகக் காட்டும் தளையசிங்கத்தின் சிந்தனைகள் நம்பிக்கையூட்டுவதாகும்.

புதிய கலாசாரத்தை துவக்கி வளர்க்கும் இயக்கத்திற்கு இனி கலைஞர்களும், இலக்கிய கர்த்தாக்களுமே முன்னணியில் நிற்க வேண்டும். அப்பணியை ஏற்று நடக்க தோன்ற வேண்டிய படைப்பாளிகள் இயக்கத்திற்கு தமிழில் தளையசிங்கத்தின் நூல்கள் அனைத்தும் வெளி வருவது துணைபுரியும் என நம்புகிறோம். தளையசிங்கத்தின் நூல்களை வெளியிட அன்பு கூர்ந்து அனுமதி அளித்த அவரின் சகோதரர் திரு. மு.பொன்னம்பலம் அவர்களுக்கும், மற்றும் அவரது நண்பர்களுக்கும், குறிப்பாக திரு.பத்பனாப ஐயர் அவர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

திரு. தளையசிங்கத்தையும், அவரது முக்யத்துவம் வாய்ந்த அபூர்வமான தனிச் சிறப்புகளையும் தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு. சுந்தர ராமசாமி, திரு.தளையசிங்கத்தின் நூல்களை வெளியிடும் வாய்ப்புக்கு வகை செய்தவர் நண்பர் திரு. கி. ராஜநராயணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

சி. கோவிந்தன்,
பதிப்பாளன்.

——————————————————–

“ஓர் அடி எனக்கு, ஆனால் மனித குலத்துக்கோ
ஓர் பெரும் பாய்ச்சல்”

– நீல் ஆம்ஸ்ட்ரோங், சந்திரனில்
காலடி வைக்கும்போது.

ஓர் அடி

உலகெங்குமுள்ள மாணவர்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. ஆனால் யாரும் பிரச்னையின் ஆழத்தைக் கண்டதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்திவரும் மாணவர்களுக்கே அவர்களின் நடத்தைக்குரிய அர்த்தம் பூரணமாகத் தெரிந்ததாய் இல்லை. ஏதோ அவர்களே பூரணமாக அறியாத ஓர் அதிருப்தி அவர்கள் வாழும் இடங்களிலுள்ள சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் அமைப்புக்கு எதிராக அவர்களைப் போராடத் தூண்டி வருகிறது.

அமெரிக்கர் சந்திரனில் இறங்கியுள்ளனர். ஆனால் அதே நாட்டின் சமூக அமைப்பையும் வாழ்க்கைமுறையையும் துறந்து நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் “பீட்னிக்ஸ்”, “ஹ’ப்பீஹ்” ஆகியோரின் துறவு சந்திர யாத்திரையைவிட மிக முக்கியமானது என்பதைப் பலரும் அறிவதில்லை. ஒரு காலத்தில் இந்தியாவெங்கும் சமண, பௌத்த, இந்து சந்நியாசிகள் எப்படிச் சமூக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விலகி உண்மையைத் தேடி திரிந்தார்களோ அதேபோல் இன்று அமெரிக்கர் குறிப்பாக நாட்டின் ஆட்சியையே ஏற்று நடத்தக் கூடிய திறமையும் கல்வியறிவுமுள்ள அமெரிக்கச் சமூகத்தோடு ஓத்தோட மறுத்து புதுயுகத் துறவிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் அதே அதிருப்திதான்.

அதிருப்தி, அப்படிச் சொல்வதுதான் சரி. எல்லாருக்கும் பொருத்தமான பொதுக் காரணமாக அதை மட்டுந்தான் சொல்லலாம். அந்தந்த இடங்களிலுள்ள அமைப்பு ஏற்படுத்தும் அதிருப்தி. அந்த அதிருப்தி முதலாளித்துவ அமைப்புக்கும் சரி, பொதுவுடமை அமைப்புக்கும் சரி ஒத்துப் பொருந்துவதாகவே இருக்கிறது. சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சி உலகெங்கும் காணப்படும் அதே அதிருப்தியின் வெளிக்காட்டல்தான். ஆனால் அங்கு அது ஒழுங்குபடுத்தப்பட்டு அமைப்புக்கு ஏற்ற வகையிலேயே ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது. மாசேதுங்கின் கெட்டித்தனமே அதுதான். அதிருப்திதானாக வெடித்து அமைப்புக்கு எதிராக மாறிவிடாமல் இருப்பதற்காக அமைப்பே அதை ஆற்றுப்படுத்தி அதன் தாக்குதலுக்குரிய இலக்கையும் காட்டித் தன்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறது; அதே அதிருப்தியையே தன் பக்கபலமாகத் திரட்டியிருக்கின்றது: மற்றைய நாடுகளிலுள்ள சமூக பொருளாதார அமைப்புகளை விட மாசேதுங்கின் தலைமையிலுள்ள சீனாவின் பொதுவுடமை அமைப்பு அந்தளவுக்கு யதார்த்தமாக இயங்க முயன்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். சமூக அமைப்பின் தேக்கத்துக்கு எதிரான தீவிர வளர்ச்சி மாற்றமே மக்களிடையே இயல்பாக ஏற்படக் கூடிய அதிருப்தியை நீக்கிவிடக்கூடியது என்பதை சீன அரசாங்கம் உணர்ந்து இயங்குவதாகத் தெரியவில்லை. ஆனால் சமூக அமைப்பின் வளர்ச்சி மாற்றம் எதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்? சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் எந்த இலட்சியத்தை நோக்கி வளர்க்கப்படவேண்டும்?

continue reading at http://noolaham.net/project/01/95/95.htm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here