தோற்றமும் வளர்ச்சியும்

முத்தமிழ் இசைக்க,மேகலை பிறக்க,இந்து மகாசாகரம் இசைக்க,சிலப்பதிகாரம் செய்திகள் கூற,மீகாமன் படையெடுக்க நாகங்கள் பூவெடுத்துப் பூசிக்க வெடியரசன் ஆட்சி செய்ய பூங்குடி என்னும் புங்கனூர் என வழங்கி மருவிய புங்குடுதீவு மேலைத்திசையில் சிறப்புடன் வாழ்ந்த திரு.கந்தையா பார்வதிப்பிள்ளை மைந்தனால் பிரிவினைகளற்ற ஏழுச்சியும் வேற்றுமைகளில் ஒற்றுமை கொண்ட சமுதாயத்தை கிராம மட்டத்லிருந்து உலக மட்டத்திற்கு ஏழ செய்து புதியதோர் உலகம் செய்வோம் என்பதை நோக்கமாகவும் கிராமங்களிலிருந்து உலகை நோக்கியெழும் வாழ்க்கை நெறி சமுதாயத்தை கருணை, அகிம்சை, தியாகம், மனிதநேயம்,என்ற சனாதன தர்மக்களுக்கு ஊடாக மனிதோதய மேம்பாட்டிற்குள் அழைத்துச்செல்வோம் என்பதை இலட்சியமாகவும் கொண்டு 23.07.1972ம் ஆண்டு வட இலங்கை சர்வோதயம் இவ் மண்ணிலே மலர்ந்தது.

மனிதனாக பிறந்தவன் மனிதனுக்கு சேவை செய்வதையே தன் கடனாகவும்,கடமையாகவும் கொள்ளல் வேண்டும் என்பதனை உணர்ந்து வட இலங்கை சர்வோதயத்தின் வாயிலாக பல பணிகளை ஆற்றியவர் எம் தொண்டர் திருநாவுக்கரசு சிறுவயதிலேயே துடிப்புள்ள இளைஞனாகவும் சிந்தனைகூடாரமாகவும் திகழ்ந்த தொண்டரை நாம் பிரித்து பார்க்க முடியாது ஏனேனில் சர்வோதயம் என்றால் அது திருநாவுக்கரசு தான்.

அதேபோல் திருநாவுக்கரசு என்றால் அது சர்வோதயம் தான்.என்னும் அளவிற்கு இரண்டுமே எட்டாச்சிகரமாயும்,புகழிடமாயும் இருந்தன.தொண்டர் அவர்கள் பல்வேறு பட்ட பணிகளை மக்கள் மத்தியிலே மேற்கொண்டார்.அந்த வகையிலே சுகாதாரம்,கல்வி,விவசாயம் ,சிரமதானம் ,முதியோர் கெளரவிப்பு ,குடியேற்றத்திட்டம்,போன்ற பாரிய பணிகளை மேற்கொண்டார்.

நோக்கம்

பிரிவினைகளற்ற ஏழுச்சியும் சுரண்டலற்ற பொருளாதாரமும் கூட்டுறவு கொண்ட சமுதாய வாழ்வும் பூர்வீக கலைக்கலாசாரமும் விஞ்ஞானம் கொண்ட தொழில்நுட்பமும் ஆன்மீகம் கொண்ட வாழ்க்கை நெறிகளும் இயற்கையோடு நட்புறவும்,வேற்றுமைகளில் ஒற்றுமையும் கொண்ட ஏழுச்சி மிக்க சமுதாயத்தை கிராம மட்டத்திலிருந்து உலக மட்டத்திற்கு ஏழச் செய்து புதியதோர் உலகம் செய்வோம்.
இலட்சியம்

மக்களின் சிந்தனை,செயல்,அறிவு,அனுபவம் அனைத்தையும் ஒன்று திரட்டி கிராமங்களிலிருந்து உலகை நோக்கி எழும் வாழ்க்கை நெறி கொண்ட சமுதாயத்தை அன்பு,கருணை, அகிம்சை, தியாகம், மனிதநேயம், மகிழ்ச்சி, கூடி வாழ்தல்,என்ற சமாதான தர்மங்களுக்கூடாக மனிதோதய மேம்பாட்டிற்குள் அழைத்து செல்வோம் . கூடிவாழ்தல் என்ற சமாதான தர்மங்களிற்கூடாக, மனிதோதய மேம்பாட்டிற்குள் அழைத்து செல்வோம்.

முரசு:- “என்கடன் பணி செய்து கிடப்பதே” தாரக மந்திரம் :-“யாதூஊம் மூரே – யாவரும் கேளிர் ” இலச்சினை :- ரிசபம் கொடி வர்ணம்:-இளம் சிவப்பு,நீலம் ,பச்சை ,மஞ்சள் ,ஊதா மூலைவர்ணங்கள். தத்துவம் :-பகவத் கீதை.திருக்குறள் ,பெரியபுராணம் ,கந்தபுராணம் அடிச்சுவடு :- சனாதன தர்மம்-மகாத்மாகாந்தி -ஆபிரகாம்லிங்கன் -டால்ஸ்டாய் தலைமை நிர்வாகமையம் :-வட இலங்கை சர்வோதய சேவை வளாகம் புங்குடுதீவு.

சமூக பணிகள்

குடியேற்றத்திட்டம்

1977-1983களிலே மலையக மற்றும் தென்பகுதி வாழ் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த வேளை கேரதீவுப் பிரதேசத்தில் முகாமிட்டு தற்காலிக்குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததுடன் தொடர்ந்து ஜெயபுரம், திருக்கேதீச்சரம் போன்ற இடங்களில் இவ்வாறான மக்களை குடியேற்றினார்.

அதனை தொடர்ந்து 1983ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களை காங்கேசன்துறையில் முகாமிட்டு கப்பலில் அகதியாய் வந்த மக்களுக்கு உணவு ,நீர் வழங்கி யாழ்ப்பாணத்துக்கு திருப்பி அனுப்பும் சேவையை அரசுடன் சேர்ந்து சேவையாற்றியதில் சர்வோதயமானது பூரண பங்களிப்பை நல்கியது.

1990களில் இடம்பெயர்வின் போது ஊர்காவற்றுறை ,மண்டைதீவு ,வேலணை ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து புங்குடுதீவு வந்த மக்களுக்கு உணவு,உடை,உறையுள் என்பவற்றை கொடுத்து தன்னாலான முழு பங்களிப்பையும் சர்வோதயம் வழங்கியது.

புங்குடுதீவு .கேரதீவு எனும் இடம் 1972-1974 ஆண்டுகளில் கடலோடு கடலாக மாறும் அபாயத்திலிருந்த பூமியை மீட்டெடுத்து காலம் காலமாக நடைபெற்று வந்த மண்ணகழ்வைத் தடுத்து மக்கள் குடியிருப்புக்கு ஏற்றவாறு காடுகளினை அழித்து களனியாக்கி அரசாங்கத்துடன் இணைந்து 117 குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மக்கள் குடியேற்றத்துக்கு வித்திட்டது. இதை ஏழுத்து வடிவில் மிக சுருக்கமாக கூறிவிட்டாலும் பல்வேறு சவால்களையும் ,அழுத்தங்களையும்,எதிர்பார்புகளையும் எதிர்கொண்டு மக்களின் நல்வாழ்விற்காக எடுத்த முயற்சி இன்று கேரநகராக புத்துயிர் பெற்று நிற்பதை காணமுடிகிறது.

சிரமதானப்பணி

மரம் நடுகை

கழுதைப்பிட்டி தொடக்கம் வங்களாவடிச் சாந்தி வரை போக்குவரத்துப் பாதையை அகலிப்புச் செய்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மக்களின் துயரங்களைத்துடைத்து மட்டுமல்லாது 50வருடங்களாக யாருமே பயணிக்க முடியாத வகையிலே இருந்த காணியை மீட்டெடுத்து மணியகாரன் வீதி என்ற பாதையை திறந்து வைத்து தொழிற் தேவை வாழ்க்கைத் தேவை என்பன நிறைவுசெய்யப்பட்டன.புங்குடுதீவின் பிரதான வீதி போக்குவரத்து வசதி துப்பரவு செய்யப்பட்டது. இத்தகைய செயற்பாட்டிற்கு முன்னின்று உழைத்து வட இலங்கை சர்வோதயமாகும்.
சுகாதாரப்பணி

புங்குடுதீவு வாழ் மக்களின் நோயை தீர்ப்பதற்காகவும் கடுபடுத்துவதற்காகவும் பல்வேறு வைத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டன . அந்த வகையிலே குறிகட்டுவான்,இறுப்பிட்டி,வல்லன் ,ஊரதீவு,போன்ற இடங்களைக் குறிப்பிடலாம் அத்தோடு தாய் சேய் மரண வீதத்தைக் குறைக்கும் நோக்கத்துடனும் பல்வேறு சேவைகளை ஆற்றும் முகமாகவும் பல்தரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை வைத்து மக்களை மரண வீதத்தில் இருந்து காப்பாற்றிய பெருமை வட இலங்கை சர்வோதயத்தையே சாரும்.

அதனை விட தொழுநோய், காசநோய் என்பன ஏற்டபட்ட வேளை தடுப்பூசிகள் மருந்துகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்தோடு பல்வேறுபட்ட நோய்களை தீர்க்கும் நோக்கத்திலே ஐந்து தொண்டர்களை இந்தியாவிலுள்ள செங்கல்பட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன .

அப் பயிற்சியின் பயனாக பல்வேறுபட்ட பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன . அதனாலே புங்குடுதீவில் 72 தொழுநோயாளிகள் அடையாளங் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். அத்தோடு சூழல் சுகாதாரத்தை பேணும் நோக்கத்துடன் மலசல கூடங்களை அமைத்து கொடுத்தது .

விவசாயப்பணி

1977ம் ஆண்டிலிருந்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக நெற்காணிகளைப் பயன்படுத்தி 200 பரப்பு காணியில் நெல் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களுக்கு விசேட பயிற்சி வகுப்புகள் நடாத்தியதோடு விதைகளை இலவசமாக வழங்கி திட்டம் முழுமையாக பயனளிக்கக்கூடியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தோடு கேரதீவு கிராமத்திலே பனை நீர்பாசனை முறையிலான தென்னை நடுகையையும் தலைமன்னார் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட வீரியம் கொண்ட பனை விதைகளை நாட்டி கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிலைக்கு உருவாக்கப்பட்டுள்ளமையை நாம் காணலாம்.விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் 200 க்கு மேற்பட்ட தென்னை பல நூறு நிழல் தரு மரங்கள்,வாழை கொய்யா மாதுளை போன்ற பயன் தரு மரங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.சாவகச்சேரிப் பகுதியிலிருந்து 3000 இலாந்த இன முருங்கத்தடி பப்பாசி போன்றவை புங்குடுதீவுப் பிரதேசத்திற்கு பெற்று கொடுத்து அவர்களின் பயிர்ச் செய்கையையும் ஊக்கப்படுத்தி பெரும் நன்மைகளை பெற்று கொடுத்தது .
கல்விப்பணி

மாணவர்களின் கல்வியறிவு வீதத்தை மேம்படுத்தும் நோக்காக எட்டு கிளை நூலகங்களை உருவாக்கி கொடுத்தது சர்வோதயம். “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் ” என்ற கருத்தை இம் மண்ணிலே நிலை நிறுத்தி அதற்கான பயனையும் திருப்தியையும் மக்களுக்கு பெற்று கொடுக்க முன்னின்று செயற்பட்டது. அத்தோடு எமது கிராமத்திலே உள்ள சிறார்களின் முன்னேற்றத்துக்கும் அவர்களை தலை சிறந்த மாணாக்கர்களாக உருவாக்கும் நோக்கிலேயும் கல்வியிலே பின்னடைவு ஏற்பட்டிருக்கும் மாணவர்களை கல்வி மான்களாகத் திகழ வேண்டும் என்பதற்காக முன்பள்ளி ,மாலைநேர வகுப்பு அறநெறிப்பாடசாலை போன்றனவும் அமைக்கப்பட்டன.

அதனைவிட இன்றைய உலகிலே கணனி அறிவு மிக அவசியம் என்று கருதி அதனையும் மாணவர்களுக்கு பெற்று கொடுக்கும் வகையிலே கணனி வகுப்புகள் சர்வோதயத்திலும் நடாத்தப்பட்டு வருகின்றன.அதுமட்டுமன்றி புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவப்படுத்தி பல்வேறுபட்ட உதவி திட்டங்களையும் வழங்கி வருகின்றது.அத்தோடு கா.பொ.தா சாதாரண தரம் சித்தி பெற்று உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும்,பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கும் கல்வி தேவையை ஆண்டாண்டு தோறும் பூர்த்தி செய்து வருகின்றது.

அதனைவிட முத்தமிழ் வளர்ச்சியை கிராமங்களில் வளர்க்கும் முகமாக நீதி நூல்கள் முற்றோதல்,கிராமவிழா,

அறநெறிப்பாடசாலை நடாத்தி போட்டி பரீட்சை வைத்து பரிசில் வழங்கி கெளரவிக்கின்றது.இதனால் மாணவர்களின் ஆளுமை வளர்வதுடன் தலைமைத்துவ பண்பயும் வளர்த்து செல்கிறது.

சேமிப்புத்திட்டம்

பல்வேறு கிராமங்களிலும் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கற்றனன்நஷனல் வங்கி போன்றவற்றுடன் சிறுவர்களை இணைத்து ஏறத்தாழ 1000 சிறுவர்களுக்கு சேமிப்புப்புத்தகம் திறக்கப்பட்டு சேமிப்பு பழக்கத்தை மென்மேலும் விருத்தியடைய முன்னின்று உழைத்தது மட்டுமன்றி சேமிப்பு பழக்கத்தை சிறு துளி பெருவெள்ளம் போன்று உருவாக்கிப் பெற்றுக்கொடுத்தது.
நீர் வழங்கல்
குடிநீர் விநியோகம்
நீர் தாங்கி

வறட்சிக் காலத்திலே மக்களுக்கு குடிநீர் தேவை என்பதைக்கருத்திற் கொண்டு சாட்டிக் கிராமத்தில் கிணறு வெட்டி அங்கிருந்து பெளசர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு பொது இடங்களிலே கிணறுகள் அகழ்ந்து நல்ல தண்ணீர் பெற்றுக்கொடுத்து மக்களின் தாக்கங்களை தீர்த்ததோடு குடிநீர் தேவையை அன்றாடம் பூர்த்தி செய்கின்றது. அதனை விட கோமாதாக்களின் தாக்கங்களை தீர்க்கும் பொருட்டு புங்குடுதீவிலே பத்து தண்ணீர் தொட்டிகளை அமைத்தது .
முதியோர் கெளரவிப்பு

“மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்”என்ற வாசகத்திற்கிணங்க முதியோர்களின் அறிவுரைகளும் நற் கருத்துக்களும் எம் சமூகத்திற்கு அவசியமென கருத்தில் கொண்டு அவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது கடந்த ஆண்டுகளிலே நடத்தப்பட்டது .என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பொதுநிலையங்கள் அமைத்தல்

மக்களின் அன்றாட தேவைக்காக மண்டைதீவு,புங்குடுதீவு,வேலணை ,சரவணை தொல்புரம் போன்ற இடங்களில் பொதுநிலையங்களை அமைத்து மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

கலை கலாச்சார ஆன்மீக நிகழ்வுகள்

யோகர்சுவாமியின் அஸ்தி வைத்துக் கட்டபட்ட அவருடைய கோயிலிலே அன்னதான நிகழ்வுகள் பூசை வழிபாடுகள்,கூட்டுப் பிரார்த்தனை ,நற்சிந்தனை என்பன நடாத்தப்பட்டு வருவதோடு ஏனைய கோயில்களிலும் அன்னதான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் ஆயிலிய நன்னாளிலே அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் நிலையத்திலுள்ளோருக்கும் ஏனையோருக்கும் மதிய போசனம் வழங்கி வருவது சிறப்பானதொரு செயலாகும்.

மற்றும் ஞாபகார்த்த திதியை முன்னிட்டு ஆத்ம சாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதோடு விசேட சிறப்பான தினங்களிலே அனுட்டிப்போரின் நாமங்களைக் கூறி பிரார்த்தனை செய்யப்பட்டு வருகின்றது.

பொருளாதார முயற்சி

மக்கள் தரமான பொருட்களையும் நியாயமான விலையில் பெற்று பயன் பெறுவதற்கு பலசரக்கு விற்பனை நிலையம் ,புடைவைக்கடை,உள்ளூர் உற்பத்தி நிலையங்கள் என்பனவும் இயங்கி வருகின்றன.

அதனை விட புங்குடுதீவில் கிடைக்கக்கூடிய பனை வளத்தை பயன்படுத்தி வருமானத்தை சுயமாக பெற்றுக்கொள்வதற்கு தீவக கல்வி வலய அனுசரனையுடன் பன்ன வேலை பயிற்சி அழிக்கப்பட்டு வருகின்றது .

தீவக கல்வி வலயத்தின் முறைசாராக் கல்வி பிரிவின் கீழ் சமூக கற்கை நிலையம் இயங்கி வருகின்றன .

இதிலே பெண்களை தமைத்துவமாக கொண்ட குடும்பத்தில் இருந்து 20 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு உள்ளூர் மூல பொருட்களை பயன்படுத்தி உணவு பதனிட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரிசிமா ,வடகம் ,புளுக்கொடியல்,மோர்மிளகாய், ஓடியல்மா போன்ற உற்பத்தி பொருட்கள் மக்கள் மத்தியிலே சிறந்த வரவேற்பை பெற்றதாகும்.

மக்களின் மனம் கவர்ந்த இடமாகவும் என்றுமே மறக்க முடியாத ஒரு நிறுவனமாகவும் உள்ளது .ஏனெனில் கிராமங்களின் வளர்ச்சி அபிவிருத்தியையும் மக்களின் வாழ்க்கையில் நல் கீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1978ம் ஆண்டு “அணையா விளக்கு ” ஏற்பட்டு இற்றைக்கு வரை 35 ஆண்டுகள் ஒளிகாழாது பிரகாசித்துக்கொண்டிருப்பது ஓர் அதிசயிக்கத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமான ஓர் அற்புத தீபமாகும். 1991 இடப்பெயர்வு காலத்திலும் கூட இவ் விளக்கை காப்பாற்றவென எமது நிலையத்தின் பொறுப்பாளரும் ஜீவதானியுமான செல்வி .க .புஸ்பமணி அவர்கள் இடம்பெயராது புங்குடுதீவிலே தங்கியிருந்து அணையா விளக்கையும், நிலையத்தில் உள்ள யோகர் சுவாமியின் தீபத்தையும்,நிலையத்தில் பிரதிஸ்டை செய்துயப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வரும் சிவலிங்கப்பெருமானின் தீபத்தையும் காழாது காப்பாற்றி வந்துள்ளார்.

சர்வோதயத்தின் பணிகள் சிறக்கவும் வளரவும் அன்றும் இன்றும் நிதியுதவியை நல்கி நிற்பவர்கள் புங்குதீவை சார்ந்த நல்லுள்ளங்களும் நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் பங்கெடுத்து சர்வோதயத்தில் பணியாற்றி ஒத்துழைப்பு நல்கி தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நல்லிதயங்களும் ஆகும் .

இவ்வாறான சிறப்பான அரச சார்பற்ற நிறுவனமாகவும் மக்களின் உயிர் தோழனாகவும் வீற்றிருந்து அவர்களின் எண்ணங்களுக்கு குரல் கொடுத்து அளப்பெரும் சேவை ஆற்றி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here