அபூர்வ வாணா் சகோதரர்களுக்கு கலையரங்கம் அமைப்போம்

0
694

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் மேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் புங்குடுதீவுக் கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும்.  நாற்புறமும் கடலால் சூழப்பட்டு 1950 களின் முற்பகுதி வரை கடல்வழி போக்குவரத்தின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மக்கள் தமது போக்குவரவினை மேற்கொண்டிருந்தனா். 36 சதுர மைல் பரப்பளவுள்ள இத்தீவில் 1991ம் ஆண்டு 20,000 மக்கள்  வாழ்ந்து வந்த நிலையில் அவ்வாண்டில் நிகழ்ந்த மாபெரும் இடம்பெயா்வின் விளைவாக மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றபோதிலும் அண்மைக்காலத்தில் மேற்கொண்டு வரும் பல அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள்  மீள்குடியேற்றத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.  மிக நீண்ட காலமாக பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியாக சிறப்பான நிலையிலிருந்த இத்தீவில் பெருமளவிலான விவசாய செயற்பாடுகளின் மூலமே மக்கள் தமது  பொருளாதாரத்தை மேற்கொண்டு வந்துள்ளனா்.  அது மட்டுமல்லாது  20ம் நுற்றாண்டின் ஆரம்ப காலங்களிலிருந்து புலம்பெயா்ந்து தென்னிலங்கையிலும், வெளிநாடுகளிலும் பொருளாதாரத் தேட்டத்தை பெற்ற பலா் புங்குடுதீவு கிராமத்திற்கு வலுச்சேர்த்தனா் எனலாம்.

 

இந்நிலையில் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளா்ச்சி கருதி கிராமத்தில் பல உத்தமா்கள் தோன்றி கிராமத்தின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளனா். கிராமத்தின் வளா்ச்சி குறிப்பாக கல்வி, போக்குவரத்து ஏனைய பிரதேசங் களுடனான தொடா்புகள், சுகாதாரம் குறிப்பாக மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தன்னலம் கருதாது பொது நலனுடன் பல சமூகப்பணியாளா்கள் புங்குடுதீவுக் கிராமத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளனா். இவா்களில் அமரா்களான க.அம்பலவாணா் (பெரியவாணா்), ச.அம்பலவாணா் (சின்னவாணா்), வ.பசுபதிப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா். இவா்களை அடியொற்றி பின்னாளில் பலா் இக்கிராமத்தில் தோன்றி கிராமத்தின் வளா்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர். இருப்பினும் வ.பசுபதிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவுக் கிராமத்தின் கல்வி வளா்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.

அபூர்வ அம்பலவாணா்கள் யார்?

புங்குடுதீவு மடத்துவெளிக் கிராமத்தில் 1890ம் ஆண்டு கந்தப்பர் குடும்பத்தில் பெரியவாணா் என அன்புடன் அழைக்கப்படும்  க.அம்பலவாணரும் சின்னவாணா் என இதய சுத்தியுடன் அழைக்கப்படும் சண்முகம் குடும்பத்தில் உதித்த ச.அம்பலவாணா் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரா்களாவார். இவ்விருவரும் மடத்துவெளி அமெரிக்கன் மிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுாரி. யாழ்ப்பாணக் கல்லுாரி ஆகியவற்றில் கல்வி பயின்று மலாயா சென்று உயா் பதவி வகித்தவா்கள். ஆங்கிலேயா் ஆட்சியில் மலாயாவில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்து வளா்ச்சி கண்டார்களோ அதே போல தாய் மண்ணின் வளா்ச்சிக்காக தமது இறுதி மூச்சு வரை செயற்பட்ட அபூர்வ வாணா்களே இவா்களாவார்கள். குறிப்பாக தாம்போதி. கல்விச்சாலைகள். மருத்துவ நிலையங்கள், தொலைத்தொடா்பு மற்றும் அஞ்சல் நிலையங்கள், குழாய் நீர்த்திட்டங்கள், கடல்தடுப்பு அணைக் கட்டுக்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற பலவற்றை இக்கிராமம் பெற வேண்டுமென அதற்காக உழைத்து பெருவெற்றி கண்டவர்களே வாணா் சகோதரா்கள். இதற்தாக புங்குடுதீவு மலாயா ஐக்கிய சங்கத்தை நிறுவி மலாயாவிலிருந்து பெருநிதி பெற்று தாயகத்தின் வளா்ச்சிக்கு உழைத்தவா்கள்.

கல்வியாலும், உயா்தொழிலாலும் தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இவா்கள் தாயகத்தில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி அப்போதைய அரசாங்கத்திற்கு  தொடா்ச்சியான மகஜா்களை அனுப்பியதன் விளைவாக பிரித்தானிய அரசு புங்குடுதீவுக் கிராமத்தின் வளா்ச்சிக்கு உதவ முன்வந்தது. 1926ல் அகில இலங்கை புங்குடுதீவு மகாசேவா சங்கம் என்ற அமைப்பொன்றை ஸ்திரப்படுத்தி இதனுாடாக அரசிற்கு தொடா்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தனா்.

பெரியவாணா் புங்குடுதீவு மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அரச போக்குவரத்து துறையினருக்கும், அரசபிரதிநிதிகளுக்கும், அப்போதைய ஆளுனருக்கும் தொடர்ச்சியாக கொடுத்து வந்த வற்புறுத்தலின் பயனாக 1935ம் ஆண்டு இலங்கை சட்ட நிரூபண சபையில் புங்குடுதீவுக்கு தாம்போதி அமைப்பது தொடர்பான பிரேரணை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக சட்ட நிரூபண சபையில் அங்கம் வகித்த கண்டி, கொழும்பு, காலி பிரதிநிதிகளிடமும், ஆங்கிலேயப் பிரதிநிதிகளிடமும் தொடர்ச்சியாக வற்புறுத்தியதன் விளைவாக அவ்வாண்டு புங்குடுதீவு-வேலணை தாம்போதி அமைக்கும் பணி ஆரம்பமாகியது. 5 கிலோ மீற்றர் நீளமான இந்த தாம்போதியை நிர்மாணிப்பதற்கு புங்குடுதீவு, வேலணை பிரதேசங்களில் இருந்து கல் அகழப்பட்டு மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டே  அமைக்கப் பட்டுள்ளது. 17 ஆண்டுகளில் தாம்போதி அமைக்கும் பணி நிறைவுற்று 1952ம் ஆண்டு தாம்போதியின் மேலால் மக்கள் பயணித்த மாபெரும் சேவையைச் செய்த வாணர் சகோதரர்களுக்கு கலையரங்கம் ஒன்றை நிறுவி அவர்கள் நாமம் வாழ அவர்களுக்கு காணிக்கை ஆக்குவதே புங்குடுதீவு மக்கள் மட்டுமன்றி தீவக மக்கள் செய்ய வேண்டிய பணிகளில் தலையாய கடமையாகும்.

வாணா் சகோதரா்கள் மேற்குறித்த தாம்போதியை செய்து தராவிடில் புங்குடுதீவு மக்கள் மட்டுமன்றி நெடுந்தீவு மற்றும் நயினாதீவு மக்களும் இன்று நெடுந்துாரம் கடற்பயணம் செய்து ஊர்காவற்துறை ஊடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைய வேண்டிய நிலை தொடா்ந்திருக்கும். அவா்களது போக்கு வரவுக்கான நேரத்தினை குறைப்பதற்குப் பாடுபட்ட பெருந்தகைகளை தீவக மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என நம்புகின்றோம்.

வாணா் சகோதரா்கள் புங்குடுதீவுக் கிராமத்தில் இரு விருட்சமாகவிருந்து பண்ணைத் தாம்போதியினை அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏனைய தீவுப்பெரியார்களுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக அத் தாம்போதியும் பூர்த்தி செய்யப்பட்டு 1960களின் முற்பகுதியில் போக்குவரத் திற்காக திறந்து விடப்பட்டதன் விளைவாக புங்குடுதீவிலிருந்து தலைநகா் வரை வீதிப்போக்குவரத்தினுாடாக பயணிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தவா் களில் வாணா் சகோதரா்கள் முக்கியமானவா்கள் என்றால் மிகையாகாது.

இவை தவிர ஆங்கிலக்கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 1946ம் ஆண்டு புங்குடுதீவு மகா வித்தியாலயம் நிறுவுதல், வைத்தியசாலையினை நிறுவுவதற்கு முன்னின்றமை, அஞ்சல் அலுவலகம்  தரமுயர்த்தப்பட்டு 1946ல் தொலைபேசிச் சேவையை ஆரம்பித்து வைத்தமை, கிராமத்து வீதிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகளை கட்டியமை, விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயற்படுத்தியமை போன்ற பல சேவைகளை எமது  கிராமத்துக்குத் தன்னலமின்றி பொது நலத்ததுடன் ஆற்றிய வாணா் பெருந்தகைகளை நினைவு கூா்ந்து கலையரங்கம் ஒன்றை நிறுவுவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அவர்களது வழித்தோன்றல்களான எம்மவர்களின் தார்மீகக் கடமையுமாகும்.

 

பெரியவாணா் தீவுப்பகுதி மக்களின் உன்னத வாழ்வுக்கு தம்மை அா்ப்பணித்த நிலையில் மேலும் தீவகத்திற்கு அரசியலினுாடாக பணியாற்றுவதன் வாயிலாக பிறந்த மண்ணுக்கு மேலும் பல செயற்றிட்டங்களை செய்யும் நோக்கில் 1947ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் வெற்றி பெற முடியவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகள் அயராது கண்துஞ்சாது உழைத்த உத்தமன், நாட்டுக்காகவே வாழ்ந்த செம்மல், தீவகத்திற்கு ஒளி ஊட்டிய தானைத்தலைவன் 1948ம் ஆண்டு எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்புக்கு வைத்தியத்திற்காக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனின்றி இறைவனடி சேர்ந்தார். அதனைத் தொடா்ந்து சின்னவாணா் தாம் மேற்கொண்ட திட்டங்களைச் செயற்படுத்தி  புங்குடுதீவுக் கிராமத்தின் வளா்ச்சிக்காக தொடா்ந்து உழைத்தார். இவா் நீண்டகாலமாகக் கிராமச் சங்கத் தலைவராகவிருந்து புங்குடுதீவுக் கிராமத்தின் வளா்ச்சிக்கு அயராது பாடுபட்டவா்.

 வாணா் சகோதரா்களுக்கு ஏன் கலையரங்கம்?

புங்குடுதீவுக் கிராமத்தின் வளா்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய வாணா் சகோதரா்கள் எமது கிராமத்தில் பிறந்திருக்காவிட்டால் இன்றும் நாம் தோணியிலேயே பயணம் செய்து கொண்டிருப்போம். எமது  கிராமத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளா்ச்சியானது பின் தங்கியதாகவே காணப்பட்டிருக்கும். எமது உறவுகளில் பெரும்பாலானோர் புலம் பெயா்ந்து வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. குறிப்பாக கல்வி வளா்ச்சியானது பின் தங்கியதாகவே இருந்திருக்கும். நன்னீா் வளப்பற்றாக்குறையினால் அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கும். ஒட்டு மொத்தமாக நோக்கின்பல்வேறுதுறைகளில் பின் தங்கியவா்களாகவே இருந்திருப்பா்.
இவ்வாறாக உண்மையான பொதுநலவாதிகளாக விளங்கிய வாணா் சகோதரா்கள் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்த தீா்க்கதரிசிகளாகவே வாழ்ந்துள்ளனா். அத்தகைய பெருமகான்களை நினைவு கூர்ந்து புங்குடுதீவு கிழக்கில் பிரதான வீதியில் அம்பலவாணா் அரங்கு ஒன்றினை 1977ம் ஆண்டு நிறுவி கோலாகலமாக 24.06.1977ம் திகதி கிராமத்து மக்களால் மாவட்டத்தின் உயா்பதவி வகித்தவர்களின் முன்னிலையில்  திறந்தது வைக்கப்பட்டது.

வாணா் சகோதரா்களின் சேவையினை எதிர்கால மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அவா்களுக்கு சிலை வைத்தல், மடத்துவெளி தாம்போதி ஆரம்பிக்கும் இடத்தில் வளைவு ஒன்றினை நிறுவுதலுடன் அவா்களின் நினைவாக கலையரங்கம் ஒன்றினை நிறுவுதல் போன்ற பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென சமூகப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், பொதுமக்களில்  பலரும் தொடா்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளனா். அதன் பெறுபேறாக கனடாவில் வாழ்ந்து வரும் எமது கிராமத்து உறவுகள் முதலில் வாணா் நினைவாக கலையரங்கம் ஒன்றினைக் கட்டி புங்குடுதீவுக் கிராமத்து மக்களின் நீண்டகால கனவினை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளனா்.

இந்நிலையில் புங்குடுதீவுக் கிராமத்தினா் மட்டுமல்லாது தீவகத்தைச் சேர்ந்த குறிப்பாக நயினாதீவு, நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களின் பங்களிப்புடன் கலையரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதாவது வாணா் சகோதரர்களினால் பயன் பெற்றவா்கள் நாம் எல்லோருமேயாவோம். அவா்கள் இல்லாவிடின் நாம் இன்றும் நீண்ட கடற்பயணத்தையே மேற்கொண்டிருப்போம்.

வாணா் நினைவாக கலையரங்கம்அமைக்கும் பட்சத்தில் தீவகத்தின் கலை, கலாசார, பாரம்பரியத்தை முன்னெடுக்கும் நிலையமாக இது அமையும். குறிப்பாக கவின்கலை வளா்ச்சிக்கு பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாது மக்களின் அறிவுப்பசியைப் போக்க  கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், தொடர் சொற்பொழிவுகள், கலைவிழாக்கள் நடாத்துவதற்கு உதவியாக இக்கலையரங்கம் அமையும். பாடசாலை மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும்  பேருதவியாக இருக்கும்.

எனவே. வாணா் சகோதரா்களின் சமூகப்பணியின் சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்க, எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் பொக்கிசமான கலையரங்கத்தின் நிர்மாண பணி சிறப்புற இடம்பெற எம் உறவுகள் யாவரும் இணைந்து பங்காற்றுவோம்.

வாழ்க வாணா் நாமம்!  வாழ்க புங்குடுதீவுக் கிராமம்!!

பேராசிரியா் கா.குகபாலன்

ஓயு்வுநிலைப் பேராசிரியரும், துறைத்தலைவரும்

புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அம்பலவாணர் நினைவு மண்டபம் பற்றி சிலவிளக்கங்கள்

கேள்விகள் :

எதற்காகப் பெருந்தொகையான பணத்தை செலவழித்து இம்மண்டபத்தைநிறுவ வேண்டும்? இம் மண்டபத்தினால் என்ன பிரயோசனம்? நானூறு பேர்இருக்கைக்கு அவசியம் என்ன? மக்கள் இதனைப் பாவிப்பார்களா?

விளக்கம் :

பெரியவாணர் சின்னவாணர் என அழைக்கப்பட்ட திருவாளர்கள் கந்தப்பர்அம்பலவாணர், சண்முகம் அம்பலவாணர் 1920 லிருந்து 1953 வரை ஆற்றியசேவைகளை அக் காலப் பின்னணியிலிருந்து நாம் நோக்க வேண்டும். எதுவிதவசதிகளுமற்ற கஷ்டமான காலகட்டத்தில் தானும் தன்பாடும் என்று இல்லாமல்புங்குடுதீவு மக்களின் நலன்களுக்காக இவர்கள் உழைத்திருக்கின்றார்கள்.

இவர்கள் இல்லாது போனால் இன்றும் நாம் தோணியிலும். பாதையிலும் தான்பயணித்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும். மடத்துவெளிக்கரையிலிருந்து வற்றிய கடலினூடாக மூட்டை முடிச்சுகளுடன் நடந்து, பின்தோணியில் ஏறி வற்றிய மறுபக்கக் கடலில் இறங்கி, மீண்டும் கடல்சேற்றினூடாக நடந்து, வேலணைக் கரையை அடைய வேண்டும். பின்புபண்ணையடியில் பாதை மூலம் ஆழ் கடலைக் கடக்க வேண்டும். 1953க்கு முன்பிறந்தவர்களைக் கேட்டால் அவர்கள் பட்ட கஷ்டத்தை. துயரத்தை நன்குஅறியமுடியும்.

பூநகரியில் மகாதேவா தாம்போதியைத் தான் அரசு கட்டவிருந்தது. ஆனால்வாணர் சகோதரர்களின் முயற்சியினாலேயே வேலணை-புங்குடுதீவுத்தாம்போதியை முதலில் கட்டுவதற்கு அரசு தீர்மானித்தது. இத் தீர்மானம் 1935 இல் சட்டசபைக் காலத்தில் (STATE COUNCIL) எடுக்கப்பட்டது. இதற்கு வாணர்சகோதரர்களின் அயராத முயற்சியே காரணமாய் இருந்தது. (தராகி சிவராம்எழுதி அயிலேன்ட் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையில் இது பற்றிய விபரம்உள்ளது ).

பல சிங்கள சட்ட சபை அங்கத்தவர்களைப் பெரிய வாணர் சந்தித்துஅவர்களைத் தனது முயற்சிக்கு ஆதரவளிக்க வைத்து, வாணர் தாம்போதிபிரேரனையை 1935 இல் நிறைவேற்ற வைத்தார்.

அப்பொழுதிருந்த சனத்தொகை புங்குடுதீவில் மிகச் சொற்பமே. அவர்களுக்காகஏன் அரசு பெருந்தொகைப் பணத்தை செலவழிக்க வேண்டும்?அச்சனத்தொகையில் பிரயாணம் செய்பவர்கள் மிகச் சொற்பமே.இவர்களுக்காக ஏன் அரசை செலவழிக்க வைத்தார்கள்? இவர்களுக்காக ஏன்வாணர் சகோதரர்கள் முழு மூச்சாக தாம்போதி அமைக்க ஈடுபட்டார்கள்?

பிரயாணம் செய்வது சொற்ப மக்கள். பெருந்தொகைப் பணம் செலவழிப்பு.அதுவும் 1935இல் தேவையற்ற விடயம் என இவர்கள் விட்டிருக்கலாமே.தூரநோக்குப் பார்வை அவசியம் என்பதை இவர்களது செயல் எமக்குஉணர்த்தவில்லையா? தற்கால மக்கள் தொகை செலவழிக்கப்படும் பணம்என்பதை வைத்து நாம் தீர்மானம் எடுப்பதைத் தவிர்த்து எதிகாலத்தை சிந்தித்துநாம் செயற்பட வேண்டாமா? தூர நோக்கு எமக்கும் வேண்டாமா?

நாம் இவ் ஞாபகார்த்த மண்டபத்தைக் கட்டாது போனால் வாணர்சகோதரர்களையும் புங்குடுதீவையும் அறியாத நம் எதிர்காலச் சந்ததியினர்இதனைச் செய்வார்களென எதிர்பார்க்க முடியுமா?

இத்தகைய அளப்பரிய சேவை செய்தவர்களுக்கு புங்குடுதீவு மக்களாகிய நாம்என்ன செய்தோம்? 1947இல் தேர்தலில் போட்டியிட்ட போது பெரிய வாணருக்குமூன்றாவது இடத்தையே கொடுக்க முடிந்தது. அவருக்குக் கிடைத்த வாக்குகள்3701 மட்டுமே.

தற்பொழுது உள்ள அம்பலவாணர் திறந்த வெளி அரங்கு 1977லேயேஎம்மவர்களால் கட்ட முடிந்தது. இதற்காகப் பாடுபட்டவர்களுள் காலம்சென்றவித்துவான் சி. ஆறுமுகம், வர்த்தகர் க.கனகரத்தினம், மற்றும் அதிபர்மு.இராமலிங்கம், சங்கீதபூஷணம் பொன் சுந்தரலிங்கம், சட்டத்தரணிமு.நேமிநாதன் ஆகியோர்களது பெயர்கள் மட்டுமே ஞாபகத்துக்கு வருகின்றன…ஏனையவர்கள் மன்னிக்கவும்.

திறப்புவிழாவின்போது புங்குடுதீவின் அனைத்துப் பகுதி மக்களும்மாணவர்களும். யாழ் கலைஞர்களும் பங்குபற்றினார்கள். விழா மலரும்வெளியிடப்பட்டது. இத்தாம்போதியினால் பயனடையும் ஏனைய ஊர் மக்களோஅல்லது புங்குடுதீவு மக்களோ 1977வரை வாணர் சகோதர்கள் ஞாபகார்த்தமாகஎதையும் செய்யவில்லை என்பது மனவருத்தத்துக்குரிய விடயம்.
இப்பொழுது சிதைவடைந்திருக்கும் இம்மண்டபத்தை தூர நோக்கில் சிந்தித்துபுதுப்பித்துக் கட்டுதல் எம் மக்களது தலையாய கடமையாய் உள்ளது.

வாணர் சகோதரர்களது மாபெரும் பணியை நாம் செலவழிக்கப் போகும்பணத்தொகையை வைத்து தீர்மானிக்க முயல்வது நாம் அவர்களுக்குச் செய்யும்அவமரியாதையாகும்.

இன்று புங்குடுதீவில் மக்கள் தொகை குறைவாக இருக்கலாம். ஆனால்எதிர்காலத்தில் இத் தொகை கூடாதா? தொகை அப்படியேதான் இருக்கப்போகின்றதா? அப்படியே இருப்பின் நாம் ஏன் பெருந்தொகைப் பணத்தைச்செலவழித்து வெவ்வேறு சேவைகளில் தற்போது ஈடுபடுகின்றோம். 1000 –2000தொகையான மக்கள்தான் தற்பொழுது 5000 – 6000 என உயர்ந்துள்ளது.எதிர்காலத்தில் இத்தொகை ஏன் பெருகாதென நாம் எண்ணவேண்டும். நமக்குதூர நோக்குப் பார்வை வேண்டாமா?

புங்குடுதீவைப் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றப் புலம் பெயர்ந்த நம்மக்களும் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட நலன்புரி மன்றங்களும் இதுநாள்வரைஈடுபட்டு கொண்டுதானே வருகிறார்கள். மகாவித்தியாலய சுற்று மதில்கட்டுவதற்கு ஆறு மில்லியன் ரூபாய்க்களை பிரான்ஸ் புங்குடுதீவுச் சங்கம்செலவழித்துள்ளது. இதற்குமுன்பு இப்பாடசாலையின் தெற்குப் பக்க மதிலைக்கட்ட லண்டனைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் அவர்கள் ஐந்து லட்சம் ரூபாயைசெலவழித்தார்.

மற்றும் பலரும் சங்கங்களும் பாடசாலைகள், தையல் வகுப்புகள், வாசிகசாலைஅமைத்தல், வைத்தியசாலைக்கு உதவி, தொழில் செய்வதற்கான வசதிகள்எனப் பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது விவசாயப்பண்ணை. பால்பண்ணை என்பனவற்றை உருவாக்க முனைகின்றனர்.இவைகள் எல்லாம் தூர நோக்கு உள்ளவர்கள் மேற்கொள்ளும் முயற்சி.பாராட்டத்தக்க செயல். இழந்துபோன புங்குடுதீவை மீள்கொண்டுவருவதற்கான பெரும் செயல்கள்.

இதேமாதிரி கலை கலாச்சார கல்வி அறிவியல் துறைகளில் முன்னேற்றம்கொண்டு வருவதற்கான முயற்சியின் அடித் தளமே இந்த ஞாபகார்த்தமண்டபம். நினைவு மண்டபம் ஓரிரு நாள் நிகழ்வுகளுக்காகக் கட்டப்படுவதல்ல.

பலன்கள்:

இன்றைய இளந்தலைமுறையினர், எதிர்காலச் சந்ததியினர், வாணர்சகோதர்களை நினைவு கொள்வதோடு மதிப்பதோடு அவர்களது வழியில்பயணிப்பதற்கான ஓர் வழிகாட்டி இந்த ஞாபகார்த்த மண்டபம்.

ஐம்பது, நூறு வருடங்களின்பின் வாழ்பவர்களுக்கு நம் முன்னோர்கள்இப்படியெல்லாம் சேவை மனப்பான்மையோடு வாழ்ந்துள்ளார்களே, அதேபோல்நாமும் எமது மண்ணுக்கும், மக்களுக்கும் உதவி செய்து வாழவேண்டும் எனும்மனப்பான்மையை உருவாக்கும் உந்து சக்தி இது. நாட்டுச் சேவையை பணத்தொகையைக் கொண்டு அளவிடுவது தவறு என்பதை நினைவூட்டும் ஓர்மைல்கல்.

நாளுக்கு நாள் நமது தீவு அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் எதிர்காலத்தில்எம் மக்களது தொகை பெருந்தொகையாகக் கூடும்பொழுது அவர்களின்தேவைகளைச் சந்தித்து நிறைவேற்றும் ஓர் அரங்கம் இது. மக்கள் தொகையைக்கூட்டவேண்டியது எமது தலையாய கடன். அல்லது போனால் நாம் எமதுமண்ணையே இழக்க வேண்டிவரும்.
நாம் எப்பொழுதும் சாதகமாக சிந்திக்க வேண்டுமே தவிர எதிர்மறையாகசிந்திப்பது அழகல்ல.

இம்மண்டபம் அனைத்து மக்களுக்கும் உரியதானது. சாதி, மத, பிரதேசவேறுபாடுகள் அற்று எல்லோரினதும் தேவைகளுக்கும், முன்னேற்றத்திற்கும்உதவுவதற்கான ஓர் நிறுவனம்.

எமது நிகழ்கால எதிர்கால சந்ததியினர் ஒன்று கூடவும், தமது கலை கலாச்சாரநிகழ்வுகளை நடாத்தவும், அதுபற்றிய ஆய்வும் பட்டறைகளும் நடாத்தவும், கல்விதொழில்நுட்ப கலாச்சார வளர்ச்சிக்குரிய பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஓர்மையம் இதுவாகும்.

வெளிநாடுகளிலிருந்து புங்குடுதீவின் வாழ்வும் வளமும் மீது அக்கறை கொண்டஇளம் சந்ததியினர் புங்குடுதீவுக்குச் சென்று அங்கு தங்கி அங்குள்ள மக்களுக்குஉதவுவதற்கான ஓர் பல்கலை அரங்கம் இதுவாகும்.

இவ்வாறே இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் ஆற்றல் கொண்டோரும்ஒருங்கிணைந்து புங்குடுதீவு மற்றும் ஏனைய தீவுப் பகுதிகளில் வதியும்மக்களை உய்விப்பதற்கான வழிவகைகளை நடைமுறைப் பயிற்சிகளைமேற்கொள்வதற்கான ஓர் பொது மையம் இது.

எமது மண்ணினதும் ஏனைய தீவுகளினதும் பெருமைகளை உணர்த்தவும்,வாழ்ந்த வாழும் அறிஞர்கள், சங்கீத நாடகக் கலைஞர்கள் பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தொழில்அதிபர்கள், தொழில்நுட்பஇயலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள், விவசாயிகள், கடல்தொழில் புரிவோர், சிறு கைத்தொழில்புரிவோர், என்பவர்களைக் கௌரவப் படுத்தவும், ஊக்கம் ஊட்டவும்,அறிவூட்டவும், அவர்களுக்கான செயல்முறை அறிவுரைகளை வழங்கவும், ஒன்றுகூடலுக்கான நிலையம் இதுவாகும்.

இது போன்றே சுற்றியுள்ள ஏனைய தீவுப்பகுதி மக்களுக்கும் பயன்படக்கூடியபொதுநிறுவனம் இதுவாகும். முக்கியமாக வேலணை, மண்கும்பான்,அல்லைப்பிட்டி, மண்டைதீவு, ஊர்காவற்துறை, நயினாதீவு போன்ற இடங்களில்வாழும் உறவுகளும் இங்கே சங்கமிக்க முடியும்.

எமது முயற்சி நிகழ் காலத்தை மட்டு மல்லாது எதிகாலச் சந்ததியினரையும்உள்வாங்கிய ஒன்றாகும். ஏனைய பிரதேச மக்களுக்கு முன் உதாரணமாகவும்அமைவதாகும்.

பெரிதாக எண்ணுவோம்; அழகாகச் செய்வோம்; எம் மக்களையும் மண்ணையும்நேசிப்போம்; அவர்களது  வளர்ச்சிக்காகவும், நல்வாழ்வுக்காகவும் அயராதுபாடுபடுவோம்.

நன்றியுடன்.. மு.நேமிநாதன் 

வாணர் சகோதரர்களை கௌரவிப்போம்

வேணையையும் புங்குடுதீவையும் இணைத்து கடலூடே வீதி அமைத்து,கடலோடு போராடி பயணம் செய்த புங்குடுதீவு மக்களுக்கு வழியமைத்ததோடுஏனைய தீவுப்பதிகளான நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு சேர்ந்த மக்களும்பெரும் பயன்பெற்றதோடு, சிங்கள மக்கள் நாகவிகாரைக்கு செல்வதற்கும்,சுற்றுலாவிற்கு வருபவர்கள் இலகுவாக பயணம் செய்வதற்கு வித்திட்டவர்களே வாணர் சகோதரர்கள்.

புங்குடுதீவினுல் பல கிராமஙகள் உண்டு அவற்றில் பழமை என்றுமே மாறாதகிராமமான ஊரைதீவினில் பல வரலாற்று சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டஅப்பகுதியை பூர்வீகமாகவும் கொண்ட பெரியவாணர் என அழைக்கப்பட்டவே.க. அம்பலவாணர், அவரது சிறிய தாயாரின் மகனும் சின்னவாணர் எனமக்களால் போற்றப்பட்டவரும் பிரபல ஒப்பந்தகாரரும் புங்குடுதீவு கிராமசபைத்தலைவருமாக பதவி வகித்தவருமாகிய சண்முகம் அம்பலவாணர்சகோதரர்களால் பல வருட தன்னிகரில்லா சேவையினாலும் தீவுப்பகுதிகடல்கோள்களினால் பிரிந்த யாழ் குடாநாட்டோடு மீண்டும் இணைத்த பெருமைஇந்த மகான்களையே சாரும்.

இவர்கள் ஊரைதீவில் பிறந்த போதும் மடத்துவெளியில் சிறுபிராயம் தொடக்கம்வசித்தார்கள். மடத்துவெளி அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும், கோப்பாய்கிறிஸ்தவ கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்விகற்றார். அத்துடன் புங்குடுதீவு மத்தியப்பகுதிக்கு கால்நடையாக சென்றுஅப்போதைய உடையாரும், யாழ்ப்பாண கல்லூரி பழைய மாணவருமானசரவணமுத்து உடையாரிடம் ஆங்கிலம் கற்றவர். இவரது ஆர்வத்தை கண்ணுற்றஉடையார் தனது மூத்த மகளையே பெரிய வாணருக்கு கன்னிகாதானம் செய்துவைத்தார். வாணர் வசித்தவீடு பன்னிரண்டாம் வட்டாரத்தில் கவனிப்பாரற்றநிலையில் இன்றும் காட்சி அளிக்கின்றது.

இந்தோனிசியா, மலேசியா உட்பட பல நாடுகளை ஆண்ட தமிழன் ஆங்கிலேயகாலணித்துவ காலத்தில் அதேநாடுகளில் பொருளாதார சுபிட்சம் தேடிபடித்தோர் உட்பட பலர் இடம் பெயர்ந்தனர். அவர்களில் எமது கிராமத்தி லிருந்துசென்ற வாணர் சகோதரர்கள் அனுபவத்தையே மூலதனமாக கொண்டுமலேசியாவில் உள்ள வீதிகளில் வேர்வையும், இரத்தமாகவும் தமிழர் பட்டவேதனைகள் ஒரு புறமும் மறுபுறத்தே பாலங்கள் வீதிகளின் செயற்திறனும்கண்டு எம் நாட்டிலும் சாதிக்க வேண்டுமென்று நாடு திரும்பினர்.

அன்று ஆங்கில அரசபிரதிநிதியாக இருந்தவரையும் சேர்.ஜேம்ஸ்யும் அணுகிஅவர்களை அழைத்து வந்து புங்குடுதீவிலிருந்து வேலணைதீவிற்கு கடலில்பயணிக்கும் அவலத்தை உணர்த்தினர். இலங்கையின் முதலாவதுசபாநாயகரும், புங்குடுதீவில் உறவுகளை பூர்வீகமாக கொண்டவரும்தீவுப்பகுதிகளின் சட்டமன்ற பிரதிநிதியாக இருந்தவருமாகிய சேர்வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் தீவுப்பகுதிகளின் அவலத்தை விடதேசியத்தின் அவசியத்தையே தாரக மந்திரமாக கொண்டிருந்தார். வாணரின்தூண்டுதலினால் புங்குடுதீவையும் வேலணையையும் இணைத்து தாம்போதிபோட வேண்டுமென்று சேர் ஜேம்ஸ் பீரிஸ், கண்டி மாவட்ட அரச பிரதிநிதிபண்டிற் பட்டுவந்துடாவ அவர்களும், ஏ,ஈ குணசிங்க போன்றோர்களும்வாதாடினார்கள். சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் வேலணையையும்அராலியையும் இணைக்கவும், ஜீ, ,ஜீ, பொன்னம்பலம் அவர்களோ சங்குபிட்டிகேரதீவை இணைக்கவும் வாதிட்டனர்.

கொழும்பில் பெரியவாணர் அவர்களது காய்நகர்த்தலும் தமது கிராமத்திலிருந்துசின்னவாணர் பல ஆயிரம் தந்தி அனுப்புதல், கையெழுத்து வேட்டை எனசட்டசபை தீர்மானத்திற்கு வலு சேர்த்தனர். மூன்று தீர்மானங்களையும்பெயரளவில் ஏற்றுக்கொண்ட அரசாங்கம் தமிழர்களுக்குள் ஒற்றுமையற்றுகாலபோக்கில் மறந்து விடுவார்கள் என நினைத்தவர்களுக்கு, வாணர்சகோதரர்களது விடாமுயற்சி அனுமதியை தர வைத்தது.

1918 தொடங்கிய முயற்சி 1935 ஆண்டு சட்ட நிரூபணசபையில் தீர்மானமாகநிறைவேற்றப்பட்டது. வாணர் சகோதரர்களது ஆங்கில அறிவும், குடும்பபின்னனியும் அவர்களது கிராமத்தின் அத்தியவசியமானதும் முதல் தரமாகசெயற்படுத்த வேண்டியதுமான திட்டமாக தாம்போதி பாலத்தை அவர்கள்உணர்ந்ததன் பயனாக தீவகத்தின் தந்தையாக போற்றப்படுகின்றனர்.

புங்குடுதீவின் சேவையாளர்களாக பல மகான்கள் வாழ்ந்த போதும்எல்லோரையும் விட முதன்மையானவர்களாக ஒரே திட்டத்தோடு சரித்திரநாயகன்களாக பொன்னெழுத்துக்களால் போற்றபட்டார்கள் என்றால்தீர்க்கதரிசனமான சிந்தனையும், எல்லோரையும் இணைத்துப் பயணிக்கும்பக்குவமும் கொண்டிருந்தார்கள். அதன் நிமித்தமே நெடுந்தீவு குதிரைவண்டில்களும், நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு வேளாண்மைசெய்வோர்கள் வண்டில்கள் மூலமாகவும் பல்வேறு வழிகளிலும் பலரையும்பயன்படுத்தி வேலையை முடக்கி விட்டனர். புங்குடுதீவு நாணய சமூகமும்,மலாயா புங்குடுதீவு ஐக்கிய சமூகமும் வாணர் சகோதரர்களுக்கு பின்புலமாய்இருந்தன.

1948 இல் பெரியவாணர் காலமாக சின்னவாணரது தொடர்சேவையினால் 1953இல் புங்குடுதீவு வேலணை தாம்போதி அன்றைய தீவுப்பகுதி பா.ம. உறுப்பினர்அல்பிரற் தம்பியையாவினால் திறந்து வைக்கப்பட்டது. அந்நாள் பா.ம.உறுப்பினர் திரு. தம்பியையா பின்னாள் பா.ம. உறுப்பினர் வ .நவரட்ணம்முன்னிலையில் வாணர் தாம்போதியென பெயர் சூட்டப்பட்டது. இன்று வரையுத்தமோ இயற்கையழிவோ வாணர் தாம்போதியை ஆட்டி அசைக்கமுடியவில்லை. சின்னவாணரின் மனோதைரியம் போன்று அவரது கட்டிட நிர்மாணமும் வலிமையுள்ளதை பறைசாற்றுகின்றது. தமதூருக்காய் தாமேபாதை அமைத்த பெருமையை எமது மண்ணுக்கு தந்து சென்றவர்கள்அவர்கள்.

வாணர் சகோதரர்கள் வாழ்ந்து மறைந்து பல வருடம் உருண்டோடியபோதும்,அந்த புனிதர்களுக்காய் நாம் ஒரு கல்லும் நடவில்லை என்பதே யதார்த்தமானஉண்மை. அவர் பிறந்த ஊரின் உறவுகள் பலருக்கு தெரியாது வாணர் தங்கள்உறவென்று . அவர்கள் தவண்டு திரிந்த வீடெங்கே? ஓடித் திரிந்த முற்றம் எங்கே?அவர் மனையாளோடு வாழ்ந்த மனை எங்கே? அவர் நினைவு அரங்கின்இன்றைய நிலை என்ன? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!

.-உரிமையோடு அரியபுத்திரன் நிமலன் –

வழிகாட்டி பெரியவாணர்

தோணிகளிற் கால்வைத்து ஏறின் கொஞ்சத்

துாரந்தான் மிதக்குமவை! பொறுக்கும் சேற்றில்

ஆணென்ன! பெண்ணென்ன! குழந்தையென்ன!

அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன!

நாணின்றி ஆடைகளைத் துாக்கித் துாக்கி

நடுக்கடலிற் புதைசேற்றில் நடந்த காட்சி

தோணுதையா மனப்படத்தில்! துயரம் யாவும்

தொலைந்திடுமோ வாணர்வந்து தோன்றா விட்டால்?

நிறைமாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே

நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு

இறைவா எம் விதியோ தான் இதுவே என்று

ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்ன வாழ்வு!

மறையாதோ இக்கொடுமை என்றென் றெண்ணி

மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக் குள்ளும்

கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்த தம்மா!

கண்ணியஞ்சார் வாணர்வந்து பிறந்த தாலே!

தொண்டர் சின்னவாணர்

சிங்கப்பூர் தனில் நின்றும் மீண்டு வந்தே

செயற்கரிய பணிபுரியத் திட்டம் இட்ட

துங்கமிகு அண்ணாவாம் பெரிய வாணர்

சொல் திட்டம் உருவாக்கத் துணையாய் நின்றோய்

எங்கெங்கும் புகழ்பரவப் புங்கை ஊரும்

இனிதோங்க ஈர்பத்து ஆண்டின் மேலாய்ச்

சங்கையுடன் தொண்டாற்றி வாழ்ந்த எங்கள்

தனித்தலைவா! தமிழ்போலத் தழைத்து வாழி!

புங்கைநகர் வேலணையுர் இணைய நல்ல

பொலிவுடைய புதுப்பாலம் போட்டோய் வாழி!

வங்கமலி சிங்கப்பூர் மருவிப் பண்பால்

மலர்த்துழைத்து நிதி திரட்டி வந்தே யீங்கு

மங்களமார் கற்பகப் பேர் மங்கை நல்லாள்

மனமகிழ வாழ்ந்து நிற்கும் மகிபா! வாழி!

பொங்கு புகழ்ச் சுற்றமுடன் பொலிந்தே வாழி!

பொன்னரங்கும் ஓங்கிடவே வாழி! வாழி!

ஆக்கம் – வித்துவான் சி.ஆறுமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here