“தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்பது ஒரு புது மொழியாக எல்லோராலும் பாவிக்கப்படுகின்றமையினை நாம் அறிவோம். இந்தப் புது மொழிக்கு ஏற்ப தன் மொழி, தன் இனம், தன் சமூகம், தன் உறவு, தான் கொண்ட கொள்கை என எல்லாவற்றிற்கும் தனது வாழ் நாள் வரை உழைத்த நாக பத்மநாதன் ஐயா காலமாகி விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆம் அவர் சாகவில்லை. இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரை நேசிக்கும் எல்லா உறவுகளின் உள்ளங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
1926 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி ஐயா நாகமுத்து கந்தையா பத்மநாதன் அவர்கள் பிறந்தார்.
கல்வியறிவில் சிறந்து விளங்கிய ஐயா ஆங்கிலப் புலமையும் ஏனைய திறமைகளையும் தன்னுடன் வளர்த்துக் கொண்டார். இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று இளம் வயது தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைத்த அவர் ஓய்வு பெறாமல் தன்னால் இயலக்கூடிய காலம் வரை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப் பங்காளியாக இருந்தார்.
அரச பணியாற்றிய ஐயா சிங்களம் மட்டும் எனும் சட்டத்தினை எதிர் கொண்டு தனது அரச பதவியைத் து}க்கி எறிந்து விட்டு தமிழ்த்; தொண்டனாக வாழ ஆரம்பித்தார். தனது பதவியைத் து}க்கி எறிந்த இவர் பல்வேறு வாழ்வியற் சிக்கல்களுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் இறக்கும் வரை தனது கொள்கையினைத் தமிழ்ப் பற்றினைச் சிறிதளவேனும் தளர்த்திக் கொள்ளவில்லை.
உயர்ந்த தோற்றமும், மெலிந்த உடலமைப்பும், அன்பும் பரிவும் கொண்ட பார்வையும், ஆறுதலாகவும், மெதுவாகவும் கதைக்கும் இயல்பும் மற்றவர்களோடு பேசும் பொழுது தலையை அசைத்துக் கேட்டு உள்வாங்கிப் பேசும் பேச்சு வன்மையும் கொண்ட ஐயாவின் எல்லா நடைமுறைகளும் இயல்பாக எல்லோருக்குமே பிடித்திருந்தது.
சர்வோதயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஐயா புங்குடுதீவின் அபிவிருத்திப் பணிகளில் அதி கூடிய அக்கறையுடையவராய் இருந்தார். திருக்குறளில் தீராக் காதலுடையவராய் இருந்தார். ஈழுமுரசு, விடுதலைப் புலிகள் ஆகிய பத்திரிகைகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த ஐயா அவர்களின் உழைப்பின் உச்சமாகவே தமிழ்தாய் நாட்காட்டி வெளிவந்தது என்பதை நாம் மறக்கமுடியாது.
சொல்லால், செயலால் தமிழர்க்கு உழைத்த
சொந்தம் மறவாத் தமிழனை இழந்தோம்!
கல்லாய் மரமாய் வாழ்ந்த தேன் இடையே
கனலாய் வாழ்ந்த தமிழனை இழந்தோம்!
பொல்லார் தமிழரை ஒடுக்கிய போழ்தில்
பொங்கி வெடித்த தமிழனை இழந்தோம்
நல்லான் ஒருவனை வல்லான் ஒருவனை
நாக பத்ம நாதனை இழந்தோம்!
என உணர்ச்சிக் கவிஞர் அவர் பிரிவிற்குப் பாடிய இரங்கற்பா ஒன்று போதும்
“தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்பதன் சாட்சிக்கு.
அ.காந்தரூபன்
(புங்குடுதீவு-2, இலண்டன்)
10.03.2008