அனைவரும் இணைவோம் !  வாணர் கலையரங்கை கட்டி எழுப்புவோம் !!

வாணர் சகோதரர்களைக் கௌரவிப்பது எங்களின் வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். ”நன்றி மறப்பது நன்றன்று” என்பது முதுமொழி. இந்த வகையில் வாணர் சகோதரர்கள் எம்மண்ணிற்கு செய்த சேவைகள் அளப்பரியவை. இவர்களின் தன்னலமற்ற சேவைகளில் முதன்மையானது புங்குடுதீவு-வேலணை தாம்போதி என்றால் அது மிகையாகாது.
எங்கள் தீவு வேலணைத்தீவுடன் அன்று இணைக்கப்படவில்லை என ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! என்ன நடந்திருக்கும்!! மடத்துத்துறையிலிருந்து வற்றிய சேற்றுக் கடலினுாடாக மூட்டை முடிச்சுக்களை சுமந்து கொண்டு நடந்து தோணியேறி வற்றிய மறுபக்க சேற்றுக் கடலில் இறங்கி மீண்டும் மூட்டை முடிச்சுக்களுடன் நடந்து கடலைக் கடந்திருப்போம். 1953 ஆம் ஆண்டிற்கு முன் வாழ்ந்த எம்மக்களே இக்கஷ்டத்தை உணர்ந்தவர்கள். இந்த கஷ்டத்தை அனுபவித்த மூதாதையர்களில் ஒரு பகுதியினர் இன்றும் புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வசித்துக் கொண்டுதான் உள்ளனர். அவர்களை கேட்டால் தெரியும் அவர்கள் பட்ட அவலங்கள். ஆனால் 1953 இன் பின்னர் பிறந்து இன்று புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பரந்து வாழ்கின்ற பெரும்பாலானவர்களாகிய நாங்கள் இந்த அவலங்களை அனுபவித்தவர்கள் அல்ல. இன்று நாங்கள் அரை மணி நேரத்தில் கடலை கடந்து யாழ்நகரை சென்றடைகின்றோம்.
 
வாணர் சகோதரர்கள் எவ்வித வசதிகளுமற்ற காலகட்டத்தில் வாழ்ந்து தங்களது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக தன்னலமற்று உழைத்த உத்தமர்கள். அவர்கள் நினைத்திருந்தால் சகல வசதிகளுடனும் மலேசியாவிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் சொந்த மண்மீது கொண்ட பற்றினால் சொந்த மண்ணிற்கு திரும்பி தங்கள் மண்ணிற்காகவும், சமூகத்திற்காகவும் உழைத்தவர்கள்.
 
இத்தகைய தன்னலமற்ற சமூகப்பற்றாளர்களை நினைவு கூருவது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். எனவே அவர்களின் ஞாபகார்த்தமான வாணர் கலையரங்கை கட்டியெழுப்ப தங்கள் மேலான உதவிகளை எதிர் பார்த்து நிற்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு
பொன்.சுந்தரலிங்கம் (தலைவர்) – 416-268-8480
ச.சதாசிவம் (செயலாளர்) – 647-824-7207
சே.சந்திரலிங்கம் (பொருளாளர்) – 416-220-9179
ந.தர்மபாலன் – 416-431-4455
(கலையரங்க கட்டிடக் குழு சார்பில்) 

Proposed Extention to the Existing Building for Ampalavanar Kalaiarangam at Pungudutivu

வாணர் கலையரங்கம் அமைக்கும் புனித பயணத்தில்அனைவரும் ஒன்றிணைவோம்

 

 

”பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது”

 

என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க எவ்வித கைமாறும் எதிர்பார்க்காது எம்மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கோடுசெயற்பட்டவர்களே எம்மண்ணின் அவதார புருஷர்களான வாணர்சகோதரர்கள். நாம் புங்குடுதீவு மண்ணில் பிறந்தமையால் பெருமைஅடைகின்றோம். ஆனால் இராம, இலக்குமணர்களைப் போன்றுஇணைபிரியா அபூர்வ சகோதரர்களான அம்பலவாணர்கள் எம்மண்ணில்பிறந்தமையால் எம் புங்கைத்தாய் பெருமையடைந்தாள் என்றால் யாரும்அதை மறுப்பதற்கில்லை. தன்னலம் கருதாது பொதுநலம் ஒன்றை மட்டுமேதம் குறிக்கோளாகக் கொண்டிருந்த காரணத்தினால் மலாயா தேசத்தில் தாம்அனுபவித்த பதவி, பணம், புகழ், வசதி, வாய்ப்பு அத்தனையையும் துறந்துதமது தாய் மண்ணிற்காக சேவை செய்யப் புறப்பட்டு வந்தார்களேநினைத்துப் பார்க்க முடியுமா?
தூரநோக்கோடும், தீர்க்கதரிசனத்தோடும் இலங்கை சுதந்திரம் அடைவதற்குமுன்பே இரவு, பகல் பாராது அரும்பாடுபட்டு உழைத்து பாலம் அமைக்கஅனுமதியைப் பெற்ற அவர்களை எங்களால் மறக்கமுடியுமா? அவர்களின்நோக்கம் முழுவதும் தம்மண்ணின் மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்றஉயரிய எண்ணமே. உயர்கல்விக்காக மகா வித்தியாலயம் அமைக்கவும்,வைத்திய சேவைக்காக வைத்தியசாலை அமைக்கவும் தமது சொந்தக்காணியையே தந்துதவியவர்கள்.

தபாற்கந்தோர் அமைத்ததன் மூலம்தொலைத்தொடர்பு சேவையை ஏற்படுத்தித் தந்தவர்கள்.
இத்தகைய நல்லுள்ளம் கொண்ட பெரியவாணர் சேவை மக்களிற்குப்போதும்எனக்கருதிய எம்பெருமான் அவரை இடைநடுவில் அழைத்துக் கொண்டார்.அன்று தீவகம் முழுவதுமே ஆறாத்துயரில் மூழ்கியது. இந்நிலையிலும்சின்னவாணர் திடசிந்தையுடன் அண்ணன் தொடக்கி வைத்த அரும்பணியைஇரவு, பகல்பாராது  தொடர்ந்து முடித்து வைத்தார். மேலும் அவர் கண்ட கனவுநனவாக வேண்டும் என்ற முனைப்புடன் இருபத்து ஆண்டுகளுக்கு மேலாககிராமசபை தலைவராக இருந்து பல்துறைகளிலும் நம் தீவு வளம் பெறஅரும்பணியாற்றினார். இத்தகைய செயற்கரிய சேவைகளைச் செய்தமகானை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்றநோக்குடன் 1977ம்ஆண்டு தைத்திங்கள் 15ம் நாள் வாணர் அரங்கு அமைக்க அப்போதையயாழ்-மாவட்ட நீதிபதி கே.வி.நவரெத்தினம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.அரங்கு அமைப்பதற்காக எம்மக்கள் பெருவிருப்போடு வாரி வழங்கினர்.ஐந்தே மாதங்களில் அரங்கு வேலைகள் முடிவுற்று, 24.06.1977 இல் அரங்குதிறந்து வைக்கப்பட்டதோடு சின்னவாணர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருமே இவ்வரங்கு பெரியதோர்மணிமண்டபமாக எதிர்காலத்தில் அமைய வேண்டுமென தமதுரைகளிலும்,வாழ்த்துச் செய்திகளிலும் தெரிவித்திருந்தனர்.

இவ்எதிர்பார்ப்பு இன்று வரைநிறைவேறாதது துர்ப்பார்க்கியம் என்றே கருதுகின்றேன். நாம் அவர்கள்நினைவாக வானளாவிய கோபுரம் அமைத்தாற் கூட அவர்கள் எமக்காற்றியசேவைகளுக்கு ஒருபோதும் ஈடாகாது. அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறுஅவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் பயணித்து நம் தீவகம் வளம் பெறவும்,அங்கு வாழும் மக்கள் சிறப்போடு வாழவும் வழி செய்வதே.

இந்தப்பணியைச் செய்வதற்கு அவர்கள் நினைவாக அமைக்கப்படும்நினைவாலயம் பூரணமாக செயற்பட வழிசெய்வோம். இந்தப் புனிதபயணத்தில் எவ்வித கருத்து வேறுபாடுகளுமின்றி அனைவரும்ஒன்றிணைந்து பயணிப்போம்……..

பொன்.சுந்தரலிங்கம் (தலைவர்)

 

 

மறப்போமா நம் தேச பத்தர்களை !!

 

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்கின்றார் தாயுமான அடிகளார். இவ்வரிகட்கு இலக்கணமாக நம் மண்ணில் நம்மக்கள் செய்த தவப்பயன் காரணமாக தோற்றம் பெற்றவர்களே இந்த அபூர்வ சகோதரர்களான வாணர் சகோதரர்கள். பண்பட்ட மடத்துவெளிக் கிராமத்திலே கந்தப்பர் அம்பலவாணர் அவர்கள் 1890ம் ஆண்டிலும், சண்முகம் அம்பலவாணர் அவர்கள் 1892ம் ஆண்டிலும் உதித்தனர்.

இராம இலட்சுமணர் களை போன்றே இந்த இரட்டையர்களும் இணை பிரியாதவர்கள். பிறர் இன்னல் அறுப்பவர்கள்.

இவர்கள் தங்களின் ஆரம்பக்கல்வியை மடத்துவெளி அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும், உயர்கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுாரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரி ஆகியவற்றிலும் பயின்றனர்.
இவர்களைப் பற்றியும், இவர்கள் எம் மண்ணிற்கும், மக்களிற்கும் ஆற்றிய சேவைகளைப்பற்றியும் சொல்வதாக இருந்தால் அது எழுத்திலும், சொல்லிலும் அடங்காது. ஆனாலும் அவர்களை அறியாப் புதிய தலைமுறைக்கு அவர்களின் முதன்மைச் சேவைகளை மாத்திரம் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.

அவர்களைப் பற்றிய விரிவார்ந்த கட்டுரைகள் காலக்கிரமத்தில் தரப்படும்.

கல்விக்கான தமது கடல் வழிப்பயணத்தின் மூலம் சிறு வயதில் இருந்தே தமது பிரையாணக் கஷ்டங்களை நேரடியாக அனுபவித்தவர்கள்.

கல்விக்காலம் முடிவடைந்த இவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்று விளங்கினர். பின்னர் தொழில் தேடி மலாயா சென்று குடியேறி அங்குள்ள வாய்ப்புக்களை கண்ணுற்று இந்த வசதி வாய்ப்புக்களை எம் மக்களுக்கு சிறிதளவாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் உந்தப்பட்டனர். அவ் எண்ணத்தின் வெளிப்பாடாக மலாயா யாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமது திட்டங்களை வெளிப்படுத்தி ”மலாயா-புங்குடுதீவு ஐக்கிய சங்கம்” அமைப்பை உருவாக்கினர்.

 

இப்புனித அமைப்பே புங்குடுதீவுத் தாயை சிறப்பித்த அமைப்புக்களில் மூத்த அமைப்பாகும்.
இந்தச் சங்கமே புங்குடுதீவு-வேலணைப் பாலத்திற்கும், பண்ணை ஆழ்கடல் பாலத்திற்கும் முதன் முதலில் திட்டமிட்டது. தாய் நாட்டிற்காக தீட்டிய திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக முதலாம் உலகப் போரின் பின்னர் 1918ல் வாணர் சகோதரர்கள் தீவகம் திரும்பினர்.

புங்குடுதீவு வாழ் பெரியவர்களை இணைத்து மலாயா-புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தைப் பலப்படுத்திக் கொண்டு தமது இலட்சியத்தை வென்றெடுக்க பல் முயற்சிகளையும் தொடங்கினர்.

விழிப்புணர்வு பெற்ற  புங்குடுதீவு மக்கள் 1922ல் ”புங்குடுதீவு மகாசன சேவா சங்கத்தை” உருவாக்கினார்கள்.

பதினேழு ஆண்டுகள் வாணர் சகோதரர்களின் தொடர் விடா முயற்சியினால் 1935ம் ஆண்டு இலங்கை சட்ட நிரூபண சபையில் புங்குடுதீவுக்கு பாலம் அமைக்கும் பிரேரணை விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்விவாதம் வெற்றி பெற இவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியன. இதனால் தாம்போதி (படுகைப் பாலம்) அமைப்பதற்கான அனுமதியும், நிதியும் கிடைக்கப் பெற்றது. பாலம் அமைக்கும் பணியையும் சின்னவாணரிடமே அரசு ஒப்படைத்தது. வாணர் சகோதரர்கள் உயர்த்திய நான்கு கரங்களையும் பலப்படுத்த பல்லாயிரம் கரங்கள் இணைந்தன.
1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட வேலை பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து 1952ம் ஆண்டு நிறைவு பெற்று பாலத்தினுாடாக பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல்துறையிலும் மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்குடன் புங்குடுதீவு சேவா சங்கம், புங்குடுதீவு மகாசன சேவா சங்கம், சப்த தீவு இந்து மகா சபை, வட இலங்கை தீவக சமாசம் ஆகிய ஸ்தாபனங்களை உருவாக்கினார்கள்.

தாம்போதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே கிராமத்தின் கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளுர் போக்குவரத்து, தபால் தொலை தொடர்பு ஆகிய பல்துறைகளிலும் கவனத்தைச் செலுத்தினர்.

1946ல் ஆங்கில கல்வி வசதிக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்காக வாணர் அவர்கள் தமது சொந்தக் காணியை வழங்கியதன் மூலமாக புங்குடுதீவு மகா வித்தியாலயம் உருவாகியது.
சுகாதார பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் இன்று நாம் காணும் வைத்தியசாலையும் வாணர் அவர்களின் சொந்தக் காணியிலேயே ஆரம்பிக்கப்பட்டது.

கிராமக் குளங்கள், அணைக்கட்டுக்கள், வீதிகள் என பல்துறைகளும் வளர்ச்சி கண்டன. சின்னவாணர் 25 வருடங்களுக்கு மேலாக தேசம் போற்றும் சிறந்த கிராமசபைத் தலைவராக இருந்து பிறந்த இடத்தை பேணிக்காத்தவர்.
“எண்ணித் துணிக கருமம்” என்பதற்கிணங்க எமது தேச பக்தர்கள் அன்று துார நோக்குப் பார்வையோடு துணிந்து செயற்பட்டமையினால் இன்று நாம் இருபதே நிமிடத்தில் யாழ்ப்பாணம் செல்கின்றோம். எதுவித கைமாறும் எதிர்பாராது மக்கள் சேவையை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்பட்ட இம் மகான்களிற்கு நாம் என்ன கைமாறு செய்தோம் ??? சற்றே சிந்தியுங்கள்.

”நன்றி மறப்பது நன்றன்று“ என்பதற்கிணங்க 1977ல் அமரர் வி.கே.கனகரெத்தினம் அவர்களும், அவருக்கு  உறுணையாக சேர்ந்த பலருமாக தற்போது காணப்படும் வாணர் அரங்கை நிறுவினர். அவ் அரங்கத்தில் மழலைகளின் முன்பள்ளி வகுப்புக்கள் மட்டுமே நடைபெற்று வந்தன.
ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆன பொழுதும் இவ்வரங்கம் நிறுவப்பட்ட நோக்கத்தை அடைவதற்கு நாம் எதுவித முயற்சிகளுமே மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது. எனவே எமக்காக தங்கள் வாழ் நாளைத் தியாகம் செய்த இந்த அபூர்வ சகோதரர்களின் நினைவும், அவர்களின் பணியும் எம்மக்களின் மனங்களில் நின்று நிலைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அமையப் பெற்ற வாணர் அரங்கைத் தொடர்ந்து ”மணி மண்டபம்” ஒன்றை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக செயற்குழு ஒன்றும் 14.02.2016ம் திகதியன்று அமைக்கப்பட்டுள்ளது.

இம்மணி மண்டபம் அமைக்கப்பட்டதும் அதனை முழு அளவிற் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் திட்டங்கள் பல வகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் நினைவுச் சின்னத்தினுாடாக அவர்கள் கண்ட கனவு நனவாக புலம் பெயர் தேசங்களில் வாழும் நம் அனைத்து உறவுகளும், தாய் நாட்டில் வாழும் அன்பு உறவுகளும், நலன்விரும்பிகளும் ஒன்று சேர்வோமாக ! இத்துடன் இத்தேச பக்தர்களின் அர்ப்பணிப்பினாலும், துார நோக்கினாலும் அமையப் பெற்ற வாணர் தாம்போதியோடு, இவர்கள் பெயர் தாங்கிய அலங்கார வளைவு ஒன்றும், அவர்கள் சிலையும் எதிர் காலத்தில் அமையப் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். நாம் நமது வரலாற்று நாயகர்களை மறந்தவர்கள் எனும் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்கள் என்றில்லாமல் அவர்கள் நிலைத்து வாழவும், அவர்கள் செய்த சேவைகளை நினைவு கூரவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக் கொள்வோம்.
இம் மண்டபமானது தற்போது உள்ள அரங்கு உள்ளடங்கலாக 100 அடி நீளமும். 50 அடி அகலமும் கொண்டதாகவும், 450 இருக்கைகளை கொண்டதாகவும் அமையவுள்ளது. நான்கு புறமும் சுற்று மதில்கள் அமைக்கப்பட்டு முன்புறமாகவும், வடக்குப்புறமாகவும் இரு நுழைவாயில்கள் அமைக்கப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் கழிவறைகள் அமைத்தல், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு வசதி கொண்ட சிறுவர் புங்கா ஒன்றை அமைத்தல், தண்ணீர் தாங்கி அமைக்கப்பட்டு மண்டபத்திற்கான நீர் விநியோகம் செய்தல் போன்ற இம்மண்டபத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிர்காலத்தில் நிரந்தர வைப்பு நிதியம் ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இம்மண்டபம் முற்றுப் பெற்றதும் மக்களின் முழு நேரப் பாவனைக்கு உகந்ததாக செயற்பாடுகள் அமையப்பெறும்.

”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது போல் அனைவரும் கை கோர்த்து ஒரு மனதாகச் செயற்படுவோமாக என்று சிரம் தாழ்த்தி வேண்டுகின்றோம்.

அன்புடன் ச.சதாசிவம் (செயலாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here