1939 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் இப்பாடசாலை கட்டப்பட்டது. சைவ வித்தியா அபிவிருத்திச் சங்க பிரதம நிர்வாகஸ்தர் உயர்திரு சு.இராசரெத்தினம் அவர்கள் அக்காலத்தில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த சேர்.வை.துரைச்சாமி அவர்களோடும் கலந்துரையாடி இப்பாடசாலையைக் கட்ட தீர்மானித்தனர். மூடவன் தோட்டம் என்னும் காணியை திரு. சு. செல்லத்துறை ஆசிரியர் அவர்கள் பெருமுயற்சி எடுத்து சைவ வித்யா விருத்திச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்
1939 ஆம் ஆண்டு சைவ வித்யா விருத்திச் சங்க முகாமைத்துவத்தின் கீழ் திரு. சி. கனகசுந்தரம் அதிபராகப் பணியாற்றினார்.1943 ஆம் ஆண்டு இப்பாடசாலை பதிவு செய்யப்பட்ட அரசாங்கப் பாடசாலையாக மாற்றம் பெற்றது. இதன் காரணமாக சேர். துரைச்சாமி வித்தியாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்காலத்தில் 7 ஆசிரியர்களைக் கொண்ட முதலாம் தர பாடசாலையாகத் திகழ்ந்தது.எனினும் இப்பாடசாலை 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டது.