புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அல்லது அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என்பது இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் ஆகும். இவ்வாலயம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் தெற்குக் கடற்கரை மணற்பரப்பில் ஏறக்குறைய ஆயிரம் பரப்பு நிலத்தில் அமைந்துள்ளது.
இலங்கை போர்த்துக்கேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது புங்குடுதீவு நிர்வாகத்தினரில் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய கதிரவேலு விஸ்வலிங்கம் உடையார் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. இவருக்கு புங்குடுதீவு கிழக்கில் இருந்து தெற்குக் கடற்கரை வரை காணிகள் இருந்தன. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்குக் கடற்கரையில் கோரியா என்னும் இடத்தின் ஒருபகுதியில் அழகிய பேழை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனுள் கண்ணகி அம்பாள் சிலை ஒன்று காணப்பட்டது. கதிரவேலு உடையார் கிராம மக்களுடன் சேர்ந்து கண்ணகி அம்மனுக்குக் கோயில் அமைக்கும் பணியில் இறங்கினார். கண்ணகி அம்மனை அங்கு பிரதிட்டை செய்து நித்திய பூசைகள் செய்து வழிபட்டனர். மேலும் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கமாக காவல் தெய்வமாகிய பத்திரகாளி அம்மனுக்கும் சிறிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது.