திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்
சமூக சேவகர்/வர்த்தகர்
புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது
புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை
புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.
பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து சேர்ந்தார்.
1960 – 1972ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர்,
இலக்கியவாதி, சமூக சேவகர், கவிஞர் மு தளயசிங்கம் அவர்களிடம் முறைப்படி
சீடரானார்.
புங்குடுதீவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை
எதிர்த்து திரு மு தளயசிங்கத்துடன் இணைந்து சமபந்தி உரிமை, கிணற்றில் நீர்
அள்ளுதல், ஆலய பிரவேசம் போன்ற போராட்டங்களை மேற்கொண்டும், இலவச வகுப்புகள், சிரமதான
பணிகள் போன்றவற்றையும் செய்தார். இவர்களுடன் இணைந்து எழுத்தாளர் மு பொன்னம்பலம், கவிஞர்
சு வில்வரத்தினம,; சமூக சேவையாளர் மு நேமிநாதன் போன்றோரும் ஒரு குழுவாக போராட்டங்களை
நடாத்தினர்.
இன்று வணிகத்துறையில் ‘பத்மினி நகை மாளிகை’ நிறுவனத்தை லண்டனில் நடாத்திவரும் அதேவேளை,
புங்குடுதீவு மக்களுக்கு தொடர்ச்சியாக தனது சேவையை செய்து வருகிறார்.
திரு வீ பாலசுப்பிரமணியம் அவர்கள் 2003ம் ஆண்டு தாயகம் சென்று, புங்குடுதீவு மக்களுக்கு கல்வி
அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு
நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடனும் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு
இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி நிறுவகித்து வருகிறார். தையல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு
அங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆடு, மாடு வளர்ப்பதற்கும், சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள், மீன்பிடி வலைகள் வழங்கியும்
மக்களுக்கு உதவிகள் செய்தார். தூர்ந்து போன குளம், கிணறுகள் துர்வாரப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டன.
தான் கல்வி கற்ற தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு மதில், கொட்டகை, மலசல கூடம், கிணறு
போன்றவற்றை திருத்த பல உதவிகள் செய்துள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலத்திற்கு வடக்கு வீதி
மதிலும் கட்டிக்கொடுத்துள்ளார். இளையோர், முதியோர்களுக்கு ஆங்கில, கணித வகுப்புக்கள் ஆரம்பித்துக்
கொடுத்துள்ளார். விளையாட்டுப்போட்டி நடாத்தி, மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக்
கொடுத்தார்.
சமாதானக் காலங்களிலும், போர்க் காலங்களிலும் இலங்கைக்குச் சென்று தொடர்ந்தும் தனது சமூகப்
பணியை புங்குடுதீவு, சரவணை போன்ற கிராமங்களில் விஸ்தரித்துக்கொண்டே இருக்கிறார். திரு வீ
பாலசுப்பிரமணியம் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்.