புங்குடுதீவு ஊரதீவைச் சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்து வருபவருமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிறீதரனுடன் ஒரு சந்திப்பு. இச்சந்திப்பானது அலைகள் இணையத் தளத்திற்காக அலைகள் ஆசிரியர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனை இங்கு மறுபதிவு செய்கின்றோம்.
டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய வெளிக் கொண்டுவரப்படாத செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய வெளிக் கொண்டுவரப்படாத செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
டென்மார்க்கில் சுமார் 10.500 பேர்வரை தமிழ் மக்கள் வாழ்வதாக சமீபத்தய கணிப்புக்கள் கூறுகின்றன. இந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் ஒரு தேசத்திற்குரிய அடையாளங்கள் என்று என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டுமோ அத்தனை அம்சங்களையும் இலங்குவதைக் காணலாம். அந்தவகையில் டென்மார்க்கில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் பாத்திரத்தை வகிக்கும் ஒருவரை சந்திக்கிறோம். கடந்த 25 வருடங்களாக டென்மார்க்கின் பல்வேறு மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்துவரும் திரு. சிறீதரன் திருநாவுக்கரசுவைப்பற்றிய வெளிக் கொண்டுவரப்படாத செய்திகளை இச்சந்திப்பில் இருந்து கொண்டுவர முயற்சிக்கிறோம்.
டென்மார்க்கில் தமிழர்கள் குடியேறிய 25 வருட நினைவுகளின் ஓரங்கமாக இப்பேட்டிகள் தொடராக வெளிவருவது குறிப்பிடத்தக்கது..
வணக்கம் சிறீதரன் அவர்களே..
சிறீதரன் : வணக்கம்.
கேள்வி : முதலில் உங்களைப் பற்றியும், மறக்க முடியாத இளமைக்காலத்தைப் பற்றியும் ஒரு சிறிய முன்னோட்டத்தைத் தாருங்கள்.. ?
சிறீதரன் : சிறீதரன் : உங்களுக்கு புங்குடுதீவை தெரிந்திருக்கும். ஆலயங்கள், திருவிழாக்கள், கலைவிழாக்கள் என்று எப்போதுமே கலையால் களைகட்டித் திகழும் அழகிய தீவு. அந்தப் புங்குடுதீவிற்குள் ஊரதீவு என்று இன்னொரு தீவு இருக்கிறது. இரண்டு பக்கங்கள் கடலாலும், இரண்டு பக்கங்கள் மழை நீராலும் சூழப்பட்ட, உப்பும், இனிப்பும் கலந்தெடுத்த சுந்தரத் தமிழ்க் காற்று தாலாட்டும் தீவு இந்த ஊரதீவு. இதுதான் நான் பிறந்து வளர்ந்த இடம்.
கேள்வி : உப்புக்கரிக்கும் நீர் இருபுறம், அள்ளிக் குடிக்கும் மழைநீர் மறுபுறமும் அமைவது இயற்கையின் இனிய காட்சியாகும்.. கேட்கச் சுகமாக இருக்கிறது.. சுவர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.. ம்..! மேலும் கூறுங்கள்.
சிறீதரன் : இந்தத் தீவைச் சுற்றி நிற்கும் ஏரியில் மாரி காலத்தில் நீர் இருக்கும், கோடை காலத்தில் வற்றிவிடும். கோடை காலத்தில் அந்த ஏரிப்பகுதி எமக்கு திறந்தவெளி கலையரங்கமாகவும் விளையாட்டரங்கமாகவும் திகழ்ந்தது. எனவே நமக்கு பாதிக்காலமும், நீருக்கு பாதிக்காலமுமாக அந்த நிலப்பகுதி மீது உரிமை கொண்டாடும் அரிய வாய்ப்பு இருந்தது. ஒருபக்கம் உப்பு, மறுபக்கம் இனிப்பு இரண்டுக்கும் நடுவே நாங்கள். அதுமட்டுமா அங்கே ஓர் அழகான சிவன் கோவில். அங்கிருக்கும் இறைவன் பாணாவிடை தான்தோன்றீஸ்வரராகும். அந்தக் கோயிலைச் சுற்றி சிறிய மலை, காடு, கடல், வயல், என நால்வகை நிலங்களும் சூழ்ந்து தெய்வீகமயமான ஒரு பகுதியாகக் காட்சிதரும். அங்கே நாம் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்தோம். இந்தியாவுடன் இலங்கை இணைந்திருந்த காலத்திலேயே இதன் சிறப்பும் பழமையும் துலங்கியிருக்க வேண்டும். ஒரு தீவை பன்னிரண்டு வட்டாரங்களாக பிரித்து, ஒரு வட்டாரத்திற்கு ஊரை என்று பெயர் வைக்கும் மரபு மிகத் தொன்மையான காலத்திற்குரியது, அந்தச் சிறப்பின் அடையாளமே நமது ஊரதீவு. இது பண்டைக்காலத்தில் தமிழகமும், இலங்கையும் இணைந்திருந்தமைக்கு ஓர் உதாரணமாகும்.
கேள்வி : புங்குடுதீவு உட்பட பொதுவாக தீவுப்பகுதியில் கல்வி நன்கு முன்னேறியிருக்கும். இலங்கையின் சிறந்த கல்வியியலாளர் பலரைத் தந்த பெருமை தீவுப்பகுதிக்கு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன ?
சிறீதரன் : தீவுப்பகுதி மக்கள் கல்வியில் முன்னேற வேண்டிய நெருக்குதலைத் தந்தது வரட்சி. இதன் காரணமாக வர்த்தகமே தீவுப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக இருந்தது. வர்த்தகத்தில் போதிய பணம் ஈட்டிய காரணத்தால் தங்கள் பிள்ளைகளை பிரபலமான பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தார்கள் நம்பகுதி மக்கள். இதனால் கல்வி கற்ற சமுதாயம் ஒன்றை தடையின்றி உருவாக்க வழி பிறந்தது. வர்த்தகம், கல்வி இவை இரண்டும் நமது கண்களாகவே இருந்தன. தீவுப்பகுதிகள் கல்வியில் பாரிய முன்னேற்றம் காண இதுவே முக்கிய காரணமாகும்.
கேள்வி : நீங்கள் சிறந்த சமயச் சிந்தனையாளராக, பேச்சாளராக வருவதற்கு தூண்டுதலாக இருந்த பின்புலங்கள் எவை ?
சிறீதரன் : நமது ஊரதீவில் கிராமமுன்னேற்றச் சங்கம், சனசமூகநிலையம், மற்றும் புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் போன்றன இருந்து கலைகளை வளர்க்க அரும்பாடுபட்டன. புங்குடுதீவு இளந்தமிழர் மன்றம் கலைவிழாக்களை நடாத்துவதில் பெரும் அக்கறை காட்டிவந்தது. ஏரியின் பக்கத்திலேயே அறிவகம் என்ற நூலகம் அமைந்துள்ளது. அக்காலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக அறிவகத்தில் இருந்தே ஒத்திகைகளை பார்ப்போம். அக்காலத்தே நான் நமது ஊரில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றில் படிக்கும்போது மேடைப்பேச்சில் வல்லவனாக வருதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். பிற்காலத்தில் இளந்தமிழர் மன்றத் தலைவராக இருந்தமையால் பல இடங்களுக்கும் சென்று பகிடைத்தது. எனவே நான் பேச்சாளராக வருவதற்கு வாழ்ந்த சூழல் ஒரு பிரதான காரணமாகும்.
கேள்வி : அதேவேளை உங்களுடைய பேச்சிலும், சிந்தனையிலும் அக்காலத்து தீவகப் பெருமக்கள் பலருடைய தாக்கம் தெரிகிறது..
சிறீதரன் : உண்மைதான், உங்களுக்கு கனடாவில் வாழ்ந்து பல மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி தனது பேச்சுக்களை ஒலித்தட்டாகவும் வெளியிட்ட காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.கே. மகேந்திரன நமது தீவில் தமிழ் மணக்க முக்கியமாகப் பாடுபட்ட ஒருவராகும். நான் சிறுவனாக இருந்தபோது அவருடைய வழிகாட்டலில் எனது பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டேன். சிறுவனாக இருந்தபோது பல கூட்டணி மேடைகளிலும் பேசியுள்ளேன். மேலும் நாம் நடித்த நாடகங்களை பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் எழுதுவார், இதுதவிர காலஞ்சென்ற கவிஞர் வில்வரத்தினம் போன்ற பலருடன் எனக்கு தொடர்பிருந்தது. மேலும் ஈழத்தின் புகழ் பெற்ற படைப்பாளி ஆசிரியர் மு.தளையசிங்கம் அவர்களிடம் இரண்டு ஆண்டு காலம் படிப்பதற்கும் எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமீழத்தின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட மு.நவரத்தினம், தமிழறிஞர். கா.பொ.இரத்தினம், வீ.வீ.கே ஆறுமுகம் போன்றவர்கள் எல்லாம் தமிழ் வளர்த்த சூழலில் வளரக்கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று நான் பல்வேறு துறைகளிலும் பேச்சுக்கலையை வளர்த்துக் கொள்ள இந்தப் பேராசான்களின் தொடர்பு முக்கிய காரணமாகும்.
கேள்வி : இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், டென்மார்க்கில் இருந்து சமயப்பணிகளில் ஈடுபட்டவரும் மெய்ஞானக்குரல் என்ற நூலை வெளியிட்டவருமான காலஞ்சென்ற சித்ராமணாளன் நீங்கள் கூறும் எஸ்.கே. மகேந்திரனின் உறவினர், அவர் அழைத்தே சித்திராமணாளன் கனடா சென்றார்.. எஸ்.கே. மகேந்திரன் மாரடைப்பால் மரணித்த சில நாட்களில் இவரும் மரணமடைந்தார். ஒன்றாக இணையவும், ஒன்றாகவே உலகை விட்டுப்பிரியவும் நினைக்குமளவிற்கு அந்நியோன்னியமானவர்கள்.
சிறீதரன் : உண்மைதான் இருவருடைய பக்கம் பக்கமான மரணங்கள் பலருடைய உள்ளங்களைப் பாதித்தது தெரிந்ததே. மேலும் எஸ்.கே. மகேந்திரனிடம் நான் பெற்ற தாக்கம் சித்திரமணாளனிடமும் இருந்தது. அவரும் சிறந்த மேடைப்பேச்சாளர், வில்லுப்பாட்டு கலைஞர், நூல் வெளியீட்டாளர் என்று பல பாத்திரங்கள் வகித்தவர். அவர் எனது உறவினர்தான்.
கேள்வி : தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரனை பார்த்தசாரதியான கண்ணனின் அவதாரமென வர்ணித்து, நூல் எழுதி அதை எமக்கு தபாலில் அனுப்பியிருந்தார் சித்திராமணாளன். அதை நாம் பெற்றுக் கொண்ட அதே தினம் அவர் உயிரும் பிரிந்த செய்தி வந்தது. உயிர் கொடுத்து பிரபாகரனுக்காக நூல் எழுதிய உன்னதப் படைப்பாளி சித்திராமணாளன் என்பது பலருக்கு தெரியாது.
சிறீதரன் : உண்மைதன் சித்திராமணாளன் மேலும் அற்புதமாக பரிமளிக்க வேண்டிய கலைஞர் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் இன்றும் ஆற்ற முடியாத காயமே. எஸ்.கே. மகேந்திரனின் தாக்கம் கொண்ட கலைஞர்கள் வழியில் இடைவெளி ஏற்படாது என்னாலான பணிகளை நான் செய்துவருகிறேன்.
கேள்வி : இந்தப் பேச்சாளர்கள் தீவுப்பகுதிக்குள் மட்டும் அடங்கிப் போனவர்கள் அல்ல, பரந்துபட்ட ஞானம் உடையவர்கள்.. நீங்கள் எப்படி ?
சிறீதரன் : தீவுப்பகுதிக்கும் மற்றய பகுதிகளுக்கும் இடையில் கடல் இருப்பதால் தரை மார்க்கமான தொடர்புகள் குறைவு இருப்பினும் நான் தீவுப்பகுதியில் மட்டும் வாழ்ந்தவனல்ல யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் எல்லாம் பரந்துபட்டு வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு. தீவுக்குள் இருந்து டென்மார்க்வரை புலம் பெயர்ந்து வந்துள்ளேன், சகல இடங்களையும் சேர்ந்த மக்களுடன் நட்பாக வாழ இத்தகைய அனுபவமே எனக்கு துணையாக அமைந்தது. பொதுவாக தீவகத்தில் இருப்பவர்கள் தீவுக்குள் இருந்தாலும்கூட, வர்த்தகத்திற்காக இலங்கை முழுவதும் பரவியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கேள்வி : இனி கொஞ்சம் சாதாரண வாழ்விற்குள் வருவோம்.. பொதுவாக பேச்சாளர்கள், கலைஞர்கள் தொய்வில்லாமல் தமது பணியை செய்வதற்கு வாழ்க்கைத் துணை மிக அவசியம்..
சிறீதரன் : ஆமாம் எனது பணிகளுக்கு துணைவியார் விஜயானந்தி என்றும் ரசிகையாக இருப்பார்.
கேள்வி : உங்கள் பேச்சு வன்மைக்கும் இல்லற வாழ்வின் ஆரம்பத்திற்கும்..
சிறீதரன் : புரிகிறது காதலுக்கு வருகிறீர்கள்… யாரைத்தான் விட்டது காதல். எனது துணைவியார் எனது மேடைப் பேச்சின் ரசிகை. அதனால் கவரப்பட்டு என்னுடன் இணைந்து கொண்டார். எனது மேடைப்பேச்சின் தாக்கம் திருமண மேடைக்கே கொண்டு சென்றதுதான் எங்கள் கதை.
கேள்வி : சரி டென்மார்க் வந்த பின்னர் உங்கள் கலைப்பணிகள் எவ்வாறு நகர்ந்தன..?
சிறீதரன் : அதே நாவன்மையுடன் இங்கு வந்தாலும், இங்கு அதுபோல வாய்ப்புகள் வரவில்லை. அத்தருணம் 1987ல் ஸ்கனபோ நகரில் உள்ள அகதிகள் உதவிக்கழகத்தில் நாடகம் போட்டார்கள். அதில் பங்கேற்று ஒரு மேடைப் பேச்சைப் பேசினேன்.. அதன் பிறகுதான் அங்குள்ளவர்கள் என்னையும், எனது ஆர்வத்தையும் அறிந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பல நகரங்களுக்கும் மெல்ல மெல்ல அறிமுகமானேன்.
கேள்வி : அதன் பிறகு எப்படி நீங்கள் உங்களை வளர்த்துக் கொண்டீர்கள்?
சிறீதரன் : மேடைப்பேச்சுக்காக பல விழாக்களுக்குப் போவேன், அங்கு பட்டிமன்றம் நடைபெறும்.. அதில் பேசப் போவேன், அங்கு யாரோ ஒரு பேச்சாளர் பேச வராமல் இருப்பார், அவருடைய இடத்திற்கு ஒரு மேடைப் பேச்சாளர் தேவைப்படும் அந்த இடத்தில் நான் பேசுவேன். இப்படி வாய்ப்புக்கள் தற்செயலாக வாசற்கதவைத் தட்டும், அதை உடன் பயன்படுத்துவேன். அப்படியே நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பது, பரதநாட்டிய அரங்கேற்றங்களை தொகுப்பது, ஆலயங்களில் உரையாற்றுவது என்று எனது பணிகள் விரிவடைந்தன. டென்மார்க் போன்ற பரபரப்பு வாழ்வு கொண்ட நாட்டில் கூட்டமாகக் கலைஞர்களை இணைத்து மேடையில் ஏற்றி இறக்குவது சாதாரணமான விடயமல்ல, அந்தவகையில் தனிநபராக இருப்பதால் தேவைகளை உடன் பூர்த்திசெய்ய முடிகிறது.
கேள்வி : தமிழ் மேடைப்பேச்சில் இருந்து ஆன்மீகத்திற்குள் எப்படி நுழைகிறீர்கள்.. ?
சிறீதரன் : தமிழ் மேடைப்பேச்சுக்களோடு நான் பிறந்து வளர்ந்த இடத்தின் பின்னணி காரணமாக சமயத்தில் ஈடுபாடு எனக்கு அதிகமாக இருந்தது. தமிழ்ப்பணியாளன் சைவத்தோடு இணையும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வெறும் மதப்பிரச்சாரமாகப் போய்விடக் கூடாது. மூட நம்பிக்கைகளை மதம் என்று கருதுவதும், அதனடிப்படையில் மதங்கள் மீது மலினமான விமர்சனங்களை வைப்பதும் எளிமையானது. எனவேதான் சைவத்தில் உள்ள சிறப்புக்களை மூட நம்பிக்கைகளை விலத்தி அடையாளம் காட்ட எனது பணி அவசியம் என்று உணர்ந்தேன். இந்து சமயம் என்பது ஒரு சமயமல்ல அது பல சமயங்களின் தொகுப்பு என்பதைப் புரிய வைக்குமாறு எனது உரைகளை வடிவமைத்தேன். மக்கள் மத்தியில் அது பெரிய வரவேற்பைப் பெறுவதையும் புரிந்து கொண்டேன்.
கேள்வி : தாங்களும் டென்மார்க்கின் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருக்கிறீர்கள். இதன்மூலம் தாங்கள் ஆற்றும் பணி யாது ?
சிறீதரன் : சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் முயற்சியுடன் சமய சம்மந்தமான, அறிவுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமெனப் பாடுபட்டு வருகிறோம். மேலும் நமது நகரை சுற்றி வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு எழுத, வாசிக்க, சமய அறிவுகளை போதிக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். தற்போது எனது தமிழ், சமய வகுப்புக்கள் ஸ்கனபோ நகரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கேள்வி : இனி பொதுவான பார்வைக்கு வருவோம்..டென்மார்க்கில் தமிழ் கலை, கலாச்சார வளர்ச்சிகள் பற்றிய தங்களின் பார்வை என்ன ?
சிறீதரன் : டென்மார்க் சிறிய நாடாக இருந்தாலும் தரமான தமிழ் அறிஞர்கள் நிறைந்த நாடு என்பதை மறுக்க முடியாது. டென்மார்க்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாக்கள் இங்கு கலை வளர்ந்த வேகத்திற்கு அதி சிறந்த எடுத்துக்காட்டு. அன்று தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றிய அத்தனைபேருடனும் எனக்கு தொடர்புண்டு. டென்மார்க்கின் அனைத்துப் படைப்பாளிகள், கலைஞர்களுடனும் எனக்கு நெருங்கிய நட்பும் உண்டு. நாம் ஒருவரை ஒருவர் வளர்ப்பதிலும், ஒருவருக்கு மற்றவர் ரசிகராக இருப்பதிலும் பெருமையடைகிறோம். டென்மார்க்கில் கடந்த பத்து ஆண்டுகளாக கலை வளர்ச்சியில் நிலவிய தேக்கம் நீங்கி இப்போது மறுபடியும் புது மெருகு அடைய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு அலைகள் பத்தாண்டு விழா நிகழ்வுகள் ஒரு சான்றாகும். மேலும் மறுபடியும் முத்தமிழ் விழா வரவிருப்பதாக அறிகிறேன், அதற்காக மகிழ்கிறேன். கலைகளுக்கும் அலைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. கலைகளும் விழுந்து எழுந்து சென்றால்தான் அலைகள் போல அழிவடையாமல் இருக்கும். கலைகளை தட்டையாக வைத்திருந்த நாடுகளில் வளர்ச்சி வீழ்ச்சி என்ற பேச்சில்லாமல் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். டென்மார்க்கில் மட்டும் அப்படி இல்லை என்பது பெருமைதரும் விடயமாகும்.
கேள்வி : நமது கேள்விகளுக்கு இதுவரை பதில்களை வழங்கினீர்கள் இனி கேள்விகள் இல்லாமலே உள்ளத்தைத் திறக்கும் உங்கள் நேரமாகும்..
சிறீதரன் : கடந்த பத்தாண்டுகளாக டென்மார்க்கில் அலைகள் ஆற்றிவரும் பணிகளை பாராட்ட வேண்டுமென மனது ஆவலடைகிறது. டென்மார்க்கிற்குரிய செய்திகளை டென்மார்க் வாழ்வுக் கோணத்தில் இருந்து தருவதைப் போன்ற உயிர்ப்பை மற்றய இடங்களில் இருந்து வரும் ஊடகங்களால் பெற முடியாது. நமக்கென்று ஒரு வாழ்க்கை, நமக்கென்று ஓர் ஊடகம் இப்படி நினைக்கும்போது நமது தனித்துவம் பிரகாசமடைகிறதல்லவா…?
கலை மக்களை பண்படுத்த வேண்டும். அதில் பக்கச் சார்பு இருத்தல் கூடாது, வேண்டியவர் வேண்டாதவர் பார்த்தால் அவ்வளவுதான் கலையின் ஜீவன் போய்விடும். பின் எலும்புக் கூடுகளை கயிற்றில் கட்டி இழுத்து ஆட்டுவித்தது போல ஆடவைக்க வேண்டியதுதான். கலைஞன் கயிறுகட்டி இழுத்து ஆட்டுவிக்கும் எலும்புக் கூடாக இருத்தல் கூடாது…
மாற்றுக் கருத்தாளர் என்று புறந்தள்ளுவதல்ல அனைவரையும் உடன்பாடான இடங்களில் ஒற்றுமைப்படுத்துவதே உண்மையான கலைத்துவ ஒற்றுமையாகும். கலையில் ஒற்றுமை வந்தால் அது வாழ்வை ஒற்றுமையாக்கும்.
ஆன்மீகம், இலக்கியம் போன்றவற்றை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.
உலகளாவிய புங்குடுதீவு ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும், அதன் மூலம் செய்யப்படாத பல நற்பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது.
நன்றி: www.alaikal.com