நாடெங்கிலும் உருவாக்கப்பட்ட ஆங்கிலப்பாடசாலைகளில் புங்குடுதீவு மகா வித்தியாலயமும் ஒன்றாகும். இலவசக் கல்வியின் தந்தையான அன்றைய கல்வி அமைச்சர் கௌரவ சி. டபிள்யு டபிள்யு கன்னங்கரா அவர்களாலும், தீவுப்பகுதியின் பிரதிநிதியாகவும், அரசங்கசபைத் தலைவராகவும் விளங்கிய சோ. வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களாலும் 17-01-1946 இல் அரசினர் கனிஷ்ட ஆங்கில வித்தியாலயம் (Government Junior English) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்றைய புங்குடுதீவு மகா வித்தியாலயம்.
எமது கிராமத்தில் ஆங்கிலப்பாடசாலையை உருவாக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்களிலே அன்றைய கிராமத்தலைவர் திருவாளர் வ.பசுபதிப்பிள்ளை, திருவாளர் ஆ. சரவணமுத்து உடையார், திருவாளர். கு.யோகுப்பிள்ளை, திருவாளர். க. அம்பலவாணர் ஆகியோர் காலத்தால் போற்றப்படவேண்டியவர்கள்.இவ் வித்தியாலயத்தை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டதனால் 17-01-1946 இல் புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயத்தின் ஒரு பகுதி கட்டிடத்தில் 150 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.