ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
மு. தளையசிங்கம்

முன்னுரை

தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய கால எல்லையுள் இயங்கிய ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை ஆய்வதுபோல அது தோற்றினும், முன்னுக்கும் பின்னுக்குமாக அது இலக்கியத்தை ஒட்டிய சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றுப் பார்வையில் எடுக்கும் பாய்ச்சல்கள் மிகப் பெரிதாய் விரிகின்றன. ஆட்களை வைத்துக்கொண்டு போக்குகளைக் காட்டியும் போக்குகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்தும் ஒன்றோடொன்று பின்னியும் பிரித்தும் ஆக்க ரீதியான இலக்கிய விமர்சனமாகவும் இலக்கியமாகவும் ஓர் சமூகத்தின் மனோ அலசலாகவும் மாறி மாறித் தன்னைக் காட்டும் இவ்வாக்கம் தமிழில் தோன்றிய இவ்வகை இலக்கியங்களுள் தனியானது.

விமர்சக விக்கிரகங்கள் என்ற கட்டுரைத் தொடர் மூலம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களையே ஆக்க ரீதியில் விமர்சித்த எழுத்தாளனாய் விமர்சனத்துறையில் இறங்கிய மு.த. மூன்றாம் பக்கம், முற்போக்கு இலக்கியம் ஆகிய விமர்சனங்கள் மூலம் தனக்கெனத் தனி முத்திரை பதித்து தனக்கே உரிய நடுநிலை நோக்கில் எல்லாப் போக்குகளுக்குமுரிய நல்லதைக் கறந்தும் கெட்டதைக் கண்டித்தும் ஒரு மூன்றாம் பக்கப் போக்கை உருவாக்கி, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் அதன் உச்சத்தையே தொட்டுவிடுகிறார். சுருங்கச் சொன்னால் ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை தர்க்க ரீதியாக வளர்த்துக் காட்டுபவர் வராகவே உள்ளார்.

இவர் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யை எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் கூட இலக்கிய உலகின் விமர்சகர்கள் என்று பெயர் எடுத்துக்கொண்டவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் எழுதவில்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு மார்க்சீய விமர்சகர்களாய் இவர்கள் இருந்தபோதும் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்றுக் கண்கொண்டு இலக்கிய ஆய்வுகள் செய்வதும் இவர்களுக்கு அந்நியமானதாகவே இருந்தது. ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யின் வெளிப்பாடு. இத்தகைய பார்வைக் குறைவுகளுக்கும் நொண்டித்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைந்தது.

‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ மூலம் மு.த. மிக ஆழமான சில விஷயங்களைத் தனக்கே உ¡¢ய தெளிவோடு மிக எளிதாக விளக்கிக் காட்டுகிறார்.

முதலாவதாக, சரித்திர ஓட்டம் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களுக்கு எதிராக, சந்தர்ப்ப விபத்தும் சரித்திரம் செய்கிறது என்பதை நிரூபிக்கிறார்.

இரண்டாவதாக, முன்னதன் பெறுபேறாய் ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி வேறாக இருக்க, அக்கால இலக்கிய உலகு பிரதிபலிக்கத் தொடங்கிய ‘முற்போக்கு வாதம்’ வேறானதாக அமையும் பிறழ்வுபற்றி விளக்குகிறார். அதாவது அரசியலில் ஈழத் தமிழர்கள் அனைவரும் தமக்கு சமஷ்டி ஆட்சிமுறையே தேவையென்று ஓரணியில் நின்று முன்வைக்கும் கோரிக்கைக்கு எதிராக, ‘முற்போக்கு இலக்கியம்’ பிரதிபலித்த ஒன்றையாட்சி முறையும் அதற்குரிய தேசிய வாதமும் நிற்கின்றன என்ற விளக்கம். அதோடு மான்ய முறையை விட்டகலாத விவசாயப் பொதுப் பின்னணியில் ஆலை – தொழிலாளி – முதலாளி போராட்டம் என்னும் கற்பனைகள். அதனால் அளவுகெட்டுப் பிரதிபலிக்கத் தொடங்கிய பொதுப் பின்னணி.

இவற்றை மு.த. மிக அழகாக விளக்கிச் செல்கிறார். இவற்றின் விளக்கங்கள் அவர் காட்டும் ஈழத்தின் பொருளாதார, சமூக, அரசியல் பின்னணி ஆய்வில் தானாகவே வந்து விழுகின்றன.

ஆனால் ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரியாதவர்கள் இதைச் சுவைக்கவோ தன் முக்கியத்துவத்தை உணரவோ முடியாமல் போகும் என்பதும் உண்மையே. அதனால் அதுபற்றியும் சுருக்கமாக சில விளக்கங்களை தருவது அவசியமே. முக்கியமாக ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்காத தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு இது உதவும் என்பதால். (ஈழத்து அரசியபற்றி எதுவும் தெரியாமலேயே அநேக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இங்கு வந்த தமிழ்நாட்டெழுத்தாளர் மூலமே அறிந்துள்ளோம்.)

இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.)யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (S.L.F.P.)யுமே, இது காலவரை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. U.N.P. முதலாளித்துவ, அமெரிக்கச் சார்புடையதாகவும் S.L.F.P. அதற்கு எதிரானதாகவும் காட்டிக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவும் காட்டிக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேஷம் மேலோங்கலுக்கு, பின்னதே அதிக காரணமாய் இருந்துள்ளது.

1956ல் முதல்முதலாக S.L.F.P. பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆட்சிக்கு வந்தபோது 24 மணித்தியாலத்துக்குள் ஆங்கிலத்துக்குப் பதில் சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியோடுதான் வந்தது.

தெற்கில் தன் எழுச்சி, வடக்கில் அதன் எதிர்விளைவாக தமிழ் மக்களிடையே இதுகாலவரை ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் U.N.P. யை அடிவருடிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் இயங்கிய தமிழரசு கட்சி என்றழைக்கப்படும் சமஷ்டிக் கட்சியை பெரும் வெற்றிபெறச் செய்தது. தெற்கில் தனிச்சிங்களம் என்றால் வடக்கில் எல்லாம் தமிழ் இயக்கம் என்ற எதிர்க்கோஷம்.

இச்சந்தர்ப்பத்தில் இடதுசாரிக் கட்சிகள் பொருளாதார நோக்கிலிருந்து முன்வைத்த தீர்வுகள் வடக்கிலும் தெற்கிலும் செல்லுபடியாகவில்லை. (இன்றும் அதுவே உண்மை.) கூடவே சமஷ்டி ஆட்சியின் தேவையை இடதுசா¡¢கள் உணர்ந்தபோதும், பலவித அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அதைப் புறக்கணித்து ஒற்றை ஆட்சி தேசியம் பேசி, தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை நசுக்கினர். இதுவே பொதுப் பின்னணி.

இந்தப் பின்னணியில் ஏதோ சோசலிசத்தை நோக்கிய நாடுகளில் நடைபெறுவதுபோல், எப்படி ஆலைகளும், முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் சுலோகங்களும் எழுந்தன? பொதுப் பின்னணி வேறாக இருக்க, எப்படி ஒற்றை ஆட்சியையும் தேசிய வாதத்தையும் அழுத்தும் ‘முற்போக்கு இலக்கியம்’ முன்னுக்கு வந்தது?

இதைத்தான் மு.த. சந்தர்ப்ப விபத்து சரித்திரம் செய்கிறது என்கிறார். அதாவது க. கைலாசபதி, தினகரன் ஆசிரியராக வந்த சந்தர்ப்ப விபத்தால் வந்த விளைவு என்பதை விளக்குகிறார். அதிலிருந்து பொதுப் பின்னணி அளவுகெடத் தொடங்கியதோடு அதன் தொடர் விளைவாக பல அளவுகள் கெடத் தொடங்கின. வெளியிலிருந்து பார்ப்போருக்கு இது பெரும் மாறுபட்ட விளக்கத்தையே தரும் என்பதை மு.த. விளக்கிச் செல்கிறார்.

மு.த.வின் நோக்கம் தோற்றங்களைக் கிழித்து உண்மையைக் காட்டுவதே. அது விமர்சனமாய் இருந்தாலும் சரி, ஆக்க இலக்கியமாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம் உண்மை நிலைநாட்டப்படலே மு.த.வின் நோக்கம். அது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யிலும் செவ்வனவே நடைபெறுகிறது. தனக்கு மாறான இலக்கியப் போக்கைக் கொண்டெழுந்த பொதுப் பின்னணி எப்படி ஈற்றில் தனக்குரிய ஒன்றைக் கண்டடைகிறது என்பதை விமர்சனப் போக்கில் கதை போலவும் சுவைபட மு.த. விளக்கிச் செல்கிறார். இந்த விளக்கத்தில் மாறுபட்டுக் கிடந்த ஒவ்வொன்றும் தமக்குரிய இடத்தில் வந்து நின்று உண்மைக்கு வழிவிடுகின்றன.

இக்கட்டுரைத் தொடர், திரு ஆர்.எம். நாகலிங்கம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, இலங்கை கண்டியிலிருந்து சில ஆண்டுகள் வெளிவந்த ‘செய்தி’ என்ற பத்திரிகையில் 26.1.64 முதல் 17.1.65 வரையிலான ஓராண்டு காலம் வாரா வாரம் (அநேகமாக) 33 பகுதிகளாகப் பிரசுரமானது.

கட்டுரைத் தொடர் வெளிவந்த செய்தி இதழ்கள் சில கைவசம் இல்லாத நிலையில், இலங்கை தேசியக் சுவடிகள் திணைக்களத்திலிருந்து அவற்றினை பிரதி எடுத்துத் தந்த நீர்கொழும்பு செல்வன் ப. விக்னேஸ்வரனுக்கும் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் நாலுநாட்கள் செலவிட்டு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு, தேவைப்பட்டதிருத்தங்களைச் செய்ததோடு செம்மையான கையெழுத்துப் பிரதியைத் தயாரித்துதவிய நண்பர் ஜீவகாருண்ணியத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

மு.பொன்னம்பலம்
சு. வில்வரத்தினம்

——————————————————————————–

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
மு. தளையசிங்கம்

1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி:

1956 – 1963 எல்லை. பலருக்கு 1956ஆம் ஆண்டு நம்நாட்டுச் சரித்திரத்தில் மிக முக்கியம் வாய்ந்தது. பலவித சரித்திர ஓட்டங்களைப் பல துறைகளில் அவிழ்த்துவிட்ட ஆண்டு அது. பல பல அச்சங்கள், பல பல இலட்சியங்கள், அப்படிப் பல ரகம் அவை. அந்த ஓட்டங்களின் வகைகளையும் ஒன்றையன்று முட்டிய அவற்றின் தாக்கங்களையும் தன்மைகளையும் பின்பு ஆராயலாம். இப்போதைக்கு நம் ஈழத் தமிழிலக்கியத்தில் ஏற்பட்ட புதியதோர் ஊற்றும், சலசலப்பும், பிரவாக வேகமும் அவற்றுள் ஒன்று என்பதைக் கவனித்துக்கொண்டால் போதும். மற்றைய ஓட்டங்களைப்போல் அதுவும் ஒரு புதிய ஓட்டம்; இன்னும் முடியவில்லை; ஓடிக்கொண்டேருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் அது தன்னை நிச்சயமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆரம்ப சலசலப்பு. அதனால், இன்னும் சிதறலாகவே ஓடுகிறது. அதற்குரிய கால முத்திரை பதித்த திசையையும் படுகையையும் இனித்தான் அது கண்டுபிடிக்க எவ்வளவோ காலம் இருக்கிறது. முடிவு என்பதே ஏற்படுமா? அது வேறு பிரச்சினை, இப்போதைக்குத் தேவையில்லை. ஆனால், ஆரம்பம் நிச்சயம். அது 1956. இன்னும் இளமையைக் கூட எட்டவில்லையெனினும் ஏறக்குறைய ஏழாண்டு ஓடிவிட்டிருக்கிறது.

1956, ஈழச் சரித்திரத்தில் ஓரு புதிய ஓட்டத்தின் ஆரம்பம். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரையில் அது 1948ஐ விட முக்கியம் வாய்ந்தது. ஏன், அவர்களின் கண்கொண்டு பார்த்தால் உலக சரித்திரத்தின் 1452 கூட அதற்கு முன்னால் நிற்க முடியாது என்று சொல்லலாம். எனவே, இலக்கியத்திலும் ஒரு புதிய ஓட்டம். முன்பு வந்துபோன ஆறுமுக நாவலர் காலம், பின் வந்துபோன ஈழகேசரிப் பொன்னையா காலம் என்பவை எப்படியோ அப்படி இதுவும் ஒன்று. ஆனால் அவற்றை விட இது பரவலானது, ஆழமானது, அதோடு நீண்டு செல்லக்கூடியது. தமிழ் நாட்டில் மணிக்கொடிக் காலம் என்று ஒன்று எப்படியோ அப்படி 1956க்குப் பின் இங்கு.

அப்படியென்றால் பகீரதன் சொன்னது சரியா? பத்தல்ல இருபது ஆண்டுகளுக்குக் கூடுதலாகவா நாம் பிந்திப் போய்க்கொண்டிருக்கிறோம்?

இல்லை, இது வேறு. பகீரதனுக்குப் பைத்தியம். புதுமைப் பித்தனுக்கும் பாரதிக்கும் குழி தோண்டுபவர்களுக்கு, அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பேச என்ன உரிமை இருக்கிறது. இன்றைய நம் தரத்தை ஒப்பிடுபவர்கள் நம் இன்றைய உடன் நிகழ்காலத் தரங்களை ஒப்பிட்டுத்தான் அளவிடவேண்டும். இல்லாவிட்டால் சங்ககாலப் பாடல்களையும், சோழர் காலக் காப்பியங்களையும் வைத்தே நம்மை ஒதுக்கி விடலாமே! எனவே, இன்றைய உடன் நிகழ்காலத் தரந்தான் முக்கியம். அதை வைத்து ஒப்பிட்டால் நாம்தான் இருபது வருடங்கள் முன்செல்லத் துடிக்கிறோம். அது முக்கியம். பரவலாகப் பார்த்தால் அவர்கள் தூங்குகிறார்கள். நாம்தான் துடித்துக்கொண்டு நிற்கிறோம். இனி, ஓட்டம் நம்முடையதுதான். பாரதியும் புதுமைப்பித்தனும் விட்டடத்திலிருந்து நாம்தான் புதுமையையும், புரட்சியையும் மரபையும் இனி வர்ப்பவர்கள். மெளனியும் சி.சு. செல்லப்பாவும் மற்றவர்களுங்கூடனி நம் இயக்கத்தின் நிழலில்தான் அளக்கப்படுவார்கள். இங்கு எனக்குப் பிரியமான ஒரு உவமையைக் கையாள விரும்புகிறேன். அல்பிரட் காஸ.¢ன் என்ற அமெரிக்க விமர்சகர் இப்போக்னர், எமிங்வே கால இலக்கியங்களைப் பற்றிக் கூறும்போது ஆண்மையையும் வீரத்தையும் எதிர்பார்க்கும் ஒரு விரகதாபமுள்ள பெண்ணைப் போல் ஐரோப்பாவும் இனி அமெரிக்காவை நோக்கித் தான் புதிய வீரமும் ஆண்மையுமுள்ள இலக்கியத்துக்காக ஏங்கிக் கிடக்கும் என்று உவமித்தார். தமிழ்நாடும் அப்படியான இலக்கியத்துக்காக இனி நம்மைத்தான் எதிர்பார்க்கும். அதற்கு அறிகுறியாக 1956க்குப் பின் வந்த வளர்ச்சியே நிற்கிறது.

ஐம்பத்தாறில் ஆரம்பித்த புதிய போக்கின் முடிவு எப்வோ வரும் என்று சொல்வதற்கில்லை. இருந்தும் 63ன் முடிவில் இந்த இடைக்கால வளர்ச்சியைப்பற்றி ஒரு கணக்கெடுப்பை அவசியமாக்குதற்கு ஒரு விசேஷக் காரணமும் இல்லாமலில்லை. அதே காரணம் ஆரம்ப எல்லையான 1956க்கும் அதிக அழுத்தம் கொடுக்கிறது. அதுதான் க. கைலாசபதியின் வருகையும் 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போய் இருப்பதால் ஏற்பட்டுள்ள தற்காலிகமான பிரிவும். 1957ல் கைலாசபதி ‘தினகரன்’ ஆசிரியரானார். அன்றுதொட்டு வளர்ந்த அவரது செல்வாக்கு இன்றுவரை நம் இலக்கிய உலகில் பலவித விளைவுகளை உண்டாக்கும் வகையில், நிழல் விரித்து, சிலசமயம் மிகப் பயங்கரமாகப் பேய் நிழல் விரித்து நிற்கிறது. 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போன பின்பும் அது தொடர்ந்து நிற்கவே செய்கிறது. என்றாலும், அவரது தற்காலிகமான பிரிவைச் சாட்டாக வைத்து நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியோடு சேர்த்து அவரது செல்வாக்கின் விளைவுகளையும் கணக்கெடுப்பது நியாயமாக்குந்தானே? நான் கைலாசபதியை வழிபடும் ஓர் பேர்வழியல்ல. என்றாலும், நேர்மையான ஒரு இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்படவேண்டுமோ அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பவனுமல்ல. கைலாசபதி தோற்றுவித்த போக்குக்கும் அவரது இலக்கிய விமர்சனப் பார்வைக்கும், இந்தப் பாரபட்சமற்ற, புறக்கணிக்காத, நியாயமான கணக்கெடுப்பு என்ற என் கொள்கைக்குமிடையே மைல் கணக்கான தூரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்காக நாமும் திருப்பி அதே வகையில் ஒரு எதிர்ப்புறக்கணிப்புக் காட்டுவதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஏழாண்டு இலக்கியப் போக்கோடு கைலாசபதியின் செல்வாக்கும்- அது பலரக விளைவுகளை உண்டாக்கினாலும்- பின்னிக் கிடக்கிறது என்பதே என் எண்ணம். எனவே 1956-63 எல்லைக் கணக்கெடுப்புக்கு என்னைப் பொருத்த வரையில் இரண்டு வித முக்கியத்துவம் உண்டு. நம் லக்கியப் பொதுப்போக்கை அளவிடும் அதே சமயம் மறைமுகமாகக் கைலாசபதியின் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் அளவிடும் ஒரு இரட்டை முயற்சி.

பின்னணியும் ஒட்டங்களும்: இவை, சரித்திர சமூகவியல் சம்பந்தப்பட்டவை. இவற்றைப் படித்துவிட்டு இந்தளவு நீட்டுக்கு இவற்றைப்பற்றி எழுத வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். அது அவரவர் அபிப்பிராயம். என்னைப் பொருத்தவரையில், இவை எல்லாவற்றையும் எழுதினால்தான் புதிய பரம்பரையின் முக்கியத்துவத்தை அதற்குரிய சரியான பின்னணியில் நிறுத்திக் காட்டலாம் என்று தோன்றுகிறது. இயன்றளவு என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடுநிலை வகிக்கும் ஓர் சரித்திர சமூகவியலாசிரியா¢ன் கண்கொண்டேவற்றைக் குறிக்கிறேன். ஆனால், என்னுள் கிடக்கும் இலக்கியாசிரியன் மற்றவற்றை முந்திக்கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டான் என்று நிச்சயமாகச் சொல்வதற்குமில்லை.

நான்கு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட மேற்கத்தைய ஆட்சியின் முக்கிய பாதிப்புகளில் ஒன்று நம்மை, ஈழத்தமிழர்களை, வெறும் இயந்திரத் துரைத்தனக்காரர்கள் ஆக்கிய தன்மையாகும். முக்கியமாக ஆங்கில ஆட்சியின் பாதிப்பு அந்த வகையானது. போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளை விட ஆங்கிலேய ஆட்சி சிறந்ததுதான். அதிக சுதந்திரம், அதிக வளர்ச்சி, அதிகக்கல்வி என்று பொதுவாக ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் அதிகமாகக் கிடைக்கத்தான் செய்தன. ஆனால் அதுதான், நாமும் நம் பாடும் என்று ஒருவிதச் சோம்பலான அசிரத்தையோடு நம் பாட்டில் நாம் அடங்கி நடப்பதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. அந்தச் சோம்பலுக்கம் அசிரத்தைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் தந்த ஜனநாயக முறையும் இருந்தது. சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திப் போராடும் நிலை நமக்கு ஏற்படவில்லை. போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்த ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் நாம் ஆபத்தோடு சதா வாழ்ந்திருப்போம். அதனால் ஆள்பவர்களிடம் சர்வாதிகாரம் இருக்கின்ற அதே சமயத்தில் மக்களிடம் சோம்பலும் அசிரத்தையும் கலவாத ஒரு புரட்சி மனப்பான்மையும் கடைசி அடியோடிய நிலையிலாவது இருந்திருக்கும். ஓர் அங்கோலா அல்லது அல்ஜீரியாவின் நிலை. ஆனால், ஒல்லாந்தாரோ, போர்த்துக்கேயரோ தொடர்ந்து இருக்கவில்லை. பின்பு வந்த ஆங்கிலேயரும் இந்தியாவில் நடந்து கொண்டதுபோல் இங்கு நடந்துகொள்ளவில்லை. நம்மை அடக்குவதற்குப் பதிலாக அவர்கள் இந்தியர்களை அடக்கினார்கள். நமக்குப் பதிலாக இந்தியர்கள் போரிட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு கோல்புரூக்கும், டொனமூரும், சோல்பரியும் கேட்காமலே வருபவர்கள் போலவே வந்தார்கள். வாக்குரிமையும் மற்ற உரிமைகளும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களாகத் தருவன போலவே கிடைத்தன. அதனால், நம்மிடையே ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யம் தூண்டப்படவில்லை. புரட்சிப் போக்கு வளர்க்கப்படவில்லை. காலத்தையுணர்ந்த ஒரு புதிய பார்வை நேரவில்லை. எல்லா இனங்களுக்குமிடையே ஒரு இறுகிய ஒற்றுமை பிறக்கவில்லை. காந்தி படங்களும் நேரு படங்களும் இனவேலியைத் தாண்டி இந்தியாவில் எல்லா வீடுகளிலும் தொங்கியதைப்போல் இங்கு ஒரு ராமநாதனும், ஜயதிலகாவும், அருணாசலமும், செனநாயகாவும் தொங்கவில்லை. தமிழர்களின் வீடுகளில் கூட ராமநாதனின் படம் தொங்கவில்லை. ராஜாஜி, காந்தி, நேரு, சுபாஷ் போன்றவர்கள்தான் தொங்கினார்கள். கடைசியில் புரட்சி மனப்பான்மையையும், ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யத்தையும், உரிமைகளைக் கோரும் உணர்ச்சியையும், அடுத்த நாடான இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வர்கள் இங்கு சோம்பலையும் அசிரத்தையையும் துரைத்தனத்தையும்தான் வளர்த்தார்கள். படித்ததெல்லாம் உத்தியோகத்துக்காக. பாடுபட்டதெல்லாம் பொருளீட்டுவதற்காக. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதனால் நடந்துகொள்ள விரும்பவில்லை. ஆங்கிலேயரை அபிநயித்த ஓர் துரைத்தனந்தான் தமிழர்களிடையே அறிவாளி வர்க்கமாக இருந்தது. அதனால், அரசியல் சமூக கலாச்சார நிலையைப்பற்றி அந்த அறிவாளி வர்க்கத்துக்குக் கவலையில்லை. யார் ஆண்டால் என்ன? எப்படியோ இருக்கிற நிலைக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் போதும். அதோடு எல்லாம் நல்லாக வரும் என்ற சோம்பல் நம்பிக்கை. எனவே நல்லாகத் தூங்கினார்கள். ஆமாம் அதைத் தூக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். சமூகக் கலாச்சாரத் தூக்கம்.

1948உம் வந்தது.

சுதந்திரம் வந்தது. ஆனால், தமிழனுக்கு அதன் வித்தியாசம் தெரியவில்லை. (சிங்களவர்களுக்கும் ஓரளவு அப்படித்தான்) எந்த மாற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை. காரணம், துரைத்தனத்துக்கு இன்னும் ஆபத்து ஏற்படவில்லை. மற்றவர்களின் பிழைப்புக்கும் வழி தாராளமாகவே இருந்தது. ஹர்த்தால் எதுவும் வந்து அவர்களையும் இன்னும் கண்திறக்கச் செய்யவில்லை. இன்னும் தூக்கம். சுதந்திரம் வந்த வித்தியாசம் தெரியவில்லை.

அப்படியென்றால் ராமநாதன், அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம் எல்லாரும் எப்படி வந்தார்கள்?

அதையும் விளக்க வேண்டும்.

அவர்கள் தனிப்பட்ட தலைவர்கள். மக்களின் பொதுவான விழிப்பைப் பிரதிபலிக்காதவர்கள். விழிப்பு இன்னும் ஏற்படவில்லை. பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கைம்பது கூடமக்களின் உண்மையான அக்கறை கலவாத ஒரு கோரிக்கை. மக்களின் உண்மையான அரசியல் அக்கறை அதற்குப் பின்னணியாக நிற்கவில்லை. மக்களுக்கு அரசியல் அக்கறை இன்னும் வளரக்கூடல்லை. இருந்ததெல்லாம் வெறும் மந்தை மனப்பான்மை கலந்த ஒரு தலைவர் வழிபாடுதான். பொன்னம்பலம் செய்ததெல்லாம் தன் சொந்தத் திறமையிலும் துணிவிலும் இருந்த நம்பிக்கையினாலும் கர்வத்தினாலுமே ஒழிய மக்கள் நலனிலும் உரிமைகளிலுமிருந்த அக்கறையினால் அல்ல. மக்கள் அவா¢டம் காட்டிய அபிமானமும் வெறும் வழிபாடே ஒழிய தங்கள் நிலையையும் நலனையும் தேவைகளையும் உணர்ந்த முயற்சியினால் வந்த தெரிவு அல்ல. எப்படி தமிழர்களின் அறிவாளி வர்க்கம் ஆங்கிலேயரை அபிநயித்து அவர்களிடமிருந்து ‘சபாஷ்’ வாங்கும் துரைத்தனமாக மாறியதோ அப்படியேதான் அரசியலிலும் தமிழர்கள் காலத்தின் நிலையையும் தேவையையும் உணராது வெறும் பேச்சு வன்மையாலும், தோற்றத்தாலும், பழகும் முறையாலும் ‘சபாஷ்’ வாங்கும் ஒரு தலைவரை வழிபட்டார்கள். அதனால், ஐம்பதுக்கைம்பது கேட்ட தலைவரால் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைய முடிந்தது. பிரஜா உரிமைச் சட்டத்துக்கும் குறுகுறுப்பில்லாமல் கை உயர்த்த முடிந்தது. அவரை அனுப்பிய மக்களும் அவற்றில் எந்த ஆபத்தையும் காணவில்லை. செல்வநாயகம் பிரிந்ததும், சமஷ்டிக் கட்சி தோன்றியதுங் கூட பொதுவாக அவர்களுக்கு ஒரு சினத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். நிம்மதியாகக் தூங்கவிடாமல், பேச்சு வன்மையாலும் தோற்றச் சிறப்பாலும் தாலாட்டப்பட்டுத் தூங்கிவிடாமல், நிலையை உணர்த்திச் செயலுக்கு அழைக்கும் குரல் அவர்களுக்கு ஒரு தொந்தரவாகத்தான் பட்டிருக்க வேண்டும். எனவே சினம். அம்முறை காங்கேசன்துறையில் செல்வநாயகத்தின் தோல்வி, அதன் அறிகுறி.

அந்த நிலையில் இடதுசாரிகள் என்ன செய்தார்கள்? ………
Continue Reading at http://noolaham.net/project/01/01/01.htm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here